Published:Updated:

ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?

ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?

பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?


ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் வாங்கலாமா அல்லது ஏஜென்ட் மூலம் வாங்கலாமா என்பது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள். இரண்டிலுமே சில சௌகரியங்களும் வசதிக்குறைவுகளும் இருக்கிறது என்றாலும், இவற்றுள் எது சிறந்தது என்பதைப் பார்ப்பதற்கு முன் சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்.  

எது நல்ல பாலிசி?

ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?

முதலில் எது நல்ல பாலிசி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நல்ல பாலிசியைக் கண்டுபிடிக்க பல நிறுவனங்களின் ஏஜென்டு களுடன் கலந்து பேச வேண்டும். இதற்கு நிதி தொடர்பான அறிவு ஓரளவுக்காவது இருக்க வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே.

சாதாரணமாக பிரீமியம் குறைவாக இருக்கும் பாலிசி நல்ல பாலிசி என பலரும் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. அது மாதிரியான பாலிசிகளில் சில சலுகைகள் இல்லாமல்கூட இருக்கலாம். குறைவாக பிரீமியம் வாங்கும் சில நிறுவனங்கள் கிளைம்களை அதிகமாக நிராகரிக்கலாம். இத்தகவல்கள் அத்துறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, சாதாரண மக்களுக்குத் தெரியாது.

தவிர, ஏதேனும் ஒரே ஒரு நிறுவனத்தின் ஏஜென்ட் சொல்வதை மட்டும் நம்பி பாலிசி எடுக்க வேண்டாம். காரணம், அவருக்கு அந்நிறுவனத்தின் பாலிசிகளைத் தவிர  வேறு பாலிசிகள் பற்றி எதுவும் தெரியாது. மற்ற நிறுவனத்தின் பாலிசிகளில் இருக்கும் சாதக, பாதகங்களை தெரிந்து கொள்ளாமல் ஒரு பாலிசி எடுப்பது நல்லதல்ல.

எவ்வளவு கவரேஜ் வேண்டும்?

##~##
சிலர் அதீத எச்சரிக்கை உணர்வோடு அதிக கவரேஜ் தொகைக்கு, அதிக காலத்துக்கு பாலிசி எடுக்கிறார்கள். இதன் காரணமாக பீரிமியம் தொகை மிக அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். சிலர் இதற்கு நேர்மாறாக மிகவும் குறைந்த அளவுக்கு அல்லது குறைந்த காலத்திற்கே பாலிசி எடுக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்துக்கு எவ்வளவு தொகைக்கு பாலிசி தேவை, எவ்வளவு காலத்துக்கு தேவை, எந்த பாலிசி தேவை, எந்த நிறுவனத்தின் பாலிசி உங்களுக்குச் சரியாக இருக்கும் என்பதை முறையான ஒரு நிதி ஆலோசகர்தான் சொல்ல முடியும். இதனால், பிரீமியமாக கட்டும் தொகை குறையும். இந்த காலத்தில் பணத்தைச் சேமிப்பது என்பது பணத்தைச் சம்பாதிப்பதுக்கு சமம். மேலும், சில பாலிசிகளில் இருக்கும் ரைடர்கள் பற்றியும் நிதி ஆலோசகர்தான் முழுமையாகச் சொல்ல முடியும்.

ஆன்லைன் Vs ஏஜென்ட்?

இனி பாலிசி எடுக்க ஆன்லைன் அல்லது ஆஃப்லைன், இதில் எது பெஸ்ட் என்று பார்ப்போம். முதலில் ஆன்லைன்..!

ஆன்லைன்!

ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?

ஆன்லைனில் வாங்கும் போது பிரீமியம் குறைவு என்பது சரிதான். ஆனால், யூலிப் பாலிசிகளை ஆன்லைனில் வாங்குவதற்கும் ஏஜென்டுகளிடம் வாங்கு வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆன்லைனில் வாங்குவதைவிட ஏஜென்ட் மூலம் வாங்குவதினால் சில சேவைகளை பெற முடியும், அவ்வளவுதான் வித்தியாசம். ஒரே தொகையைக் கட்டிவிட்டு ஏன் சேவைகளை இழக்க வேண்டும்?

மேலும், ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதான ஒன்று என்பதுபோல் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல. ஆன்லைன் மூலம் பாலிசி வாங்கும்போது உங்களைப் பற்றிய பல்வேறு விஷயங்களை மிகச் சரியாக எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.  

மேலும், ஆன்லைன் பாலிசி படிவத்தை நீங்களே நிரப்பும்போது சில தவறுகள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. சில உண்மைகளை உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் சொல்லாமல் விட்டுவிடக்கூடும். அதனால், இழப்பீடு கேட்டுச் செல்லும்போது பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பத்தை நிரப்பும்போது ஒரு நிதி ஆலோசகரோ அல்லது இன்ஷூரன்ஸ் ஆலோசகரோ உங்களுடன் இருப்பது நல்லது.

ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?

தவிர, ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் உங்கள் பாலிசி எந்த நிலைமையில் இருக்கிறது, உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேவையா, ஒருவேளை தேவையாக இருந்தால் எந்த மருத்துவமனையில் எப்போது பரிசோதனை என்பது போன்ற விவரங்களை நீங்களாகத்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஏஜென்ட் மூலம் என்கிறபோது தகவல்களை எளிதாக கேட்டுப் பெற முடியும்.

இது தவிர, ஆன்லைனில் பணம் கட்டும்போது சாஃப்ட்வேர் கோளாறுகள் நடக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அனைத்துத் தகவல்களையும் நிரப்பி பணம் செலுத்தும் சமயத்தில் இணையத்தில் ஏதாவது பிரச்னை என்றாலும் கூட நீங்கள் மேலும் முப்பது நிமிடம் செலவு செய்து தகவல்களை நிரப்ப வேண்டும்.

அதேபோல நீங்கள் வெளிநாட்டு இந்தியர் என்றாலும் பிரச்னைதான். காரணம், ஆன்லைனில் அப்படி ஒரு காலமே சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இல்லை. ஆன்லைனில் வாங்கும் அனைவருமே இந்தியர்கள் என்றே நினைக்கிறது இன்ஷூரன்ஸ் நிறுவனம். ஒருவேளை நீங்கள் பாலிசி எடுத்து, இழப்பீடு கேட்டுப் போனால், அடிப்படைத் தகவலை மறைத்துவிட்டீர்கள் என்று நிராகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆன்லைனா... ஏஜென்டா... எது சரி?

மேலும், பாலிசியைப் புதுப்பிப்பது உள்ளிட்ட தகவல்கள் நமக்கு மெயிலில் வரலாம். ஒருவேளை நீங்கள் கவனிக்காவிட்டால் பாலிசி முறிவடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஏஜென்ட் மூலம் எடுத்தால், அவர் உங்களுக்காக நினைவுபடுத்துவார். மேலும், கிளைம் நடைமுறைகளின் போதும் அவர் உடனிருப்பார்.

இத்தனைக்குப் பிறகும் நீங்கள் ஆன்லைன் மூலமே பாலிசி எடுக்க வேண்டுமெனில், அதற்கு இது உகந்த நேரமல்ல. ஆன்லைன் மூலம் பாலிசி எடுப்பது தொடர்பான குழப்பங்கள் முழுமையாகத் தீர இன்னும் சில வருடங்கள் ஆகும்.

இப்போதைக்கு ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் வாங்குகிறது, என்னென்ன வசதி செய்து தருகிறது என்பதை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்க ஆன்லைன் வசதியை பயன்படுத்திக் கொண்டால் போதும்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

எல்.ஐ.சி.: டேர்ம் பிளான் பிரீமியம் குறைகிறது..!

அண்மைக் காலமாக டேர்ம் பிளான் பாலிசியை பலரும் ஆர்வத்தோடு எடுத்து வருகின்றனர். இதற்கான பிரீமியம் தனியார் நிறுவனங்களில் குறைவாகவும், பொதுத்துறை ஆயுள் காப்பீடு நிறுவனமாக எல்.ஐ.சி.யில் அதிகமாகவும் உள்ளது. உதாரணத்துக்கு, 30 வயதான ஒருவர் 25 ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் பிளான் எடுக்கிறார் என்றால் ஆண்டு பிரீமியம் சுமார் 14,000 ரூபாயாக எல்.ஐ.சி.யில் இருக்கிறது. இதுவே தனியார் நிறுவனங்கள் எனில், இதில் 35 முதல் 40 சதவிகிதம் வரை பிரீமியம் குறைவாக இருக்கிறது. இதனை அடுத்து எல்.ஐ.சி.யும் டேர்ம் பிளான் பாலிசிக்கான பிரீமியத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து எல்.ஐ.சி. சேர்மன் டி.கே.மெஹ்ரோத்ரா கூறும்போது, ''டேர்ம் பிளான் பிரீமியத்தை மாற்றி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறோம். வரும் 2012-13-ம் நிதி ஆண்டில் புதிய பிரீமியம் நிர்ணயிக்கப்படும்'' என்று சொன்னதோடு, பிரீமியம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கிளைம் தருவதில் முன்னணியில் இருப்பதோடு, இழப்பீடு கேட்டு வரும் பாலிசியில் ஒரு சதவிகித பாலிசி அளவுக்கு மட்டுமே தள்ளுபடி செய்வதாகவும் சொல்லி இருக்கிறார். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை இது 9 சதவிகிதமாக உள்ளது.

- சேனா சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு