Published:Updated:

மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ

வரைவு அறிக்கை ஒன்றை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்த கருத்துகளை 2019, மார்ச் 6-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.

மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ
மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ

இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதை மேம்படுத்தலை இலக்காகக்கொண்டு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) அமைப்பு செயல்பட்டு வருகிறது. மருத்துவக் காப்பீட்டுக்கான அடிப்படை விதிமுறைகளை வரையறை செய்வதும், தேவைக்கேற்ப அதில் திருத்தங்கள் செய்வதும் இதன் தொடர்ச்சியான செயல்பாடாக உள்ளது. மேலும் காப்பீடு எடுத்துள்ள பாலிசிதாரர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாப்பது, புதிதாக காப்பீட்டுத் தொழிலில் நுழைய விரும்பும் நிறுவனங்களுக்கு அதற்கான உரிமையை வழங்குவது, கண்காணிப்பது போன்ற பணிகளையும் செய்துவருகிறது.

மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ

தற்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ, அனைத்து ஜெனரல் & மெடிக்கல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொதுவாக, சீரான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளைக்கொண்ட ஸ்டேண்டர்ட் மெடிகிளெய்ம் பாலிசியை விரைவில் கொண்டுவரவுள்ளது. அதுகுறித்த வரைவு அறிக்கை ஒன்றை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்த கருத்துகளை 2019, மார்ச் 6-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.

இதில் உள்ள முக்கிய அம்சங்களில் சிலவற்றை இங்கே காணலாம். 

  • மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கட்டாயம் இருக்கவேண்டிய அடிப்படையான கவரேஜ் மட்டுமே இருக்கும். கூடுதலாக ஆட்-ஆன் கவரேஜ் எதையும் சேர்க்க முடியாது. 
  • மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத்தொகை 50,000 ரூபாயாகவும், அதிகபட்ச மதிப்பு ரூ.10 லட்சமாகவும் இருக்கும். வெவ்வேறுவிதமான மருத்துவக்காப்பீட்டுப் பாலிசியின் கவரேஜைப் பொறுத்து காப்பீட்டுத் தொகையை, `மருத்துவக் காப்பீட்டு ஒழுங்குமுறை 2016' விதிமுறைகளின்படி இன்ஷூரன்ஸ் நிறுவனமே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
  • மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 முதல் 65 வரையிலான வயதுடையவர்கள், வாழ்நாள் முழுவதற்கும் புதுப்பித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு, பிறந்தது முதல் 25 வயது வரை இன்ஷூரன்ஸ் கவரேஜ் உண்டு. 
மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ
  • அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட காலத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சை, கண்பொறை நோய்க்கான சிகிச்சை, காயத்தின் காரணமாக எடுத்துக்கொள்ளும் பல் சிகிச்சை, நோய் அல்லது காயம் காரணமாக செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வியாதிகளுக்கான சிகிச்சை செலவுகளும் மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவர் ஆகும். 
  • மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க அவசியப்படாத குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கான க்ளெய்ம் பெறுவதற்காக, `24 மணி நேரம் மருத்துவமனை உள்நோயாளியாக சேர்க்கப்பட வேண்டும்' என்ற விதிமுறையில் தளர்வு செய்யப்படும்.
  • காப்பீட்டுத்தொகையின் துணை வரம்புகளுக்கேற்ப, ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கான மருத்துவச்செலவுகளும் மருத்துவக்காப்பீட்டில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ
  • மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகபட்சம் 30 நாள்கள் வரையிலான சிகிச்சைக்கான செலவுகளும், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியபின்னர், அதிகபட்சம் 60 நாள்கள் வரையிலான சிகிச்சை செலவுகளும் மருத்துவக்காப்பீட்டில் அடங்கும். இதில் மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், நோய்க்கூறு கண்டறியும் பரிசோதனைச் செலவு, மருந்துகளுக்கான செலவு ஆகியவை அடங்கும்.
  • தொடர்ந்து பாலிசியைப் புதுப்பித்து வருபவர்களுக்கு வழக்கமான போனஸ் தவிர, உடல்நலப் பரிசோதனைகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நோய் மேலாண்மை மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஆகும் செலவுகளுக்கு மருத்துவக்காப்பீட்டின்மூலம் ஊக்கத்தொகை சலுகையும் வழங்கப்படும்.  

இவைபோக, இன்னும் பல விதிமுறைகள் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டவுடன் அமலுக்கு வரும். அதன்பின் அனைத்து ஜெனரல் & மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி நிறுவனமும் கண்டிப்பாக இந்த ஸ்டேண்டர்ட் மெடிக்ளெய்ம் பாலிசியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.