
- ஆர்.மோகன பிரபு,
சார்ட்டட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்
அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு, மறக்கப்பட வேண்டிய ஆண்டாகவே 2018 அமைந்துள்ளது. முக்கியக் குறியீடான எஸ் & பி 500 கடந்த ஆண்டில் (2018-ல்) சுமார் 11% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு தனது வரலாற்று உச்சமதிப்பிலிருந்து 19% வரை சரிந்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளைப் பிரதிபலிக்கும் நாஸ்டாக் இண்டெக்ஸின் பத்தாண்டு காளை ஓட்டம் சுமார் 8% வீழ்ச்சியுடன் நிறைவு பெறவுள்ளது. நாஸ்டாக் சுமார் 23% மதிப்பைத் தனது உச்சத்திலிருந்து இழந்திருக்கிறது. உலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான டவ் ஜோன்ஸ் 12% இறக்கம் கண்டிருக்கிறது. அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன, 2019-ல் இதன் விளைவுகள் எப்படி இருக்கும், இதனால் இந்தியப் பங்குச் சந்தைகளில் என்ன மாதிரியான மாற்றம் வரும் என்பதைப் பார்ப்போம்.
ஃபெடரல் ரிசர்வின் பணமீட்சித் திட்டம்
கடந்த 2008-ல் நேரிட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் பண வழங்கல் (Qunatitative Easing) திட்டத்தின் அடிப்படையில் சுமார் 4 ட்ரில்லியன் டாலர் பணத்தை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.280 லட்சம் கோடி) மூன்று தவணைகளில் சந்தைகளுக்குள் இறக்கியது. மேலும், 4.5% அளவுக்கு இருந்த முக்கிய வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் ஜீரோவுக்கு அருகில் எனும் அளவுக்குக் குறைத்தது. மிகக் குறைந்த வட்டி விகிதம் மற்றும் மிக அதிக அளவில் புழக்கத்திலுள்ள பணம் ஆகிய இரண்டும் சேர்ந்துகொள்ள, பெரிய நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் எளிய முறையில் சந்தையில் கடன் கிடைக்கத் தொடங்கியது. பல பெரிய நிறுவனங்கள், கடன் வாங்கி தமது பங்குகளைச் சந்தையில் இருந்து வாங்கத் தொடங்கின. இதனால் பங்குகளின் விலை உயரத் தொடங்கின. பங்கின் தனிப்பட்ட வருவாயும் உயரத் தொடங்கியது. முதலீட்டாளர்களின் கவனமும் பங்குச் சந்தைகளை நோக்கித் திரும்பத் தொடங்கியது. ட்ரம்ப் ஆட்சியின் வரிச் சலுகைகளும், அமெரிக்க பொருளாதாரத்தின் சிறப்பான வளர்ச்சியும் பங்கு சந்தைகளுக்கு அதிக ஊக்கத்தைக் கொடுத்தன.
ஆனால், கடந்தாண்டு அக்டோபரில் ஃபெடரல் ரிசர்வ் நிதிச் சந்தைகளுக்கு வழங்கிய நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கியது. மாதந்தோறும் சுமார் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடி) என்ற அளவுக்குப் பணத்தை ஃபெடரல் ரிசர்வ் திரும்பப் பெற்றுக்கொள்வது என்ற (Withdrawal of Quantitative Easing) திட்டம் சற்று காலதாமதமாகவே சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதத்தை வளர்ச்சி மந்தமடையலாம் என்ற அச்சமும் கூடவே சேர்ந்துகொள்ள, அமெரிக்கப் பங்கு சந்தைகள் பெருமளவு வீழத் தொடங்கின.
அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பாக அமெரிக்க ஃபெடரல் வங்கிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் கடுமையான கருத்து மோதல் நடந்துவருகிறது. அடிக்கடி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடாது என்கிறார் ட்ரம்ப்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபான்க் (FAANG) ஸ்டாக்ஸ்களின் அதிவேக வளர்ச்சி
கடந்த பத்தாண்டுகளின் இணையதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் வேகமாக வளர்ச்சி கண்டன. இந்த வளர்ச்சியை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்காவின் ஐந்து பிரபலமான தொழில்நுட்ப ஜாம்பவான்களான, ஃபேஸ்புக், அமேசான், ஆப்பிள், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் கூகுள் (தற்போது ஆல்பாபெட்) நிறுவனங்கள் உலகில் உள்ள மூலை முடுக்குகள் எல்லாம் கால்பதிக்கத் தொடங்கின. இந்த நிறுவனங்களின் அசுர வளர்ச்சி பங்கு சந்தைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.
ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் அதிக வருவாய் கொடுக்கத் தவறிய கடைசிப் பத்து ஆண்டுகளில், இயல்பாகவே பங்குகளில் அதிக முதலீடுகள் குவிந்தன. மேற்சொன்ன தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாகத் தோற்றமளித்ததன் காரணமாக, ஃபான்க் பங்குகளின் மீது முதலீட்டா ளர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.
நாஸ்டாக் குறியீட்டில் ஃபான்க் பங்குகளின் வெயிட் 30 சதவிகிதத்திற்கும் மேலே உயர்ந்ததன் தொடர்ச்சியாக இ.டி.எஃப் நிதிகளின் முதலீட்டின் பெரும்பங்கு இந்த நிறுவனங்களுக்கே வரத் தொடங்கியது. பணம் பணத்தைத் துரத்தும் என்ற சந்தை மொழிக்கேற்ப, ஃபான்க் பங்குகளில் அதிக பட்சம் நெட்ஃப்ளிக்ஸ் 99 மடங்கு வரை உயர்ந்தது.

வளர்ச்சிக்குப்பின் வீழ்ச்சி
ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் இந்தப் பங்குகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. உலகப் பொருளாதாரம் மந்தம் அடைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளிவரத் துவங்கியபின், தொடர்ச்சியான அதிவேக வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளும், பி/இ விகிதாச்சாரம் போன்ற பங்கின் அதிகப்படியான உள்மதிப்பீடுகளும் கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இவற்றின் பி/இ மிகமிக அதிகமாக உள்ளன. உதாரணமாக, அமேசானின் பி/இ விகிதம் 75, நெட்ஃப்ளிக்ஸின் பி/இ விகிதம் 83. இவ்வளவு பி/இ விகிதம் இருந்தால், எப்படி இந்தப் பங்குகளை வாங்குவது என்று யோசிக்கிறார்கள் மக்கள்.
ஃபேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் சில சட்டச் சிக்கல்களிலும் மாட்டியுள்ளன. புதிய போட்டியாளர்களின் வருகையும், ஃபான்க் பங்குகளின் மீதான ஈர்ப்பைக் குறைத்துள்ளன. கடந்த சில மாதங்களில், நெட்ஃப்ளிக்ஸ் பங்கு அதிகபட்சமாக 45% வரை வீழ்ச்சி அடைய, கூகுள் குறைந்தபட்சமாக 24% வீழ்ச்சி அடைந்தது.
இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகும்கூட, ஃபான்க் நிறுவனங்களில் மிகச் சிறியதான நெட்ஃப்ளிக்ஸின் தற்போதைய சந்தை மதிப்பு, இந்தியாவின் (பட்டியலிடப்பட்ட) மிகப் பெரிய நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட அதிகம் என்பது இந்த நிறுவனங் களின் உலகளவிலான முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

இந்தியச் சந்தைகளில் தாக்கம்
உலகப் பங்குச் சந்தையில் அமெரிக்கப் பங்குச் சந்தை என்பது எப்போதும் சூரியன்தான். அமெரிக்காவுக்குச் சளி பிடித்தால், உலக அளவில் உள்ள பங்குச் சந்தைகள் தும்ம ஆரம்பித்துவிடும் என்கிறபோது, அமெரிக்கப் பங்குச் சந்தை சரியில்லை என்றால், இந்தியப் பங்குச் சந்தை மட்டும் எப்படி ஏற்றத்தில் இருக்கும்? அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிப்பது ஒருபக்கமிருக்க, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பணமீட்சித் திட்டம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்குத் தொடரவுள்ளதால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான ஆர்வம் இயல்பாகவே குறைந்து போகும். 2018-ல் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து பெருமளவு வெளியேறியிருப்பது இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது. மாதந்தோறும், ரூ.8,000 கோடி அளவிற்கு உள்நாட்டு முதலீடுகள் வந்துகொண்டு இருப்பது, இந்திய பங்கு சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தின் தாக்கத்தை ஓரளவுக்குக் குறைக்க உதவும் என்றாலும், நமது முதலீடுகளின் சிறப்பான வளர்ச்சிக்கு ஃபெடரல் ரிசர்வின் பணமீட்சித் திட்டம் என்பது ஒரு பாதகமான அம்சமே.
இந்தியப் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி பெரும்பாலும் உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளையே அதிகம் சார்ந்துள்ளது.எனினும், பத்தாண்டுகளில் இல்லாத அளவிலான அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி, கடந்த சில நாள்களாகவே இந்திய சந்தைகளிலும் எதிரொலிப்பதை உணர முடிகிறது. 2000-ல் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சியை ஃபான்க் பங்குகளின் சந்திக்க நேர்ந்தால், இந்திய சந்தைகளிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கவே செய்யும்.
குறிப்பு : இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே!