மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றைக் கட்டண நிலுவைத்தொகையான 53,000 கோடி ரூபாயைச் செலுத்த முடியாமல் இந்தியாவில் தனது வணிகத்தை இழுத்து மூடக்கூடிய சூழலில் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை 2,500 கோடி ரூபாயை மட்டுமே அந்த நிறுவனத்தால் செலுத்த முடிந்தது.

மீதமுள்ள தொகையைச் செலுத்துவதற்கு அவகாசம் கொடுக்கவேண்டுமென்றும், கடுமையாக நிர்பந்திக்கக்கூடாதென்றும் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே, அந்த நிறுவனம் இந்தியாவில் தனது வணிகத்தை நிறுத்திக்கொள்ளுமா என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
வங்கிகளுக்கு பாதிப்பு
வோடஃபோன் - ஐடியா நிறுவனம், ஏற்கெனவே அலைக்கற்றை ஏலத்தில் கலந்துகொண்டபோது வங்கிகளிலிருந்து பெறப்பட்ட தொகையில் ரூ.88,530 கோடி வரை திரும்பச்செலுத்த வேண்டியுள்ளது. அந்தத் தொகையோடு தற்போதுள்ள நிலுவைத்தொகையான ரூ.53,000 கோடியையும் சேர்க்கும்போது மொத்தம் ரூ.1.41 லட்சம் கோடி செலுத்தவேண்டியுள்ளது. எனவே, வோடஃபோன் இந்தியா தனது வணிகத்தை நிறுத்திக்கொண்டால் வங்கிகளுக்கும் அரசுக்கும் பெரிய இழப்பாக அமையக்கூடும். இதன்மூலம், வோடஃபோன் நிறுவனத்துக்குப் பெருமளவு கடன் வழங்கிய எஸ்.பி.ஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் பி.என்.பி வங்கிகள் பாதிக்கப்படும்.
வோடஃபோன் நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்திக்கொண்டால் சுமார் 10,000 பணியாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கக்கூடும்!
தொலைத்தொடர்பு சேவையில் பாதிப்பு
வோடஃபோன் - ஐடியா நிறுவனத்துக்கு இந்தியாவில் மொத்தம் 33.6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கேற்ப, வோடஃபோன் நிறுவனத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீடும் 923 மெகாஹெட்ஸ் ஆக உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அலைக்கற்றை ஒதுக்கீடு 866 மெகாஹெட்ஸ் ஆகும். ஜியோ நிறுவனத்தின் அலைக்கற்றை ஒதுக்கீடு 553 மெகாஹெட்ஸ் ஆக உள்ளது. எனவே, வோடஃபோன் - ஐடியா நிறுவனம்தான் இதில் முன்னணியில் உள்ளது.
அந்த நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டால் இவர்கள் அனைவரும் எஞ்சியுள்ள இரண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லுக்கு மாறக்கூடும். ஆனால், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கக்கூடிய கட்டமைப்பு மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கொண்டிருக்கவில்லை. எனவே, இந்த இரண்டு நிறுவனங்களும் இதற்கென கூடுதல் முதலீட்டை ஒதுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் நிறுவனம் ஏற்கெனவே நிலுவைத்தொகையைச் செலுத்தவேண்டிய சிக்கலுக்குள் இருப்பதால் கூடுதல் முதலீடு செய்வது கடினமே.

இதன்காரணமாக தற்போது தங்களிடம் உள்ள கட்டமைப்பை மட்டுமே பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக்கூடும். அதிக வாடிக்கையாளர்களுக்குத் தொலைத்தொடர்பு சேவையைப் பகிர்ந்தளிக்கும்போது தொலைபேசி சேவையின் தரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்பேசி மற்றும் இணையத்தொடர்பு கிடைப்பதில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இனி அது மேலும் அதிகரிக்கக்கூடும்.
பணியாளர்கள் வேலையிழப்பு
நிலுவைத்தொகையைச் செலுத்துவது தொடர்பான கெடுபிடி குறித்து வோடஃபோன் நிறுவனத்தின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்ஜி கூறுகையில், ``வோடஃபோன் நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்திக்கொண்டால் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கக்கூடும்'' என்றார்.
2019, மார்ச் மாதக்கணக்கீட்டின்படி அந்த நிறுவனத்தில் சுமார் 13,520 பேர் நேரடிப் பணியாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வேலையிழப்பைச் சந்திப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே தொலைத்தொடர்புத்துறை வருமான இழப்பில் இருக்கும்சூழலில், நிலுவைத்தொகையைத் திரும்பச்செலுத்துவதில் மத்திய அரசு நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

அலைக்கற்றை ஏலத்தில் இழப்பு
நடப்பு ஆண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெறவுள்ளது. அதற்கான போட்டியிலிருந்து வோடஃபோன் - ஐடியா நிறுவனம் விலகிக்கொள்ளும்பட்சத்தில் அதிக அளவுக்கு ஏலம் போவதற்கும் வாய்ப்பிருக்காது. இது தொலைபேசித்துறைக்கு இழப்பாகவே அமையும். அதேபோல, தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே களத்தில் இருப்பதால், ஜியோ தனது அசுர பலத்தால் ஏர்டெல்லுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பி.எஸ்.என்.எல் ஏற்கெனவே தனது பெரும்பாலான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதன்மூலம், சேவையைச் சுருக்கிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வோடஃபோன் - ஐடியா நிறுவனம் தனது வணிகத்தை இந்தியாவில் நிறுத்திக்கொண்டால் அதன் பாதிப்பு வாடிக்கையாளர்களின் சேவையிலும் பெருமளவு எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.