நடப்பு
Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்!

செ.கார்த்திகேயன்

இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு நகையை அடமானம் வைத்தோ அல்லது தனிநபர்களிடம் கடன் வாங்கியோ சமாளிக்கிறார்கள். ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கும்பட்சத்தில் மருத்துவச் செலவுக்கென்று கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. டேர்ம் இன்ஷூரன்ஸ் போலவே, ஹெல்த் இன்ஷூரன்ஸை யும் திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என்கிற மாதிரி இரு பிரிவாகப் பிரித்து அதிகப்படுத்திக்கொள்வது அவசியம். இதுகுறித்து நிதி ஆலோசகர் இஜாஸ் ஹுசைனிடம் (happymoney.in) கேட்டோம். அவர் சொன்ன விவரங்கள் இங்கே உங்களுக்காக...

‘‘ஒருவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் தொடர்ந்து அதிகரிக்கும்போது, வயது அடிப்படை யிலும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படியும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் திடீர் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியும். அப்படி அதிகரிக் காமல்விட்டால், நாம் வைத்திருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் குறைவான க்ளைம்தான் கிடைக்கும்.  இதனால் அதிக மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவோம். 

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்!

 திருமணத்துக்கு முன்!

திருமணத்துக்குமுன் பெரும்பாலானவர்கள் நமக்கு என்ன பெரிய மருத்துவச் செலவு வந்துவிடப்போகிறது என்று நினைத்து, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கத் தவறி விடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டபிறகு யோசிப்பதில் எந்தவொரு பயனுமில்லை. இளம் வயதினர் என்பதால் இந்த சமயங்களில் எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் குறைவாகவே இருக்கும். அதனால் இந்த வயதில் மருத்துவக் காப்பீட்டுடன், விபத்துக் காப்பீட்டையும் எடுத்துவைத்திருப்பது அவசியம்.

 திருமணத்துக்குப் பின்!

திருமணத்துக்குப்பின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கவரேஜ் அளவை அப்படியே தொடரக் கூடாது. ஏனெனில், இப்போது குடும்பத்தில் மனைவியும் இருப்பார். எனவே, அவருக்கும் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்து, அவர்கள் இருவருக்கும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருந்தாலும், தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இடையில் வேலையில் இல்லாதச் சூழ்நிலை ஏற்பட்டால், தனியாக எடுத்திருக்கும் பாலிசி நிச்சயம் கைகொடுக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்!

 குழந்தை பிறந்தபின்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்!

குழந்தைகள் பிறந்தபின் அவர்களையும் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குள் கொண்டு வர வேண்டும்.  இதுவரை கணவன் - மனைவிக்கு   தனித்தனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்று இருந்ததை, இனி கணவன், மனைவி மற்றும் குழந்தை என மூன்று பேருக்கும் சேர்த்து, ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை எடுக்கலாம்.  தனியாக எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைவிட இந்த ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசிக்கு கட்ட வேண்டிய பிரீமியம் குறைவு. 

 நடுத்தர மற்றும் ஓய்வுக்கால வயது!

நடுத்தர வயதில்தான் உடல் மருத்துவரீதியான சவால்களைச் சந்திக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், ரத்தக்கொதிப்பு மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள் இந்த வயதில்தான் பாதிக்கத் தொடங்கும். அதேபோல, ஓய்வுக் காலத்திலும் உடல்நலக் குறைபாடுகள் அதிகம் காணப்படும். அதனால் இந்த இரு சமயங்களிலும்  ஹெல்த் இன்ஷூரஸ் கவரேஜைக் கட்டாயம்  அதிகரித்தே ஆகவேண்டும்.''

இதை எல்லோருமே கவனிக்கலாமே!