Published:Updated:

``இந்தி தெரிந்தால் பெரிய அளவில் பிசினஸ் செய்யலாம்’’ - மதுரை ‘யங் இந்தியன்ஸ்’ கூட்டத்தில் பேச்சு...!

'யங் இந்தியன்ஸ்' கருத்தரங்கு
News
'யங் இந்தியன்ஸ்' கருத்தரங்கு ( S.Chandran )

இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியான ‘யங் இந்தியன்ஸ்’ சார்பில் நடத்தப்பட்ட இவால்வ் 2022 (Evolve 2022) நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பல தொழில்முனைவோர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

``இந்தி தெரிந்தால் பெரிய அளவில் பிசினஸ் செய்யலாம்’’ - மதுரை ‘யங் இந்தியன்ஸ்’ கூட்டத்தில் பேச்சு...!

இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியான ‘யங் இந்தியன்ஸ்’ சார்பில் நடத்தப்பட்ட இவால்வ் 2022 (Evolve 2022) நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பல தொழில்முனைவோர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Published:Updated:
'யங் இந்தியன்ஸ்' கருத்தரங்கு
News
'யங் இந்தியன்ஸ்' கருத்தரங்கு ( S.Chandran )

இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ.யின் துணை அமைப்பான ‘யங் இந்தியன்ஸ்’ தொழில்முனைவோர் அமைப்பு மதுரையில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.  ‘இவால்வ் 2022 (Evolve 2022)’ நிகழ்ச்சியில் பல தொழில்முனைவோர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யங் இந்தியன்ஸ் கருத்தரங்கு
யங் இந்தியன்ஸ் கருத்தரங்கு

எத்தனை மாணவர்கள் தொழில்முனைவோர்களாக மாறுகிறார்கள்?

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன், ‘‘என்னோட சொந்த ஊர் ஈரோடு அருகே உள்ளது.. நான் பிறந்த ஊரை கூகிள் மேப்லகூட கண்டுபிடிக்க முடியாது , நான் தொழில்முனைவோர் இல்ல. ஆனா என்னோட அப்பா, அம்மா சிறந்த தொழில்முனைவோர். ஏன்னா, என்னை சிறப்பா தயாரிச்சு மதுரைக்கு அனுப்பிருக்கங்க’’ என்று சிரிக்க சிரிக்கப் பேசத் தொடங்கினார்.

‘‘எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் மனித மூலதனமே அடிப்படைத் தேவை. ஆனால், அதுவே இங்கு குறைவாக இருக்கிறது. கல்லூரி படித்து முடித்த ஒருவர், திடீர் என்று தொழில்முனைவோராக மாறிவிட முடியுமா எனில், முடியாது. பள்ளியிலிருந்து அதற்கான திறன்களைக் கற்றுத்தர வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சி பெற்று வெளியே வருகிறார்கள். ஆனால், அதில் எத்தனை பேர் தொழில்முனைவோராக மாறுவதற்கான திறனைக் கற்றுகொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே’’ என இன்றைய இளைய இந்தியாவின் முக்கியமான பிரச்னையை சரியாக கோடிட்டுக் காட்டினார்.

படித்தால் மட்டும் போதாது; திறனை மேம்படுத்த வேண்டும்...

அடுத்து பேசிய இந்திய அரசின் முன்னாள் நிதி செயலாளர் எஸ்.நாராயணன் ``இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் தலைசிறந்த மாநிலம் எனில், அது தமிழ்நாடுதான். அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் சென்றடைகின்றவா என்று கேட்டால் அனைவரும் சொல்லும் பதில் ‘ஆம்’ என்பதே.

யங் இந்தியன்ஸ் கருத்தரங்கு
யங் இந்தியன்ஸ் கருத்தரங்கு

கடந்த 40 – 50 ஆண்டுகளாக கல்வியின் தரத்தை உலகத்தரத்திற்கு மாற்றவேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, திறனை மேம்படுத்த தவறுகிறோம். ஆகையால் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் ஐடி நிறுவனங்களின் தரம் குறைவாகவே காணப்படுகின்றன. மேலும், கல்வித் தரத்தில் உள்ள குறைபாடுகளே இதற்கான காரணம்’’ என்றார்.

300-க்கும் மேற்பட்ட கீரை வகைகள் அழிந்து வருகின்றன...

இவரை தொடர்ந்து, சில தொழில்முனைவோர்கள் பேசினார்கள். “பத்து ரூபாய் சில்லறை இல்லை; இந்த கீரை கட்டை வச்சுக்கோங்க” என்ற கடைக்காரரின் வார்த்தையே என்னை கீரைக்கடை.டாட் காம் என்ற பிசினஸ் துவங்க உந்துகோலாக இருந்தது’’ என்று கீரைக்கடை நிறுவனத்தின் நிறுவனர் ஶ்ரீ ராம் பிரசாத் கூறினார்.

மேலும், ‘‘300-க்கும் மேற்பட்ட கீரை வகைகள் அழிந்து வருகின்றன. மக்களிடையே சத்துமிக்க உணவு என்பது குறைந்துள்ளது. ஆகையால் அழிந்துவரும் கீரை வகைகளை மீட்டெடுத்து அவற்றை மக்களுக்குக் கொடுப்பதே எங்களின் நோக்கம்’’ என்றார்.

ட்ரக் டாக்ஸி (Truck taxi) நிறுவனத்தின் நிறுவனர் நோயல் ஜெரால்ட் மற்றும் உழவர் பூமி நிறுவனத்தின் நிறுவனர் வெற்றிவேல் பழனி தங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் அனுபவங்களை பற்றி பேசினார். ஆரம்பத்தில் அவர்கள் சந்தித்த சவால்களை பற்றியும் அதை எதிர்த்து வென்றதை பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.

தமிழைக் குறை கூறவில்லை...

ஈரோட்டு மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான சதீஷ் குமாருடன் கலந்துரையாடினார் சக்ஸஸ் மென்ஸ்வியர் நிறுவனத்தின் நிறுவனர் ஃபைசல் அஹமத். சதீஷ் குமார் சொன்னதாவது...

‘‘பணம் இருந்தால் மட்டும்தான் பிசினஸ் பண்ண முடியும் என்று இங்கு பலர் நினைக்கின்றனர். 2015-16-ம் ஆண்டில் எனது கடன் ரூ.25 கோடியாக இருந்தது. ஆனால், எனது ஆண்டு வருமானம் அப்போது ரூ.200 கோடியாக இருந்தது. வங்கிகளிடமிருந்து கடன் பெற்று நாங்கள் ரூ.450 கோடி அளவில் முதலீடு செய்தோம். அடுத்த ஆண்டிலேயே மேலும் ரூ.550 கோடி முதலீட்டை செய்ய முடிவு செய்தோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது எங்களின் தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது.

சதீஷ் குமார், ஃபைசல் அஹமத்
சதீஷ் குமார், ஃபைசல் அஹமத்
S.Chandran

எனவே, பணம் இருந்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும் என்பது சரியல்ல; தேர்ந்தெடுத்த தொழிலை பற்றிய தெளிவும், திறமையும் இருந்தாலே போதும் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று தொழிலைத் துவங்கலாம்.

பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பில் அமுல் நிறுவனம் முக்கியமான பங்காற்றுகிறது. எனினும், அமுல் நிறுவனத்தை எங்களின் போட்டியாளராக பார்க்காதீர்கள். ஏன் எனில், தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களைவிட நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். மேலும், பால் பொருள்களின் ஒன்றான பன்னீரை நாங்கள் 1993-ம் ஆண்டு அறிமுகம் செய்தோம். எங்களுக்கு பின்னர் 10 வருடங்களுக்குப் பிறகுதான் அமுல் நிறுவனம் பன்னீரை அறிமுகம் செய்தது.

இந்தி கற்றுக்கொள்ளுங்கள்; பெரிய அளவில் பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தி தெரியாமல் இலக்கை அடைய முடியாது; தமிழ் என் தாய்மொழி. அதை நான் தமிழை குறை கூறமாட்டேன். ஆனால், இந்தி தெரிந்தால் பெரிய அளவில் பிசினஸ் செய்யலாம் என்று நான் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளுங்கள்’’ என்றார்.

பிசினஸில் ஜெயிக்க பணம் மட்டும் போதாது...

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் எஸ்.ஆர். பிரபு பேசியதாவது, ‘‘பணம் வைத்திருந்தால் மட்டும் போதும் தயாரிப்பாளர் ஆகிவிடலாம் என்பது தவறு. சினிமாத் துறை மட்டும் இல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற பணம் மட்டுமே போதாது; திறமை மற்றும் அனுபவமே தேவை’’ என்றார்.

S.R.Prabhu
S.R.Prabhu

தொழில் தொடங்குதல் மற்றும் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது என்பததை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்ச்சி தொழில்முனைவோராக இருப்பவர்களுக்கும் தொழில்முனைவோராக மாற விரும்புபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கவேண்டும் என்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் சொன்னது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்!