Published:Updated:

இன்ஷூரன்ஸ் சீர்திருத்தம்... சாதகமா? பாதகமா?

அலசல்

இன்ஷூரன்ஸ் சீர்திருத்தம்... சாதகமா? பாதகமா?

இன்ஷூரன்ஸ் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது ஒரு பக்கமிருக்க... இன்ஷூரன்ஸ் துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதில் ஐ.ஆர்.டி.ஏ. முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களோ ஐ.ஆர்.டி.ஏ.வுக்கு எதிராக விமர்சன குமுறலைக் கொட்டி வருகின்றன. மும்பையைச் சேர்ந்த முன்னணி தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் இப்படிச் சொன்னார்.

இன்ஷூரன்ஸ் சீர்திருத்தம்... சாதகமா? பாதகமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தற்போது புதிய இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ. ஒப்புதல் அளிக்க சுமார் ஆறு மாதம் எடுத்துக்கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சரியான பாலிசியை சரியான நேரத்தில் அளிக்க முடியவில்லை. உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசிகளில் விதிமுறைகளை அண்மையில் ஐ.ஆர்.டி.ஏ. மாற்றி அமைத்துள்ளது. அதன்படி சமர்ப்பிக்கும் புதிய திட்டங்களுக்கான அனுமதி உடனுக்குடன்  கிடைப்பதில்லை. இந்நிலையை மாற்றி புதிய திட்டங்களுக்கு 15 முதல் 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கான சேவை வரி என்பது பாலிசிதாரர்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது. இதை குறைக்க வேண்டும். முழுமையாக குறைக்கவில்லை என்றாலும், முதலாமாண்டு பிரீமியம் மீதான சேவை வரியையாவது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

##~##
வங்கிகள் மூலமான இன்ஷூரன்ஸ் பாலிசி விநியோகம் அண்மைக் காலத்தில் கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது வங்கி ஒரே ஒரு நிறுவனத்தின் பாலிசிகளை மட்டுமே விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை மாற்றி பல நிறுவனங்களின் பாலிசிகளை விநியோகிக்க அனுமதித்தால் பாலிசி எடுப்பது அதிகரிப்பதோடு, வாடிக்கையாளர்களின் தேவையும் எளிதில் பூர்த்தியாகும். கூடவே வங்கிகளை, இன்ஷூரன்ஸ் 'புரோக்கர்’ என்று அறிவிக்க வேண்டும்.  

கடந்த 2008-09-ல் இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் பாலிசி விற்பனையில் யூலிப்களின் பங்களிப்பு சுமார் 70 சதவிகிதமாக இருந்தது. அது பங்குச் சந்தையின் இறக்கம் மற்றும் யூலிப் பாலிசி மீதான ஏஜென்ட் கமிஷனை ஐ.ஆர்.டி.ஏ. குறைத்தது போன்றவற்றால் 2011-12-ல் 15 சதவிகிதமாக குறைத்துள்ளது. மீண்டும் யூலிப் பாலிசி விநியோகத்தை அதிகரிக்க கமிஷனை அதிகரிக்க ஐ.ஆர்.டி.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தன் மனதுக்குள் இருந்ததைக் கொட்டித் தீர்த்தார்.

அண்மையில் பல ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் ஐ.ஆர்.டி.ஏ.-க்கு புதிய பென்ஷன் திட்டங்களை அனுப்பின. 'இவை கிட்டத்தட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போல் இருக்கின்றன. மேலும், குறுகியகாலத் திட்டங்களாக பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிற மாதிரி இருக்கிறது. மிக முக்கியமாக பென்ஷன் கிடைப்பது போல் இந்த பாலிசிகள் வடிவமைக்கப்படவில்லை’ என்று சொல்லி அந்த திட்டங்களை தள்ளுபடி செய்திருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் எம்.டி. சந்தீப் பாக்ஷி, ''பென்ஷன் பாலிசிக்கான ஐ.ஆர்.டி.ஏ.வின் விதிமுறைகள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை. இதனால் எல்லோருக்குமே குழப்பம்தான்'' என்று நொந்துபோய் சொல்லி இருக்கிறார்.

தற்போது 80சி பிரிவின் கீழ் 1 லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்களுக்கு இந்த ஒரு லட்ச

80சி பிரிவுக்கு வெளியே கூடுதல் தொகைக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசுக்கு இந்திய லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. இதுகுறித்து அக்டோபர் 10-ம் தேதிக்குள் முழுமையாக ஆய்வு செய்யும்படி மத்திய வருவாய்த் துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம் போன்றவற்றை மத்திய நிதி அமைச்சர் கேட்டிருக்கிறார். இதுதொடர்பாக அண்மையில் அமைச்சர் சிதம்பரம், ஐ.ஆர்.டி.ஏ. தலைவர் ஹரிநாராயணை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.

இன்ஷூரன்ஸ் சீர்திருத்தம்... சாதகமா? பாதகமா?

ஐ.ஆர்.டி.ஏ.யும் தன் பங்குக்கு தனியாக பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய  எளிமையான பாலிசிகளை கொண்டுவரும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு ஒருங்கிணைந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை கொண்டுவர வரைவு திட்டத்தைத் தயாரித்து வருகிறது. இந்த வரைவு நவம்பர் மாத இறுதிக்குள் இறுதிப்படுத்தப்படும். மேலும் இந்த பாலிசி, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பலன்களை ஒருங்கே கொண்டதாக இருக்கும்.

டேர்ம் பிளானில் கவரேஜ் 40,000 முதல் 2,00,000 ரூபாயாகவும், இதில் ஆயுள் காப்பீடு, தீவிர நோய் பாதிப்புக்கான சிகிச்சை, தனிநபர் விபத்துக் காப்பீடு, பகுதி மற்றும் நிரந்தர பாதிப்பு போன்ற கவரேஜ் கட்டாயமாக்கப்பட்டு, கூடவே இதர கவரேஜ்களை அளிக்கும் ரைடர் பாலிசி வசதியையும் அந்த பாலிசி கொண்டிருக்க வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ.வின் விதிமுறையாக இருக்கிறது,  

இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் கூடிய விரைவில் வரவிருக்கிற மாற்றங்களும் சீர்திருத்தங்களும் இத்துறைக்கும் பாலிசிதாரர்களுக்கும் சாதகமாக இருக்குமா, இல்லை பாதகமாக இருக்குமா என்கிற கேள்வியுடன் சென்னையின் முன்னணி நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியை சந்தித்து பேசினோம்.

அவர், ''இந்தியாவை பொறுத்தவரையில் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் சாதாரண மக்களுக்குப் புரியாத வகையில் மிகவும் குழப்பமாக இருக்கிறது. அனைவரும் சுலபமாக மற்றும் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படியாக பாலிசிகளை அறிமுகப்படுத்தினால் மட்டுமே நாட்டில் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கான நடவடிக்கையை ஐ.ஆர்.டி.ஏ. எடுக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்தியா போன்ற அதிகம் பேர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத நாட்டில் ரிஸ்க் பிரீமியம் மீது சேவை வரி விதிப்பது சரியாக இருக்காது. தற்போது முதல் ஆண்டில் மட்டும் சேவை வரியை நீக்க மத்திய அரசு விரும்புகிறது. இன்ஷூரன்ஸ் என்பது நீண்ட கால திட்டம் என்பதால், முதல் ஆண்டில் மட்டும் சேவை வரியை நீக்குவதால் பாலிசிதாரருக்கு பெரிய லாபம் கிடைக்காது. கடந்த 2003 முதல் பென்ஷன் திட்டங்களுக்குத் தனியே வரிச் சலுகை அளிக்க வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேட்டு வருகின்றன.

இந்தியாவில் 40 முதல் 50 கோடி பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் 4.4 கோடி பேர்தான் பி.எஃப். வசதியைப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் பயன்பெறும் விதமாக பென்ஷன் திட்டத்தை உருவாக்கி அதனை நீண்ட காலத் திட்டமாகவும் பாலிசி முதிர்வின்போதுதான் தொகை கிடைக்கும்படியாக கொண்டுவந்தால்தான் நீண்ட காலத்தில் இந்திய இன்ஷூரன்ஸ் துறை வளர்ச்சிக் காணும்'' என்றார்.

தெளிவான மற்றும் வெளிப்படையான இன்ஷூரன்ஸ் திட்டங்களை கொண்டு வந்தாலே, நாட்டில் பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க முன்வருவார்கள். அதை ஐ.ஆர்.டி.ஏ. செய்யும் என்ற பாலிசிதாரர்களின் எதிர்பார்ப்பு நடக்குமா?  

- சி.சரவணன்,
படம்: ஜெ.வேங்கடராஜ்.