
வெற்றி உத்திகள்
‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி - ஐ.டி தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் திறமையை உலகமறியச் செய்தவர். 1981-ம் ஆண்டு தன் மனைவி சுதாமூர்த்தி யிடம் இருந்து 10,000 ரூபாயைக் கடனாகப் பெற்று ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியாவின் மிகப் பெரும் ஐ.டி நிறுவனமாக மாற்றிக் காட்டியவர். அவர் தன் வெற்றிக்கு முக்கியமான இரண்டு காரணங்களை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் முதல் காரணம், நேரம் தவறாமை. பொதுவாக, ஊழியர்கள்தான் அவர்கள் பணி ஆரம்பிக்கும் நேரத்தில் அலுவலகத்துக்கு வருவார்கள். ஆனால், நிறுவனத்தின் சொந்தக் காரர் அவரது வேலையைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் வருவார். ஆனால், நாராயணமூர்த்தி ‘இன்ஃபோசிஸ்’ அலுவலகத்துக்கு தினமும் காலை 6.20 மணிக்கு வந்துவிடுவாராம். பெங்களூரின் நடுங்கும் குளிர் எல்லாம் ஒரு பொருட்டு இல்லை. காலை 6.20-க்கு அலுவலகத்தில் நுழைந்தால், இரவு 8 - 9 மணிக்குதான் வீடு திரும்புவாராம். இப்படி தினமும் 14 மணி நேரம் வேலை செய்வதை அவர் ஓய்வு பெற்ற 2011-ம் ஆண்டு வரை செய்தார் என்பது ஆச்சர்யமான தகவல். ‘‘நேரம் தவறாமையை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயமாக எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் நாராயணமூர்த்தி.

அடுத்த காரணம், நிறுவனத்தை வெற்றி கரமாகக் கட்டியெழுப்ப அவர் செய்த பல தியாகங்கள். ஒரு நாளைக்கு பல மணி நேரத்தை அவர் அலுவலகத்திலேயே கழித்ததால், தன் குழந்தைகளுடன் போதிய அளவு நேரத்தை அவரால் செலவழிக்க முடியவில்லை. நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி குழந்தைகளை எந்தக் குறையும் இன்றி வளர்ப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, கணவர் நாராயணமூர்த்திக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்.
நேரம் தவறாமை, அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பு இந்த இரண்டும் இருந்தால், பிசினஸில் ஜெயிப்பது நிச்சயம் என்பதே நாராயணமூர்த்தி சொல்லும் பாடம்!