Published:Updated:

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?
வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி
வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

சீனியர் சிட்டிஸனான எனது தந்தை, மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். சமீபத்தில், ரூ.40 லட்சத்துக்கு  அவரது வீட்டை விற்றுள்ளார். அதற்கு எவ்வளவு வரியைச் செலுத்த வேண்டி யிருக்கும்? அந்தத் தொகையைச் சிறிது காலம் எதிலும் முதலீடு செய்யாமல், பின்பு வங்கிச் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யலாமா?

ரஞ்சித்குமார், காரைக்குடி.

கே.ஆர். சத்தியநாராயணன், ஆடிட்டர் 

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘சொத்து இரண்டாண்டுகளுக்குமுன்னர் வாங்கியதாக இருந்தால் நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்த வேண்டும். மூலதன ஆதாயத்தில் இன்னொரு சொத்து வாங்காமல் இருந்தாலோ அல்லது மூலதன ஆதாயப் பத்திரங் களில் முதலீடு செய்யாதிருந்தாலோ, ஆதாயத்துக்குப் பணவீக்க சரிகட்டலுக்குப்பிறகு நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டியிருக்கும். அப்படியில்லாமல் அந்தத் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டிருந்தால் வரி கட்ட வேண்டும்.’’

என் வயது 43. மாத வருமானம் ரூ.25,000.  மாதம்10,000 ரூபாயை ஓய்வுக்காலம் வரை முதலீடு செய்ய, நல்ல வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான  முதலீட்டுத் திட்டங்கள் எவை? 

முத்துராஜ், தேவக்கோட்டை.

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா  

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘நீங்கள் ஓய்வுபெற  இன்னும் 15 ஆண்டுகள்  உள்ளன. அந்த வகையில், நீங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய லாம். ரூ.10 ஆயிரத்தை  நான்கு ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். தலா ரூ.2,500 என்ற அளவில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட்லைன் ஈக்விக்டி ஃபண்ட், மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பிரைமா ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து வரவும்.’’

எனது கார் இன்ஷூரன்ஸ் பாலிசியை, நான் வாங்கவிருக்கும் இன்னொரு பழைய காருக்கு மாற்றிக்கொள்ள முடியுமா? அப்படி மாற்றும்பட்சத்தில், நோ க்ளெய்ம் போனஸை அந்த வாகனத்திற்கு மாற்றிக்கொள்ள இயலுமா?

ஷ்யாம்குமார், கும்பகோணம்

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்   

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘உங்கள் பழைய காரின் இன்ஷூரன்ஸ் பாலிசியில் என்.சி.பி (NCB) இருக்கும்பட்சத்தில் அதைத் தாங்கள் வாங்கும் காருக்குத் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பாலிசியை மாற்ற முடியாது. ஆர்.சி-யில் பெயர் மாற்றம் செய்தபின் 14 நாள்களுக்குள் இன்ஷூரன்ஸ் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.’’

நான் மாதச் சம்பளம் வாங்குபவன்.  குடும்பத் தலைவியாக உள்ள என் மனைவியின் பெயரில்  வைப்புநிதி முதலீடு செய்துள்ளேன். அந்த வருமானத்துக்கு வரி கட்டவேண்டுமா, வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா, அவருடைய வருமானத்தை எந்தக் கணக்கில் காட்டுவது?

கேசவமூர்த்தி, திருச்சி

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர்  

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘முதலீடு மீதான உங்களுடைய மனைவியின் வருமானம், வருமான வரி வரம்பைத் தாண்டினால் வரி கட்டியாக வேண்டும். அவருடைய வருமானத்தைப் பொறுத்து வரிப் பிடித்தம் இருக்கும். வைப்பு நிதிகளிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் அவரது இதர வருமானங்களையும் சேர்ந்து வரி கணக்கிடப்படும். அவரது முந்தைய சேமிப்பிலிருந்து வைப்பு நிதி முதலீடுகள் இருந்தாலோ அல்லது நீங்கள் பரிசாகக் கொடுத்த தொகையாக இருந்தாலோ, அதன்படி அந்த வருமானமாகக் கணக்கில் கொள்ளப்படும். அதே நேரத்தில் சட்டப்படி, மனைவி பெயரில் கணவன் பெரும் தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் பெரும் தொகை வருமானமாக வந்தால், அந்த வருமானம் கணவரின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, அவர் வரி கட்ட வேண்டியிருக்கும்.’’ 
  
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடப்பட்டபோது வாங்கிய 300 பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை என்ன செய்யலாம்? 

திருப்பதி வெங்கடேஷ், ராஜபாளையம்


எம்எஸ்ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர் 

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி, மார்ச் 2018-உடன் முடிந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளது. எனினும், அந்த நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. ஜெய்பிரகாஷ் குழுமத்தின் மின்சார உற்பத்திப் பிரிவைக் கையகப்படுத்துவதற்காகப் பெருந்தொகையை முன்பணமாகக் கொடுத்தது தான் இந்த நிறுவனத்தின் வருமான இழப்புக்கு முக்கியக் காரணமாகும். இந்தக் கையகப்படுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லையென்பதால், முன்பணமாகக் கொடுத்த தொகை திரும்பப் பெறப்படும். ஆனால், அதற்குச் சிறிது காலம் பிடிக்கும். நீங்கள் ஐ.பி.ஓ வெளியிடப்பட்ட சமயத்திலேயே இந்தப் பங்கினை வாங்கி முதலீடு செய்திருப்பதால், உங்களுடைய முதலீட்டுத் தொகை குறைவாகவே இருக்கும். இந்த நிறுவனம் பன்முகமாகச் செயல்பட்டு வருவதால், இந்தப் பங்குகளை விற்றுவிடாமல் அப்படியே சிறிது காலம் வைத்திருப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.’’

பங்குச் சந்தை முகவராக இருக்கும் எனது நண்பர், பங்குச் சந்தை நல்ல நிலையில் இருப்பதாகக் கூறி சில பங்குகளை வாங்கச் சொல்கிறார். பணம் இல்லையென்று கூறினால், தனிநபர் கடன் வாங்கி அதன்மூலம் பங்குகளை வாங்கச் சொல்கிறார். இப்படிச் செய்வது சரியா என்று கூறவும்.

முத்துக்குமார், உசிலம்பட்டி.

கனகா ஆசை, நிதி ஆலோசகர் 

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘உங்கள் நண்பர் கூறுவதுபோல, தற்போதைய சூழல், பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தகுந்த நேரம் என்பதில் தவறில்லை. ஆனால், தனிநபர் கடன் வாங்கி, அந்தத் தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதென்பது சரியான முடிவல்ல. பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட கால நோக்கில் லாபம் தரக்கூடிய ஒன்று என்பதால் தங்களிடமுள்ள தேவைக்குப் போக மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வதே சரியாக இருக்கும். கடனுக்கு மாதாமாதம் வட்டி கட்ட வேண்டியதிருக்கும். இதனால், தனிநபர் கடன் உங்களைச் சிக்கலில் கொண்டுபோய் விடக்கூடும். எனவே, கவனமாக இருங்கள்’’.

ஒருவரின் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதத் தொகையை முதலீடு செய்யவேண்டும், குழந்தை களின் கல்வி மற்றும் ஓய்வுக்காலத்திற்கான முதலீட்டு அளவைக் கணக்கிடும் முறை எது?

மைதிலி நாராயணன், கோவை.


என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்   

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘முதலீட்டுக்கு எந்தவொரு திட்டவட்டமான கணக்கீடும் கிடையாது என்றாலும், ஒருவரது வருமானத்தில் 30 - 50% வரை முதலீடு செய்வது நல்லது. குழந்தைகளின் கல்விக்கான முதலீடு என்பது, அவர்களின் வயது மற்றும் கல்விக்கான தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கலாம். ஓய்வூதியத்திற்கான முதலீடு என்பது ஒருவரின் வயது மற்றும் ஓய்வுபெறும் காலத்தைப் பொறுத்து நிர்ணயிக்கலாம். முதலீட்டுக் காலம் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்தால், பங்குச் சந்தையிலும், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள் என்ற அளவில் இருந்தால் கடன் சார்ந்த ஃபண்டு களிலும், பேலன்ஸ்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். உங்களுக்கான தேவைக் கேற்ப எமர்ஜென்ஸி ஃபண்டுகள், எஸ்.ஐ.பி மற்றும் நீண்ட கால முதலீடுகளை முறையாக நிதி ஆலோசகரின் மூலம் திட்டமிடுங்கள்.’’

என் வயது 29. என்னால் தற்போது மாதம் 8,000  சேமிக்க முடியும். எனது ஓய்வூதியம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப 30 ஆண்டுக்காலத்திற்கான முதலீட்டு ஆலோசனை கூறுங்கள்.

ரமேஷ், குடியாத்தம்

த.சற்குணன், நிதி ஆலோசகர்  

வீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

‘‘நீங்கள் ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.4,000, ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.4,000 மாதந்தோறும் முதலீடு செய்துவந்தால், தோராயமாக 12% கூட்டு வளர்ச்சியில் 30  ஆண்டுகள் கழித்து ரூ.2.50 லட்சம்  வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. முதலீடு நீண்ட காலம் என்பதால், 15%  கூட்டு வளர்ச்சியில்கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை, முதலீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்ந்து  கொள்ளவும். இதன்மூலம் ஓய்வூதிய மாக மாதந்தோறும் ரூ.1,25,000 வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.’’

தொகுப்பு : தெ.சு.கவுதமன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு