Published:Updated:

எல்.ஐ.சி. - பாலிசிதாரர்களைப் பாதுகாக்கவா... நஷ்ட வங்கிகளைப் பாதுகாக்கவா?!

பா. முகிலன்

நஷ்டத்தில் இயங்கும் ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்றுவதற்காக அதன் பெரும்பான்மையான பங்குகளை வாங்குமாறு ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், எல்ஐசி தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் வங்கியை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எல்.ஐ.சி. - பாலிசிதாரர்களைப் பாதுகாக்கவா... நஷ்ட வங்கிகளைப் பாதுகாக்கவா?!
எல்.ஐ.சி. - பாலிசிதாரர்களைப் பாதுகாக்கவா... நஷ்ட வங்கிகளைப் பாதுகாக்கவா?!

ஷ்டத்தில் இயங்கும் ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்றுவதற்காக அதன் பெரும்பான்மையான பங்குகளை வாங்குமாறு ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், எல்ஐசி தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் வங்கியை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வாராக் கடன், மோசடி உள்ளிட்டவை காரணமாக நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளில் ஒன்றாகப் பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ ( Industrial Development Bank Of India - IDBI) வங்கியும் திகழ்கிறது.  கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், வாராக் கடன் அதிகரிப்பால் இவ்வங்கியின் நிகர நஷ்டம் 5,662.76 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.

2017 மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காவது காலாண்டில் இவ்வங்கியின் வாராக் கடன் 44,752.59 கோடி ரூபாயாக ( 21.25 சதவிகிதம் ) இருந்த நிலையில், முடிவடைந்த காலாண்டில் இது 55,588.26 கோடி ரூபாயாக (27.95 சதவிகிதம்) அதிகரித்துள்ளது. 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டுக்குமான வாராக்கடன் 10,773.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டைவிட இது 6,054.39 கோடி ரூபாய் அதிகமாகும்.

நஷ்டத்தில் போராடும் ஐடிபிஐ வங்கி

நீண்ட நாள்களாகவே நஷ்டத்துடன் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியை, ஆக்ஸிஸ் வங்கியை மீட்டெடுத்ததுபோன்ற பாணியில் மீட்டெடுக்கப்போவதாகக் கடந்த 2015-ம் ஆண்டே மத்திய அரசு கூறியிருந்தது. அதன் பின்னர், 2017-ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஐடிபிஐ வங்கிப் பங்குகளைக் கைமாற்றும் நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும், மத்திய அரசும் ஐடிபிஐ வங்கியில் உள்ள தனது பங்குகளில் 50 சதவிகிதத்தைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே ஐடிபிஐ வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அதன் வாராக்கடன் அதிகரிப்பு போன்றவை குறித்து ரிசர்வ் வங்கியும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகப் பெரும் முயற்சி எடுத்தும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை எந்த ஒரு தனியார் நிறுவனமும் வாங்க முன்வராத நிலையில், ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்றுவதற்காக அதன் பெரும்பான்மையான பங்குகளை வாங்குமாறு எல்ஐசி-யை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகக் கடந்த திங்களன்று தகவல் வெளியானது. இது ஐடிபிஐ வங்கி வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், எல்ஐசி பாலிசிதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டுக்கொடுக்க எல்ஐசி மூலதனம்

ஏற்கெனவே இதற்கு முன்னர் ஒருமுறை ஐடிபிஐ வங்கியை இதேபோன்று காப்பாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அதன் 11 சதவிகித பங்குகளை எல்ஐசி வாங்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்தினால் அதன் பெரும்பான்மைப் பங்குகளை, அதாவது அரசு வைத்துள்ள ஐடிபிஐ வங்கியின் 81 சதவிகிதப் பங்குகளில் பாதியையாவது எல்ஐசி வாங்க வேண்டும். இதற்கு எல்ஐசி, சுமார் 3 பில்லியன் டாலர், அதாவது இன்றைய மதிப்பில் சுமார் 20,481 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

வழக்கமாக நஷ்டத்தில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளை மீட்க, இதுவரை பொதுமக்களின் வரிப்பணத்தை, அதாவது அரசு கஜானாவிலிருந்துதான் பல ஆயிரம் கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து வந்தது மத்திய அரசு. தற்போது பொதுமக்களின் டெபாசிட்டான, ஆயுள் காப்பீட்டு பாலிசி தொகையில் கைவைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றபோதிலும், இந்தச் செய்தியை நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் முன்வரவில்லை. ``ஐடிபிஐ ஒரு சுயேச்சையான வங்கி. எல்ஐசி ஒரு சுயேச்சையான நிறுவனம். இரண்டும் தங்கள் இஷ்டப்படி செயல்பட முழு உரிமை உள்ளது. அதனால் உங்களுக்கு எது சிறந்தது என்று நீ்ங்கள் நினைக்கிறீர்களோ அதைச் செய்யலாம் என்று நாங்கள் தெரிவித்துவிட்டோம்" என அவர்கள் கூறினர்.

இதனிடையே தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஒரு வங்கியின் 15 சதவிகிதப் பங்குகளை மட்டுமே வாங்க முடியும். அதற்கு மேல் வாங்க வேண்டுமெனில், இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து சிறப்பு அனுமதி வாங்க வேண்டும். எனவே, இந்த நடவடிக்கைகளை முடிப்பதற்காக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இன்ஷுரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.

`எல்ஐசி-யே ஆட்டம் கண்டுவிடும்'

இந்த நிலையில், ``எல்ஐசி-யின் அடிப்படை வியாபாரம் பொதுமக்களிடமிருந்து பாலிசி பணத்தைப் பெற்று, அதனை லாபம் வரக்கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து, வருமானத்தைப் பெருக்கி பாலிசிதாரர்களுக்கு நல்ல வருவாய்ப் பயனை அளிப்பதோடு, நிறுவனத்தின் நிதி கையிருப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான். ஆனால், அதற்கு மாறாக நஷ்டத்தில் இயங்கும், அதுவும் 10,773.30 கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன் வைத்துள்ள வங்கியின் பங்குகளை எல்ஐசி ஏன் வாங்க வேண்டும்?

ஒருவேளை மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து எல்ஐசி நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கினால், அது மக்களின் பணத்தை விழுங்குவதற்காக அடங்காப் பசியுடன் இருக்கும் வெள்ளை யானையைச் சொந்தமாக்கிக் கொண்டதுபோல ஆகிவிடும். ஏனெனில் வாராக் கடன் அதிகரிப்பு, நஷ்டம் போன்றவற்றால் மூலதனம் காலியாக இருக்கும் இதுபோன்ற பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்ற, கடந்த காலங்களில் மத்திய அரசு எவ்வளவோ நிதியுதவி அளித்தும் அவை இன்னும் மீளாமல், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து அரசின் நிதியுதவிகளை எதிர்பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றன.

தற்போதைய நிலையில், வாராக் கடன் அதிகரிப்பால் ஏற்பட்ட மூலதனப் பற்றாக்குறையால் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான பொதுத்துறை வங்கிகள் போராடிக்கொண்டிருக்கின்றன. இது அரசுக்குப் பெரும் சுமையாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு, மூலதனப் பற்றாக்குறையால் தவிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு, சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்தும், கழுத்தை நெரிக்கும் வாராக் கடனால் தத்தளிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு அது போதவில்லை. இன்னும் மீளாத நிலையிலேயே இருக்கின்றன.

இதனால்தானோ என்னவோ தனது சுமையை எல்ஐசி மீது இறக்கி வைக்க மத்திய அரசு எண்ணுவதாகத் தெரிகிறது. தற்போது ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்ற எல்ஐசி ஒப்புக்கொண்டால், அடுத்தபடியாக நஷ்டத்தில் தத்தளிக்கும் மற்ற பொதுத்துறை வங்கிகளையும் காப்பாற்ற எல்ஐசி பணிக்கப்படலாம். ஒருவேளை, அதை எல்ஐசி-யும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அமெரிக்காவில் நடந்ததுபோன்று இன்ஷூரன்ஸ் துறையில் எல்ஐசி பாலிசிகளை வாங்கும் விருப்பம் பொதுமக்களிடையே குறைந்து, அந்த நிறுவனமே வீழ்ச்சிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டு, பின்னர் எல்ஐசி நிறுவனமே தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அரசின் நிதியுதவியை எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுவிடும்" என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

எல்ஐசி, ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனம். எனவே, அதன் விசுவாசம் முழுவதும் தனது வாடிக்கையாளர்கள்மீதுதான் இருக்க வேண்டும். நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக, அரசு தன்னைக் கறவை மாடாகப் பயன்படுத்திக்கொள்ள எல்ஐசி அனுமதிக்கக் கூடாது.