நடப்பு
Published:Updated:

ஏஜென்டுகள் தரும் வாக்குறுதிகள்... ஆராய்ந்து முடிவெடுங்கள்!

நீரை.மகேந்திரன்

அண்மையில் நம் அலுவலகத்துக்கு போன் செய்து பேசினார் சேலத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர். அவரது சம்பளம் மாதம் 12,000 ரூபாய். ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அவருக்கு போன் செய்து, ஒரு குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் உங்களுக்கு கடன் மற்றும் பிற சலுகைகள் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

கடன் கிடைக்கும் என்ற ஆசையில் சென்ற அவரிடம், ஏதேதோ சொல்லி ஒரு லட்சம் ரூபாய் பிரீமியம் கொண்ட பாலிசியை வாங்க வைத்துள்ளார். கையில் பணம் இல்லை என்றவரிடம், வீட்டில் மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்துக் கட்டுங்கள் என்று விடாப்பிடியாக அந்த பாலிசியை வாங்க வைத்துள்ளார். பாலிசி வாங்கியபின் கடன் வேண்டும் என அவர் கேட்க, பாலிசி விற்ற ஏஜென்ட் ஏதேதோ சொல்லி அலைக்கழிக்க, வேறு வழி இல்லாமல் நொந்துபோய் நமக்கு போன் செய்தார் அந்த வாசகர்.

சேலத்தைச் சேர்ந்த அந்த வாசகர் மட்டுமல்ல, இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பதற்காக ஏஜென்டுகள் சொல்லும் தவறான வாக்குறுதிகள் ஒன்றிரண்டல்ல. எப்படியாவது ஒரு பாலிசியை விற்றுவிட வேண்டும் என்பதுதான் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளின் குறிக்கோளாக இருக்கிறது.  இந்த நிலையில், ஒரு பாலிசியை வாங்கும்போது எந்தெந்த வகையில் நாம் ஏமாற்றப்படலாம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார் ஐஎன்ஜி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மேலாளர் சுந்தரராஜன்.

‘‘ஒரு பாலிசியின் அனைத்து முக்கிய விவரங்களையும் பாலிசி எடுக்கப் போகிறவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியது ஏஜென்டுகளின் கடமை. முக்கியமாக எவ்வளவு பிரீமியம், என்ன பலன்கள், ரைடர்கள், அவற்றின் மூலம்  கிடைக்கும் நன்மைகள், விதிவிலக்குகள் என அனைத்து விவரங்களையும் விளக்க வேண்டும். ஆனால், அதிக கமிஷன் கிடைக்கக்கூடிய பாலிசிகளை ஆஹா ஓஹோ என்று சொல்வார்கள் ஏஜென்டுகள். அது, அந்த வாடிக்கை யாளருக்குத் தேவையான பாலிசிதானா என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டார்கள்.

ஏஜென்டுகள் தரும் வாக்குறுதிகள்...  ஆராய்ந்து முடிவெடுங்கள்!

முதலில் யூலிப் பாலிசி களில் என்னென்ன தவறான வாக்குறுதி களைத் தருவார்கள் என்பதைச் சொல்கிறேன்.   

அதிக கமிஷன்!

யூலிப் பாலிசிகளை விற்பனை செய்தால் ஏஜென்டுகளுக்கு முதல் ஆண்டில் கணிசமான தொகை கமிஷனாக கிடைத்து வந்தது. இதனால் அத்தனை ஏஜென்டுகளும் மாய்ந்து மாய்ந்து இந்த பாலிசியை விற்றனர். அதிக கமிஷன் காரணமாக ஏஜென்டுகள் பல தவறான வாக்குறுதி தந்து இந்த பாலிசிகளை விற்றார்கள்.

 ஒன்றுமறியாத அப்பாவிகள், ஏஜென்டுகள் சொன்னதை நம்பி இந்த பாலிசியை எடுத்து  பெரும் நஷ்டம் அடைந்தார்கள் என இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிய வந்தபோது ஏஜென்டுகளின் கமிஷனை பெருமளவில் குறைத்ததால், இப்போது இந்த பாலிசிகளை ஏஜென்டுகள் பரிந்துரை செய்வதே இல்லை.

திரும்பப் பெறுவது!

ஏஜென்டுகள் தரும் வாக்குறுதிகள்...  ஆராய்ந்து முடிவெடுங்கள்!

பாலிசியைத் தொடர விருப்பம் இல்லை எனில், இரண்டு வருடத்தில் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாலிசியில் போட்ட பணத்தை எடுக்க முடியும். முன்பு இது மூன்று ஆண்டுகளாக இருந்தது. எனவே, எத்தனை வருடம் கழித்து பணத்தைத் திரும்ப எடுக்க முடியும் என்பதை பாலிசி விண்ணப்பத்தில் தெளிவாகப் பார்க்கவும். சில பாலிசிகள் ஐந்து வருடங்களுக்குப் பிறகே திரும்ப எடுக்க முடியும்.

எக்கச்சக்க லாபம்!

யூலிப் பாலிசி மூலம் எக்கச்சக்க லாபம் கிடைக்கும் என்று விற்பார்கள். ஆனால், நீங்கள் வாங்கும் யூலிப் பாலிசியில் இன்ஷூரன்ஸுக்கான கவரேஜ் போக, முதலீட்டுக்கு ஒதுக்கப்படும் தொகையின் வளர்ச்சி, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து அமையும்.
இந்த வளர்ச்சி ஆண்டுக்கு 10 சத விகிதமாக இருந்தாலும், இதர கட்டணங்கள் போக எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, இந்தவகை பாலிசிகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லவே முடியாது. அப்படி எந்த ஏஜென்டுகள் சொன்னாலும் அதை நம்பாதீர்கள்.

கடந்த கால வளர்ச்சி!

யூலிப் பாலிசிகளின் கடந்த கால வளர்ச்சியைக் காட்டி அந்த பாலிசியை எடுக்க ஏஜென்ட் நம்மிடம் பரிந்துரை செய்யலாம். ஆனால், அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பாலிசியை எடுக்கக் கூடாது. பங்குச் சந்தையின் வளர்ச்சி தற்போது எப்படி இருக்கும் என்பதை நன்கு ஆராய்ந்தே, இந்தவகை பாலிசிகளை வாங்கலாமா, கூடாதா என்று முடிவு செய்ய வேண்டும்.

மூத்த குடிமக்கள்!

சில ஏஜென்டுகள் மூத்த குடிமக்களி டம் யூலிப் பாலிசிகளை விற்க முற்படலாம். மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு மட்டும் போதுமானது. அவர்கள் யூலிப் பாலிசி வாங்குவது மிகவும் ரிஸ்க்கானது. இதை ஏஜென்டுகள் சொல்லமாட்டார்கள். நாம்தான் உஷாராக இருந்து இந்தவகை பாலிசிகளை மூத்த குடிமக்கள் வாங்காத படிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இனி எண்டோவ்மென்ட் பாலிசி களில் ஏஜென்ட்டுகள் என்னென்ன தவறான வாக்குறுதிகளைத் தருவார்கள் என்று சொல்கிறேன்.

கவரேஜ் முதன்மை!

எண்டோவ்மென்ட் பாலிசிகளின் இறுதியில் கிடைக்கும் முதிர்வு தொகை மொத்தமாகக் கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள். எண்டோவ்மென்ட் பாலிசி என்று வரும்போது அதன்மூலம் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ்தான் முக்கியமே ஒழிய, மொத்தமாக எவ்வளவு கிடைக்கும் என்பது முக்கியமல்ல.

காரணம், இந்தவகை பாலிசி மூலம் மொத்தமாகக் கிடைக்கும் பணம் ஆண்டு சதவிகித வளர்ச்சிக் கணக்கில் பார்த்தால், 5 - 6 சதவிகிதமே இருக்கும். மொத்தமாக நிறைய பணம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் வேறு ஏதாவது ஒரு நல்ல முதலீட்டுத் திட்டதைத்தான் நாட வேண்டும்.

ஏஜென்டுகள் தரும் வாக்குறுதிகள்...  ஆராய்ந்து முடிவெடுங்கள்!

ரைடர்கள்!

வாடிக்கையாளர்களைப் பொறுத்து தான் ரைடர் பாலிசிகள் குறித்த பேச்சையே எடுப்பார்கள், ஏஜென்டுகள். ரைடர் பாலிசிகளுக்கு பிரீமியம் சேர்த்து கட்ட வேண்டும் என்பதால் பெரும்பாலும் மறைத்துவிடுவார்கள். இந்த பாலிசியில், இந்த ரைடர்கள் இருக்கிறது. இதைப் பயன்படுத்தினால் இந்தப் பலன்கள் கிடைக்கும் என விளக்கும் ஏஜென்டுகள் மிகச் சிலர் மட்டுமே. இந்தமாதிரியான ஏஜென்டுகளை தாராளமாக நம்பலாம்.

என்ன தேவை!

மருத்துவக் காப்பீடுகள் எடுக்கும் போது சில நோய்களுக்கு கவரேஜ் கிடைக்காது. ஆனால், அவற்றை ஏஜென்டுகள் தெளிவாக விளக்காமல் விட்டுவிடுவார்கள். சில பாலிசிகளில் சில நோய்களுக்கு நான்கு வருடங் களுக்குப் பிறகே கவரேஜ் இருக்கும் அல்லது குறிப்பிட்ட நோய்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். அந்த விவரங்களை மறைத்துவிடுவார்கள்.

அதாவது, அதிக பிரீமியம் சொன்னால், பாலிசியை எடுக்க மாட்டார்கள் என்பதால் இதுபோன்ற தகவல்களை மறைத்துவிடுவார்கள். என்ன நோய்க்கு எவ்வளவு பிரீமியம் என்பதைத் தெளிவாக விளக்கும் ஏஜென்டுகளை நம்பலாம்.

வரம்புகள்!

சில மருத்துவ பாலிசிகளில் ஒவ்வொரு நோய்க்கும் க்ளைம் செய்ய வரம்பு விதித்திருப்பார்கள். அந்த வரம்புகளை ஏஜென்ட்டுகள் தெளிவாக எடுத்துச் சொல்வதில்லை.

இதனால் பெரிய அளவில் கவரேஜ் கிடைக்கும் என்று நினைத்து பாலிசியை எடுத்துவிட்டு, பிற்பாடு கைவிட்டு காசு கட்ட வேண்டிய நிலையே பாலிசிதாரருக்கு ஏற்படும். இதனைத் தடுக்க ஒவ்வொரு நோய்க்கும் எவ்வளவு கவரேஜ் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே மருத்துவ பாலிசிகளை எடுப்பது நல்லது. 

ஆன்லைன் மூலமாக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுப்பது அதிகரித்துவரும் நிலையில் ஏஜென்டுகள் எண்ணிக்கை வருங்காலத்தில் குறையலாம். ஆனால், ஆன்லைன் சேவை தற்போது வளர்ந்து வருவதால் ஏஜென்டுகள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்தால் இன்ஷூரன்ஸ் மீது மக்களின் கவனத்தை முழுமையாகத் திருப்ப முடியும்.

எபோலாவுக்கு இழப்பீடு கிடைக்குமா?

வெளிநாடுகளில் வேகமாகப் பரவும் எபோலா நோய், நம் நாட்டுக்கும் வந்துவிடுமோ என்கிற பயம் எல்லோருக்கும் வந்துவிட்டது. எளிதில் பரவும் இந்த வைரஸ் தாக்குதல் நோயினால், மரணம் நிச்சயம் என்கிற அச்சம் நிலவுகிறது. இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக் கப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.

இந்தியாவில் வசிக்கும் ஒருவர் இந்த நோயினால் பாதிப்படைந்தால், அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் கிடைக்குமா என்பது குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் விசாரித்தோம்.

“எபோலா என்பது வைரஸால் பரவக்கூடிய நோய். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தால், சிகிச்சைக்கான க்ளைம் பெற முடியும். இது ஒருவகையான நோய்த் தாக்குதல்தான். எனவே, இந்த நோய்க்கு காத்திருப்புக் காலம் என்பதில்லை. நோய் பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, 24 மணி நேரத்துக்குமேல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் க்ளைம் கிடைக்கும்.

எய்ட்ஸ் நோய் புதிதாக வந்தபோது அதற்கு இன்ஷூரன்ஸ் க்ளைம் தரப்படவில்லை. காரணம், எய்ட்ஸ் என்பது ஒருவரின் தவறான பழக்கவழக்கங்களாலும் கவனக்குறைவினாலும் வரக்கூடியது.  எனவேதான் அதற்கு க்ளைம் தரப்படவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சல் புதிதாக வந்தபோது அதற்கு க்ளைம் தந்தோம். காரணம், எதிர்பாராமல் திடீரென யாருக்கு வேண்டுமானாலும் அந்த நோய் வரலாம் என்பதால்தான்” என்று விளக்கம் தந்தனர்.

- இரா.ரூபாவதி.