நடப்பு
Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: டாப்-அப் பிளான் ஏன் தேவை?

இந்தர்ஜித் ராவணன், நிர்வாக இயக்குநர், comparereviewrate.com தொகுப்பு: இரா.ரூபாவதி.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு அதன் கவரேஜ் போதுமானதாக உள்ளதா என்கிற  சந்தேகம் எல்லோருக்கும் வரும். மேலும், மருத்துவத் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் பலரும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் டாப்-அப் பாலிசி எடுப்பதுதான்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் டாப்-அப் பிளானை பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கு கின்றன. இந்த பாலிசி தேவைப்படு பவர்கள் பிரீமியம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். டாப்-அப் பாலிசிகள் மிகவும் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கின்றன. அதாவது, 30 வயதுடைய ஒருவர் 3 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், பிரீமியம் 3 ஆயிரம் ரூபாய் இருக்கும். அதுவே, டாப்-அப் பாலிசியில் 10 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு 3 ஆயிரம் ரூபாய்தான் பிரீமியம் இருக்கும்.

டாப்-அப் பாலிசியில் க்ளைம்!

அடிப்படை பாலிசி கவரேஜ் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவை இல்லை. இதில் கவனிக்க வேண்டியது,  கழிவுத்தொகை வரையறைதான். இந்த வரையறையைத் தாண்டும்போதுதான் டாப்-அப் பாலிசியைப் பயன்படுத்த முடியும். அடிப்படை பாலிசியில் ரூ.1-5 லட்சம் வரை கவரேஜ் இருக்கும்.

ஒருவர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு அடிப்படை பாலிசியும், ரூ.10 லட்சத்துக்கு டாப்-அப் பாலிசியும் (கழிவுத்தொகை ரூ.2 லட்சம்) வைத்திருக்கிறார் எனில்,  மருத்துவச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவருக்கு 8 லட்சம் ரூபாய் க்ளைம் வருகிறது. இதை அடிப்படை பாலிசியில் 2 லட்சம் ரூபாயும், டாப்-அப் பாலிசியில் 6 லட்சம் ரூபாயும் க்ளைம் செய்ய முடியும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: டாப்-அப் பிளான் ஏன் தேவை?

டாப்-அப் பாலிசி எடுக்க அடிப்படை பாலிசி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட தொகைக்குமேல் க்ளைம் வரும்போது தான் டாப்-அப் பாலிசியைப் பயன்படுத்த முடியும். அந்தவகையில், டாப்-அப் பாலிசியில் கழிவுத் தொகையாக இருப்பதை கையிலிருந்து தான் போடவேண்டி இருக்கும். எனவே, அடிப்படை பாலிசி எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

குரூப் பாலிசி வைத்திருப்பவர்களும் டாப்-அப் பாலிசி எடுக்க முடியும். ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கும் வரை மட்டும்தான் குரூப் பாலிசியில் கவரேஜ் பெற முடியும். ஆனால், வேலையில் இல்லாதபோதும் டாப்-அப் பாலிசியில் க்ளைம் பெற முடியும்.

க்ளைம் வரையறை!

டாப்-அப் பாலிசியில் எவ்வளவு தொகைக்குமேல் க்ளைம் செய்ய முடியும் என்பதற்கான வரையறையை அந்தந்த நிறுவனமே தீர்மானித்து வைத்திருக்கும். அதாவது, நீங்கள் ரூ.2  லட்சத்துக்கு அடிப்படை பாலிசி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். டாப்-அப் பாலிசியில் ரூ.3 லட்சத்துக்குமேல் க்ளைம் தொகை இருந்தால்தான் க்ளைம் செய்ய முடியும் என்ற வரையறை இருக்கும். இடைப்பட்ட நிலையில் வரும் க்ளைம் தொகையை பாலிசிதாரர் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, டாப்-அப் பாலிசி எடுப்பதற்குமுன் எவ்வளவு தொகையிலிருந்து க்ளைம் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப அடிப்படை பாலிசிகளை எடுப்பது நல்லது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: டாப்-அப் பிளான் ஏன் தேவை?

க்ளைம் செய்யும் விதம்!

மேலும், ஒரு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் செய்கிறீர்கள். அடுத்த 45 நாட்களுக்குள் மீண்டும் அதே நோய்க்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால், அது புதிய க்ளைமாகக் கருதப்படமாட்டது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: டாப்-அப் பிளான் ஏன் தேவை?

ஆனால், அதே 45 நாட்களுக்குள் வேறு புதிய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால், அது புது  க்ளைமாக எடுத்துக் கொள்ளப்படும். இதில் என்ன சிக்கல் எனில், புதிதாக க்ளைம் செய்யும்போது டாப்-அப் பாலிசியில் க்ளைம் வரையறைக்கு கீழ் உள்ள தொகைக்கு க்ளைம் செய்ய முடியாது.

அதாவது, முதல்முறை மருத்துவ மனையில் அனுமதிக்கும்போது ரூ.4 லட்சம் க்ளைம் வருகிறது. அதில், அடிப்படை பாலிசியில் ரூ.3 லட்சத்தை யும், டாப்-அப் பாலிசியில் ரூ.1 லட்சத்தை யும் க்ளைம் செய்து இருப்பார்கள்.

45 நாட்கள் கழித்து வேறு ஒரு நோய்க்காக மருத்துவ மனையில் அனுமதிக்கும்போது, அப்போதும் ரூ. 4 லட்சத்துக்கு க்ளைம் வருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அடிப்படை பாலிசியில் க்ளைம் செய்ய முடியாது. ஒரு லட்சம் ரூபாயை மட்டும்தான் டாப்-அப் பாலிசியில் க்ளைம் செய்ய முடியும்.

இப்படி இல்லாமல், வரம்பு எதுவும் இல்லாமல் க்ளைம் செய்யக்கூடிய சூப்பர் டாப்-அப் பிளான்களை சில நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கின்றன.

ஒரே நிறுவனத்தில் பாலிசி!

அடிப்படை பாலிசி அல்லது குரூப் பாலிசி வைத்திருந்து டாப்-அப் பாலிசி எடுக்கிறீர்கள் எனில், இரண்டு பாலிசியையும் ஒரே நிறுவனத்தில் எடுப்பது நல்லது. அப்போதுதான் க்ளைம் வரும்போது சிக்கல் இருக்காது. இல்லையெனில், பாலிசியில் க்ளைம் செய்யும்போது தகவல்களை இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: டாப்-அப் பிளான் ஏன் தேவை?

கேஷ்லெஸ் வசதி இல்லையெனில் அடிப்படை பாலிசி வைத்திருக்கும் நிறுவனத்துக்கு அனைத்து பில்களையும் கொடுத்து அடிப்படை பாலிசியில் க்ளைம் செய்த தொகைபோக மீதமுள்ள தொகையை டாப்-அப் பாலிசியில் க்ளைம் செய்கிறேன் என்று சான்றிதழ் வாங்கிச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, முடிந்தவரை ஒரே நிறுவனத்தில் பாலிசி வைத்திருப்பது அவசியம்.

டாப்-அப் பாலிசி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று தான். ஆனால், உங்களின் தேவை என்ன, குடும்பத்தின் தேவை என்ன என்பதை பாலிசி எடுக்கும்முன் தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.

மருத்துவப் பரிசோதனை!

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் டாப்-அப் பாலிசியில் மருத்துவப் பரிசோதனை கட்டாயம். ஆனால், சாதாரண பாலிசியில் 45 வயதுக்குமேல் மருத்துவப் பரிசோதனை அவசியம்.