Published:Updated:

நிலநடுக்க இன்ஷூரன்ஸ்: வீட்டுக்குப் பாதுகாப்பு!

விழிப்புணர்வு

பிரீமியம் ஸ்டோரி
நிலநடுக்க இன்ஷூரன்ஸ்: வீட்டுக்குப் பாதுகாப்பு!

அண்மையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக தமிழ்நாட்டின் பல நகரங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கியது. இந்த நிலநடுக்கம் ஒன்றிரண்டு முறை வந்ததால், வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். பூகம்பம் வந்தால் நாம் வீட்டை விட்டு வெளியே வந்து தப்பித்துவிடலாம். ஆனால், நம் வீட்டுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

பூகம்ப பாதிப்பிலிருந்து நம் வீட்டை பாதுகாக்க, நம் வீட்டுக்கும் அவசியம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் நம் நாட்டில் இந்த பாலிசியை எடுத்திருப்பவர்கள் மிக மிகக் குறைவே. காரணம், இந்த பாலிசி பற்றி மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு உருவாகவில்லை.  

ஏன் தேவை இந்த பாலிசி?  

நிலநடுக்க இன்ஷூரன்ஸ்: வீட்டுக்குப் பாதுகாப்பு!

அண்மைக் காலமாக மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்றவை அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இவற்றின் பாதிப்பால் வீடு இடிந்து விழுந்தாலோ, வெள்ளம் பாதித்தாலோ ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தால் இழப்பீடு கிடைக்கும்.

இந்த ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஹவுஸ் ஹோல்டர் பாலிசி, ஹவுஸ் ஓனர் பாலிசி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது ஒரு ஒருங்கிணைந்த பாலிசியாக அதாவது, பலவற்றுக்கு ஒருசேர காப்பீடு மற்றும் கவரேஜ் அளிக்கும் பாலிசியாக இருக்கிறது.

ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் வீடு தீ விபத்தால் பாதிப்படைவது, வீட்டிலுள்ள டிவி, தங்க நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போவது போன்றவற்றுக்கு இழப்பீடு தருவதாக இருக்கிறது. இந்த பாலிசியை பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். சொந்தமாக குடியிருக்கும் மற்றும் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுக்கும் இந்த பாலிசியை வீட்டின் உரிமையாளர் எடுத்துக் கொள்ள முடியும்.

எந்த வீட்டுக்கு கிடைக்கும்?

பழையது, புதியது என எல்லா வீட்டுக்கும் இந்த பாலிசி கிடைக்கும். ஆனால், மிகப் பழைய வீட்டுக்கு பாலிசி தரமாட்டார்கள். வீட்டின் சந்தை மதிப்பை மட்டும் (இடம் தவிர்த்து) கணக்கில் எடுத்துக் கொண்டு பாலிசி தருவார்கள். இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது வீட்டின் சந்தை மதிப்பு அல்லது திரும்பக் கட்டுவதற்கு ஆகும் செலவு என இருவிதமாக பாலிசி எடுத்துக் கொள்ளலாம். கட்டடத்தின் சந்தை மதிப்புக்கு எடுத்தால், தேய்மானம் கழித்து மீதித் தொகையை இழப்பீடாகத் தருவார்கள்.

திரும்பக் கட்ட வேண்டுமெனில், வீட்டைக் கட்ட கட்ட பல்வேறு நிலை களில் பணத்தைப் பிரித்து தருவார்கள். இந்த வகையில் பாலிசி பெற விரும்பினால் பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். கூடுதலாக கொஞ்சம் பிரீமியம் செலவானாலும் அதுதான் லாபகரமாக இருக்கும்.

பிரீமியம் எவ்வளவு?

##~##
ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்து நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல உதவி மேலாளர் (சந்தைப்படுத்துதல்) பி.மனோகரனை சந்தித்து கேட்டோம்.

''பூகம்ப கவரேஜ் பெற 2012 மார்ச் முதல், வீட்டு உரிமையாளர் பாலிசியுடன் தனியாக பூகம்ப பாதிப்புக்கு கவரேஜ் அளிக்கும் ரைடர் பாலிசியை அளித்து வருகிறோம். இதற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு      5 ரூபாய் கூடுதல் பிரீமியம் கட்ட வேண்டும். இதேபோல் புயல், வெள்ள பாதிப்புக்கும் கவரேஜ் வேண்டும் என்றால் இதே அளவு பிரீமியம் கூடுதலாகச் செலுத்த வேண்டும். இவை தவிர, தீவிரவாத பாதிப்புக்கு ஒரு லட்ச ரூபாய் கவரேஜூக்கு கூடுதலாக 30 ரூபாய் கட்டினால் போதும்'' என்றவர், பலரும் செய்யும் தவறு ஒன்றைக் குறிப்பிட்டார்.

''பாலிசியில் வீட்டின் கட்டடங்களைச் சேர்ப்பவர்கள் வீட்டுச் சுற்று சுவரை சேர்க்க தவறிவிடுகிறார்கள். அதையும் கட்டட மதிப்பில் சேர்த்து தனியாக குறிப்பிடுவது அவசியம். வெள்ளம், புயல், பூகம்ப பாதிப்பில் முதலில் சேதம் அடைவது வீட்டின் சுற்றுச் சுவராகத்தான் இருக்கின்றன. அந்த வகையில் அவற்றை பாலிசியில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அடுத்து, எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. மனையின் விலையைச் சேர்க்காமல் வீட்டின் சதுர அடி மதிப்பை கணக்கிட்டு, சதுர அடி எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைக்கும் தொகைக்கு காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.  

வீட்டு உரிமையாளர் பாலிசியுடன் பூகம்பம், மழை, வெள்ளம், தீவிரவாத தாக்குதல் போன்றவற்றுக்கு பாலிசி எடுத்துக் கொள்ள ஒரு லட்ச ரூபாய்க்கு சுமார் 75 ரூபாய்தான் பிரீமியம்.  

சில நூறுகளை மிச்சப் படுத்த நினைத்து, பல லட்சங்களை இழப்பது புத்திசாலித்தனமில்லையே!

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு