Published:Updated:

பக்கா ஏஜென்டை தேர்வு செய்ய 10 வழிகள்!

லைஃப் இன்ஷூரன்ஸ்:

பிரீமியம் ஸ்டோரி
பக்கா ஏஜென்டை தேர்வு செய்ய 10 வழிகள்!
##~##
ந்தியாவில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களில் தொண்ணூறு சதவிகிதத்தினர் ஏஜென்டுகளின் மூலமாகவே பாலிசிகளை எடுக்கிறார்கள். இந்த ஏஜென்டுகளில் பெரும்பாலோர் பாலிசிதாரர்களுக்கு ஏற்ற பாலிசிகளைத் தருவதைவிட, தங்களுக்கு நன்மை தருகிற பாலிசிகளையே கொடுக்கின்றனர் என்ற ஒரு பரவலான பேச்சு உள்ளது. சில ஏஜென்டுகள் பாலிசியின் விவரங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறான பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் விற்று விடுகின்றனர். நம்மில் பலருக்கு இன்ஷூரன்ஸைப் பற்றியான முழு விழிப்பு உணர்வு இல்லாததால், சிறந்த ஏஜென்டைத் தேர்வு செய்வது முக்கியம்.

சரியான ஏஜென்டை தேர்வு செய்வது எப்படி?

இன்ஷூரன்ஸ் வட்டார நிபுணர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டபோது, பத்து முத்தான விஷயங்களைச் சொன்னார்கள். அந்த விஷயங்கள் இனி:

1. ஏஜென்ட் தனிநபரா அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் ஏஜென்டா, இன்ஷூரன்ஸ் புரோக்கரா, சப்-புரோக்கரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அவர் ஐ.ஆர்.டி.ஏ. தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளவரா, அவரின் லைசென்ஸ் காலம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே பாலிசி பற்றி பேச வேண்டும்.

2. ஒரு ஏஜென்ட் எவ்வளவு காலமாக இந்த தொழிலில் இருக்கிறார், பகுதி நேரமாக வேலை செய்கிறாரா அல்லது முழுநேர ஊழியரா என்று கவனிக்க வேண்டும். பகுதி நேர ஏஜென்ட் எனில், அவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில் அவர் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை எனில் இந்த தொழிலை விட்டுவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய சர்வீஸ் பாதிப்படையும்.

3. ஒரு ஏஜென்ட் ஆபீஸ் வைத்திருக்கிறாரா அல்லது வீட்டிலிருந்து வேலை பார்க்கிறாரா என்பதை அறிவது அவசியம். இதன் மூலம் அவருடைய தொழில் நேர்த்தியை தெரிந்துகொள்ள முடியும். தவிர, ஒருவர் மட்டும் பாலிசிகளை விற்கிறாரா அல்லது ஒரு குழுவாகச் சேர்ந்து விற்கிறாரா என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.  

4. கார்ப்பரேட் கம்பெனி ஏஜென்ட் என்றால் அந்த கம்பெனியின் பிராண்ட் பற்றியும், கம்பெனியின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்வது நல்லது. அந்த நிறுவனம் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறது, பாலிசிதாரர்களுக்கு எப்படியெல்லாம் சேவை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். புரோக்கர்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும்.

பக்கா ஏஜென்டை தேர்வு செய்ய 10 வழிகள்!

5. ஒரு ஏஜென்ட் உங்களின் தேவைகளுக்கான பாலிசியை தருகிறாரா என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. அதாவது, பத்து ஆண்டுகள் கழித்து உங்கள் மகளின் படிப்புக்குத் தேவைப்படும்படி நீங்கள் பாலிசி கேட்கிறீர்கள். அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாலிசியின் திட்டங்கள் இருக்கிறதா என்பதைக் கவனிப்பது அவசியம். நீங்கள் கேட்கும் பாலிசியைத் தராமல், இந்த பாலிசியை எடுத்தால் உங்களுக்கு எட்டு ஆண்டுகளில் அதிக தொகை கிடைக்கும் என்று உங்களை திசை திருப்பும் ஏஜென்டுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது.

6. பாலிசி எடுக்கும்போது அதற்கான விண்ணப்பத்தை நீங்கள் படித்துப் பார்த்தபிறகே கையெழுத்துப் போட வேண்டும். அப்போதுதான் உங்கள் ஏஜென்ட் சொன்ன தகவல்கள், விண்ணப்பத்தில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலமாகப் பெரும் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

7. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, பிரீமியம் பணத்தை எப்படி கட்டுவது, எவ்வளவு கால இடைவெளிக்கு ஒருமுறை கட்டுவது என்பது பற்றி ஏஜென்டுகள் சொல்வதைத் தவிர, விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. உதாரணமாக, பாலிசிதாரர்கள் பிரீமியம் பணத்தை தங்கள் மூலம் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள் பல ஏஜென்டுகள். இப்படி கிடைக்கும் பணத்தை சில நாட்களுக்கு அவர்களே வைத்திருப்பதன் மூலம் சிறிய அளவில் லாபம் பார்க்க வாய்ப்புண்டு. தவிர, ஒவ்வொரு மாதமும் பணம் கட்டுவதைவிட மூன்று மாதத்திற்கு ஒருமுறை பிரீமியம் பணம் கட்டுவதன் மூலம் பிரீமியம் சிறிது குறையும். பிரீமியத்தை ஏஜென்டுகள் மூலம் கட்டும்போது காசோலை மூலம் கட்டுவதுதான் சரியான வழி.

8. எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் கஸ்டமர் கேர் நம்பர் இருக்கும். இந்த எண்ணுடன் தொடர்புகொண்டு, உங்களின் ஏஜென்ட் பரிந்துரை செய்த பாலிசி பற்றிய தகவல்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

9. இன்ஷூரன்ஸ் பாலிசியின் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு, அதனுடன் இருக்கும்  பிற வசதிகள் ஆகியவற்றை அந்தந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

10. பாலிசி எடுத்து 15 நாட்களுக்குள், அந்த பாலிசி நமக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த பாலிசியை சரண்டர் செய்யும் வசதி இப்போது உள்ளது. பாலிசி வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால், நீங்கள் செலுத்திய பணம் எந்த கழிவும் இல்லாமல் திரும்பக் கிடைக்கும்.

எல்லா ஏஜென்டுகளையும் குறை சொல்ல முடியாது. சரியான சேவையை தராத ஏஜென்டை கண்டுபிடித்து, தொடர்பு வைக்காமல் இருந்தாலே போதும்.    

- இரா.ரூபாவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு