Published:Updated:

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி
உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

கா.முத்துசூரியா

பிரீமியம் ஸ்டோரி

சிறிய உணவகம் ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சந்திரமோகனுக்கு 62 வயது. கவலையுடன் அவர் தன் கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார். 

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

 “நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். ஓய்வுபெறும் தருவாயில் எனக்கு மாதம் ரூ.65,000 சம்பளம். ஆரம்பத்திலிருந்தே வருமானம் மொத்தத்தையுமே தாராளமாகச் செலவு செய்தே பழகிவிட்டேன்.

எனக்கு ஒரே ஒரு மகள். கடன் வாங்கித்தான் படிக்க வைத்தேன். ஓய்வுபெற்றதும் எனக்கு பி.எஃப், கிராஜூவிட்டி என மொத்தம் ரூ.18 லட்சம் கிடைத்தது. கடனை அடைத்தது போக, மீதமுள்ள பணத்தில் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்குப்பிறகு மகளும், மருமகனும் மும்பை சென்றுவிட்டார்கள். நான் சம்பாதித்தால்தான் நானும், என் மனைவியும் வாழமுடியும் என்ற நிலையில், இந்த வேலையைச் செய்துவருகிறேன்” என்றார்.

மதுரையைச் சேர்ந்த ஜீவானந்தம் எல்லாவற்றிலுமே பக்காவாகப் பிளான் பண்ணிச் செய்பவர். கோடை சுற்றுலாவுக் காகத் தன் மனைவியுடன் கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

“நான் சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்த்தேன். ஓய்வுபெறும் காலத்தில் ரூ.68 ஆயிரம் சம்பளம். ஆரம்பத்திலிருந்தே வருமானத்துக்குள் செலவுகளைச் சுருக்கி  செய்வதற்குப் பழக்கப்படுத்திக்கொண்டேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரையும் நன்றாகப் படிக்க வைத்துத் திருமணமும் முடித்து வைத்துவிட்டேன். 

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழிஎன் வருமானத்தில் 25 சதவிகிதத்தை எதிர்காலத்துக்காக முதலீடு செய்தேன். அதில் 10 சதவிகிதத்தை என் ஓய்வுக்காலத்துக்கு மட்டும் ஒதுக்கினேன். ஓய்வுபெற்றபிறகு, நான் அதுவரை சேர்த்து வைத்த கூட்டுத்தொகையின் (Corpus) மூலம் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வருகிறது. ஓய்வுபெறுவதற்கு  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தேவையான அளவுக்கு மெடிக்ளெய்ம் பாலிசியை நான் எடுத்துவிட்டதால், பெரிய அளவில் கவலைகொள்ளவோ, பிள்ளைகளை நம்பி இருக்கவோ எனக்கு அவசியமில்லை” என மகிழ்ச்சியாகச் சொன்னார்.

ஜீவானந்தம் போல, திட்டமிட்டு வாழ்பவர்கள் நம்மில் மிகக் குறைவுதான். சந்திரமோகன்கள் இங்கே நிரம்பிக் கிடக்கிறார்கள். ஆனால், நம் எல்லோருக்குமே ஜீவானந்தம் போல வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் ஆசை. ஆசை இருந்தால் மட்டும்  போதுமா, அதற்கு நாம் எப்படித் திட்டமிட வேண்டும் என  நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். பல்வேறு விஷயங்களை அவர் உதாரணங்களுடன் விளக்கிச்  சொன்னார்.

ஓய்வுக்கால முதலீடு ஏன் அவசியம்?

“19-ம் நூற்றாண்டில் மனிதர்களின் சராசரி ஆயுள்காலமே 30 வயதுக்குள்தான் இருந்தது. மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி யால் இன்றைக்கு மனிதனின் வாழ்நாள் 70 - 85 வயதுவரை அதிகரித்திருக்கிறது. தற்போது ஓய்வுக்காலத்துக்குப்பிறகும் 20 - 30 வருடங்கள் வாழ்க்கையை வாழும் நிலை உருவாகியிருக்கிறது. 

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

முப்பது வருடங்களுக்குமுன்பு கூட்டுக் குடும்பமாகத்தான் நாம் வாழ்ந்தோம். பெரிய செலவுகள் கிடையாது. குடும்பத்தில் ஒருவரின் சம்பாத்தியம் சரியில்லையென்றால்கூட, நன்றாகச் சம்பாதிக்கும் இன்னொருவரின் வருமானத்தைக்கொண்டு சமாளிக்கும் நிலை இருந்தது. ஆனால், இன்றைக்குப் படித்துவிட்டு வேலைக்காக வெவ்வேறு ஊருக்கு, நாட்டுக்குப் போய், தனித்தனிக் குடும்பங் களாக வாழ்கிறார்கள். தங்கள் குடும்பச் செலவுகள், குழந்தைகள் படிப்பு எனச் செலவுகள் அதிகரித்துவிட்டதால், ஊரில் இருக்கும் பெற்றோருக்குப் பணம் அனுப்புவதுகூட குறைந்துவிட்டது. எனவே, குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம், நம் ஓய்வுக்காலம் என வாழ்க்கையின் அத்தியாவசிய இலக்குகள் ஆகிய மூன்றில் முக்கியமான தாக ஓய்வுக்காலத் திட்டமிடலைச் செய்ய வேண்டியுள்ளது.

இன்றைக்குப் பலரும் சந்திக்கும் பிரச்னையே, சம்பாதிக்கும் காலத்தில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுதான். ஓய்வுபெற்றபிறகு அவர்களால் எளிதில் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அப்படியானால், பழக்கப்பட்டுவிட்ட வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப ஓய்வுக்காலத் திட்டமிடலைச் செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

வயதாகும் காலத்தில் பலருக்கு பல நோய்கள் வருவதும் தவிர்க்க முடியாது.  மாதம் ரூ.3,000 - 5,000 வரைக்கும் மருந்து, மாத்திரைக்கு மட்டுமே செலவு செய்பவர்கள் இன்றைக்கு நிறைய பேர்.  இந்தச் செலவுகளை எல்லாம்  சமாளிக்கும் திட்டமும் ஓய்வுக்காலத் திட்டமிடலில் அவசியம்.

இன்றைக்கு 90% பேருக்கு பென்ஷன் இல்லை. ஓய்வுக்காலப் பலன்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்குக் கிடைப்பதில்லை. என்றாலும், நம் நாட்டில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஓய்வுக்காலத்துக்காக எந்தவிதமான திட்டமிடலையும்  செய்யாமல் இருக்கிறார்கள். ஆனால்,   அமெரிக்காவில் ஓய்வுபெறும் காலத்தில் ஆறு பேரில் ஒருவர் மில்லியனராக இருக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதுபோன்ற நிலை இந்தியாவில் உருவாகவேண்டுமானால், ஓய்வுக் காலத்துக்கான திட்டமிடலை எல்லோரும் செய்வது அவசியம். 

ஓய்வுக்கால பிளானை எப்படி உருவாக்குவது?

நம்முடைய வாழ்நாள், வாழ்க்கைத் தரம், ரிஸ்க் எடுக்கும் திறன் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் ஓய்வுக்கால திட்டமிடலைச் செய்ய வேண்டும். நம் எதிர் காலத் திட்டமிடலுக்கு முதலீடு செய்யும்முன் பணவீக்கம் என்னும் பூதத்தைச் சமாளிக்கும் வகையில் நம் முதலீடுகள் இருக்கிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது நம் கையில் இருக்கும் ரூ.25 லட்சம் நமக்குப் பெரிய தொகை போல தெரியலாம். ஆனால், பண வீக்கத்தைத் தாண்டி வருமானம் தரும் திட்டத்தில் இந்தப் பணத்தை முதலீடு செய்யாமல் போனால், இந்தப் பணத்திலிருந்து பெரிய வருமானம் எதையும் எதிர்பார்க்க முடியாது.   

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

  பணவீக்கத்தைத் தாண்டி வருமானத்தைப் பெற ஓரளவு ரிஸ்க் எடுப்பது அவசியம். ஆனால், இப்படி ரிஸ்க் எடுக்கும்போது பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பங்குச் சந்தை சரிவு, ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, பொருளாதாரச் சுணக்கம் போன்ற காரணங்களால் நம் முதலீட்டு வருமானம் குறைய நேரிடலாம். அப்படிக் குறைகிற போது அதனை ஈடுசெய்ய உபரிப் பணத்தைக் கூடுதலாக முதலீடு செய்து பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டும்.

ஓய்வுக்காலத்துக்காக ஃபிக்ஸட் டெபாசிட், பி.பி.எஃப், என்.பி.எஸ் உள்ளிட்ட பல முதலீடுகளில் பலரும் முதலீடு செய்கிறார்கள். ஆனால், இளம் வயதிலேயே அதற்கான முதலீட்டைத் தொடங்கும்பட்சத்தில் ரிஸ்க் அதிகமுள்ள முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து அதிக வருமானத்தினைப் பெறலாம். குறைந்தபட்சம் 12% வருமானம் தர வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், நீண்டகாலத்தில் நம் ஓய்வுக்காலத்துக்கான இலக்கை அடையலாம்.

பொதுவாக, ஓய்வுக்காலம் என்றால் 58-60 வயது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது மாறிவிட்டது. பலரும் 45-50 வயதிலேயே  ஓய்வுபெற வேண்டும் என்கிறார்கள். எனவே, ஓய்வுபெறும் காலகட்டத்தையும் கவனத்தில்கொள்வது அவசியம். உதாரணமாக, 30 வயதாகும் ஒருவர், 45 வயதில் ஓய்வுபெற நினைக்கிறார். ஓய்வுக்காலத்தில் கூட்டுத்தொகையாக சுமார் ரூ3.27 கோடியை அவர் சேர்க்க விரும்புகிறார் எனில், அவர் இன்றிலிருந்து மாதமொன்றுக்கு ரூ.65 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். 

இன்னொரு முக்கியமான விஷயம், பெண்களின் வாழ்நாள் ஆண்களைவிட 3-4 ஆண்டுகள் அதிகம் எனப் பல ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, ஓய்வுக்காலத் திட்டமிடலில் மனைவியின் வாழ் நாளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

குடும்பச் செலவுகளும், ஓய்வுக்காலக் கூட்டுத்தொகையும்


ஒவ்வொருவரும் தங்களுடைய தற்போதைய குடும்பச் செலவுகளைக் கவனத்தில் கொண்டே சேர்க்க வேண்டிய கூட்டுத் தொகையை முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, 30 வயதாகும் ஒருவர் தனது குடும்பச் செலவாக மட்டும் ரூ.30 ஆயிரம் செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 58 வயதில் அவர் ஓய்வுபெறும்போது, 7% பணவீக்கம் அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் தேவைப்படும். அவருடைய வாழ்நாள் 85 வயது என்ற அடிப்படையில் கணக்கிட்டால், அவர் ரூ5.63 கோடி கூட்டுத் தொகையைச் சேர்க்க வேண்டும். அதாவது, மாதமொன்றுக்கு ரூ.20,650 முதலீடு செய்ய வேண்டும். (இது உங்கள் பிஎஃப் தொகையையும் சேர்த்துக் கணக்கிடப்பட்டது. உதாரணமாக, நீங்கள் செலுத்தும் பி.எஃப் தொகை ரூ.6,000 எனில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியது ரூ.14,650). வயது மற்றும் குடும்பச் செலவுகளுக்கேற்ப சேர்க்க வேண்டிய கூட்டுத் தொகையும், அதற்காகச் செய்ய வேண்டிய மாதாந்திர முதலீடுகளும் நபருக்கு நபர் மாறுபடக்கூடும் (பார்க்க அட்டவணை 1). 

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டிய விஷயம், நாம் ஓய்வுக்காலத்துக்காகச் சேர்த்து வைக்கும் பணம் மருத்துவச் செலவுகளில் கரைந்துபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதே. எனவே, ஓய்வுபெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே தேவையான அளவுக்கு மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் இலக்கு

‘‘எனக்குக் கொஞ்சம் விவசாய நிலம் இருக்கிறது’’, ‘‘எனக்கு வீட்டு வாடகை மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும்’’, ‘‘என் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கிறேன்; அவர்கள் என்னை ஓய்வுக்காலத்தில் பார்த்துக்கொள்வார்கள். எனவே, நான் ஓய்வுபெறும் காலத்தில் ஒரு கோடி ரூபாய் சேர்த்தால் போதும்’’ என்று சிலர் நினைக்கின்றனர்.  ஓய்வுக் காலத்தில் நம் எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக்கொள்கிற அளவுக்கான கூட்டுத்தொகையை நம்மால் சேர்க்க முடியவில்லை என்றாலும், குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்கிற அளவுக்காவது கூட்டுத் தொகையைச் சேர்க்க வேண்டியது அவசியம்.  இதற்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம். உங்கள் வயதின் அடிப்படையில் மாதமொன்றுக்கு எவ்வளவு முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்யத் தொடங்குங்கள். (பார்க்க அட்டவணை 2)

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை இளம் வயதிலேயே தொடங்குவதுதான். இளம்வயதிலேயே மிகக் குறைவான தொகையை முதலீடு செய்தாலே போதும். உதாரணமாக, 25 வயது இளைஞர் ஒருவர் தன் ஓய்வுக் காலத்துக்காக ஒரு கோடி ரூபாய் சேர்க்க நினைக்கிறார் எனில், அவர் மாதம் ரூ.1,980 மட்டும் முதலீடு செய்தால் போதும். ஆனால், ஒருவர் தனது 45 வயதில் ஒருவர் தன் ஓய்வுக்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் சேர்க்க நினைக்கிறார் எனில், அவர் மாதம். ரூ.26,867 முதலீடு செய்ய வேண்டும். இன்றைக்குக் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஓர் இளைஞன் மாதந்தோறும் ரூ.1,980 முதலீடு செய்வது பெரிய விஷயமாக இருக்காது. மேலும், இளம் வயதில் குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து, அந்த முதலீட்டைப் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளும்போது, ரூ.1 கோடி என்ற இலக்கைத் தாண்டி, கூடுதலான  பணத்தைக் கூட்டுத்தொகையாகச் சேர்க்க முடியும். இதன்மூலம் நம் பிற தேவைகளையும் நம்மால் எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கஷ்டப்படப் போறேனோ... அந்த ஆண்டவன் சீக்கிரமா கொண்டுபோய் சேர்த்துட மாட்டானா..” என அறுபது வயதுக்குமேல் இருக்கும் பலரும் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். காலத்தே பயிர் செய்யாமல் போனதுதான் அவர்கள் செய்த பெரும் தவறு. அறுபது வயதில் நீங்களும் அதுபோல புலம்பாமல் இருக்க வேண்டுமெனில், இன்றைய வயதைப் பார்க்காமல், ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்யத் தொடங்குவதுதான். அப்படி நீங்கள் செய்யும்பட்சத்தில், உங்கள் ஓய்வுக்காலம் உண்மையிலேயே ரசித்து அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்!  

படம் : பா.காளிமுத்து

மாதாந்திரச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ்!

ய்வுக்கால முதலீட்டைச் செய்பவர்கள் எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகளைச் செய்வதே நல்லது. ஆனால், பலரும் செய்யும் தவறு, ஓய்வுக்காலத்துக்காக ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்வதுதான். “கிடைக்கும்போது வாங்கிப் போடுங்க... கடைசி காலத்துக்கு உதவும்” என்று பலரும் சொல்வதால், வீடுகளாகவும், மனைகளாகவும் வாங்கிப் போட்டுவிட்டு, தேவையான காலத்தில் அவற்றை விற்க முடியாமலும், வீட்டை வாடகைக்கு விட்டு நிர்வகிக்க முடியாமலும் கஷ்டப்படுகிறவர்கள். 

ஓய்வுக்காலத்துக்காகப் பணம் எதையும் சேர்க்கவில்லை; இந்த வீட்டைத் தவிர வேறு சொத்து எதுவும் இல்லை என்கிறவர்கள் ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்னும் வழிமுறையைப் பின்பற்றி, குடியிருக்கும் வீட்டை வங்கியில் அடமானமாக வைத்து, ஓய்வுக்காலச் செலவுகளைச் சமாளிக்கலாம். இந்த முறையில், வங்கியானது உங்கள் வீட்டின் மதிப்புக்கேற்ப மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும்.  உங்கள் ஆயுள்காலத்துக்குப்பிறகு அந்த வீட்டை விற்று, வங்கியானது தனது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும். அல்லது வாரிசுகள் விரும்பினால் உரிய தொகையைச் செலுத்தி அந்த வீட்டை மீட்டுக்கொள்ளலாம்!

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்?

மு
தலீடுகளை பல்வேறு முதலீட்டு வகைகளில் பிரித்து முதலீடு செய்யக் கூடிய அஸெட் அலோ கேஷன் ஃபார்முலாவைப் பின்பற்றுவது, உங்கள் முதலீடுகளில் ரிஸ்க்கைப் பரவலாக்கி, வருமானத்தை அதிகரிக்க உதவும்.
 
உதாரணமாக, 25 வயதில் நன்றாகச் சம்பாதிக்கும், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் பங்கு சார்ந்த முதலீடுகள் 50%, கடன் சார்ந்த முதலீடுகள் 30%, ரியல் எஸ்டேட் முதலீடுகள் 15%, தங்கம் 5% இருக்க வேண்டியது அவசியம். உங்கள் ஓய்வுக் கால முதலீட்டை உங்கள் வருமானம், வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் போன்ற வற்றுக்கு ஏற்ப  அமைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

ஓய்வுக்காலம் வசந்தகாலமாக இருக்க வேண்டும்!

செ
ன்னையைச் சேர்ந்த    கே.ராமச்சந்திரன், சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து 2010-ல் ஓய்வுபெற்றவர்.  ஓய்வுக் காலத் திட்டமிடல் குறித்த தனது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

 “நான் பணிபுரிந்தது மிகச் சிறந்த நிறுவனம். எனவே, எனக்கு பி.எஃப், கிராஜூவிட்டி என ஓய்வுக்காலப் பலன்கள் எல்லாம் சிறப்பாகக் கிடைத்தன. நான் ஓய்வுக்காலத்துக்கு எனத் தனியாக எதையும் திட்டமிட்டு சேர்க்கவில்லை.  என்றாலும், எனக்கு பரிட்சயமான சில முதலீடுகளைச் செய்தேன். எஃப்.டி, பங்குச் சந்தை எனச் சில முதலீடுகளில் கணிசமான அளவுக்குப் பணம் சேர்க்க முடிந்தது. ஓய்வுக்காலத்துக்கான கூட்டுத்  தொகையை ஓரளவு சேர்த்ததாலும், என் மகன் நல்ல நிலையில் இருப்பதாலும், என்னால் ஓய்வுக்காலத்தை இனிமையாகக் கழிக்க முடிகிறது.

இப்போதெல்லாம் முதலீடு செய்வது குறித்த விழிப்புஉணர்வு பெரிய அளவில் வந்துவிட்டது. விரும்பியவாறு வாழ்க்கையை வாழவேண்டும், வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று  எல்லோருக்குமே ஆசை வந்துவிட்டது. ஓய்வுக்குப் பிறகு இதையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் ஆரம்பக்காலத்திலேயே ஓய்வுக்காலத்துக்கான இலக்கை நிர்ணயித்து, முதலீட்டைத் தொடங்க வேண்டும் என என் மகனிடம் வலியுறுத்தினேன். 

நான் சொன்னதைக் கேட்டு, என் மகனும் இப்போதே அவனது ஓய்வுக்கால முதலீட்டைத் தொடங்கிவிட்டான். ஓய்வுக்காலம் என்பது நமக்கு வசந்தகாலமாக இருக்க வேண்டுமானால் இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பிக்க வேண்டியது அவசியம்” என்றார்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு