Published:Updated:

ஏற்கெனவே இருக்கும் நோய்கள்... எப்போது கிடைக்கும் க்ளைம்?

இரா.ரூபாவதி, படம்: சொ.பாலசுப்ரமணியம்.

ஏற்கெனவே இருக்கும் நோய்கள்... எப்போது கிடைக்கும் க்ளைம்?

இரா.ரூபாவதி, படம்: சொ.பாலசுப்ரமணியம்.

Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

##~##

ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்குகூட இப்போது திடீர் திடீரென புதுப்புது நோய்கள் வந்து பெரிய அளவில் மருத்துவச் செலவுகளை வைத்துவிடுகின்றன. இந்த மருத்துவச் செலவுகளை சமாளிக்கத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், பாலிசி எடுத்தும் பலவிதமான பிரச்னைகள். சில நோய்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு கவரேஜ் கிடைப்பதில்லை. பாலிசி எடுப்பதற்கு முன்பே அந்த நோய் இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு க்ளைம் செய்ய முடிவதில்லை. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபிறகும் எந்தெந்த நோய்களுக்கு எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? பாலிசி எடுக்கும் முன்  பாலிசிதாரர்கள் எதை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவன துணைப் பொது மேலாளர் சிவக்குமார்.

ஏற்கெனவே இருக்கும் நோய்கள்... எப்போது கிடைக்கும் க்ளைம்?

''ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் காத்திருப்பு என்பது பொதுவான விஷயம்தான். இதை ஆரம்பகால காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்புக் காலம் என இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.

ஆரம்பகாலக் காத்திருப்பு!

முதலில், ஆரம்பகாலக் காத்திருப்புக் காலம் பற்றி பார்ப்போம். எந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாலும் 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் க்ளைம் செய்ய முடியும். விபத்தினால் ஏற்படும் க்ளைம்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. இந்த மாதிரியான சமயங்களில் உடனே க்ளைம் கிடைத்துவிடும். ஆனால், குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றிருக்க வேண்டும்.

நோய்களுக்கான காத்திருப்பு!

அடுத்து, ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் பற்றி பார்ப்போம். சிலருக்கு பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருக்கும். இந்த நோய்களுக்கு பெரும்பாலும் உடனே கவரேஜ் கிடைக்காது. அதற்காக குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். இது நோய்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு ஆண்டுகள்வரை இருக்கும். அதன்பிறகு வயது, நோயின் தன்மை, பாலிசியின் தன்மையை பொறுத்து இது கிடைக்கும். இந்த காத்திருப்புக் காலம் என்பது ஒவ்வொரு நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். அது மட்டும் இல்லாமல் சில நோய்களுக்கு முற்றிலும் க்ளைம் கிடைக்காது.

ஏற்கெனவே இருக்கும் நோய்கள்... எப்போது கிடைக்கும் க்ளைம்?

கண்புரை, மூலநோய், விரைவீக்கம், பித்தப்பை யில் கல், குடல் இறக்கம் போன்ற நோய்களுக்கு இரண்டு ஆண்டு காத்திருக்க வேண்டி இருக்கும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வயது சார்ந்த நோய்களுக்கு நான்கு ஆண்டு காத்திருக்க வேண்டும். உடல் பருமன், மனநிலை சார்ந்த நோய்கள், பிரசவம், மரபணு குறைபாடு போன்றவற்றிற்கு கவரேஜ் கிடைக்காது.

சில நோய்களுக்கு நான்கு வருடம் வரை காத்திருந்தால்தான் க்ளைம் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் இடையில் ஒரு வருடம் பிரீமியம் கட்ட தவறினால்கூட அந்த நோய்களுக்கு குறிப்பிட்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு க்ளைம் பெற முடியாமல் போய்விடும். ஏனெனில், ஓராண்டு விட்டு பிரீமியம் கட்டும்போது நீங்கள் மீண்டும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே இருக்கும் நோய்கள்... எப்போது கிடைக்கும் க்ளைம்?

எந்த இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாலும் அந்த பாலிசியின் விண்ணப்பத்தில் தந்திருக்கும் அத்தனை பக்கங்களையும் முழுமையாகப் படித்து அர்த்தம் தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில், அதில் பாலிசியின் தன்மை, எந்த நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும், கிடைக்காது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, அதை முழுமையாகப் படிப்பது அவசியம்.

ஃப்ரீலுக் பீரியட்!

சில நேரங்களில் நம்முடைய க்ளைம் ரத்து செய்யப்பட்டுவிடும். அதற்கு காரணம், பாலிசியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே. பாலிசியின் நிபந்தனைகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லை எனில் அந்த பாலிசியை, பாலிசி எடுத்த 15 நாட்களுக்குள், ரத்து செய்யும் உரிமை பாலிசிதாரருக்கு உண்டு. இந்த நாட்களை 'ஃப்ரீலுக் பீரியட்’ என்று சொல்வார்கள்.

நிறுவனம் மாறலாம்!

செல்போன் நம்பரை மாற்றாமலே நிறுவனத்தை மாற்றிக்கொள்கிற மாதிரி, இனி நமக்குப் பிடித்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நமது பாலிசியை மாற்றிக்கொள்ளலாம். முன்பு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒரு நிறுவனத்தில் எடுத்துவிட்டு, இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியாது. இப்போது அதை செய்ய முடியும் என்பதோடு அதனால் பாலிசி சலுகைகள் எதையும் இழக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாலிசியின் பிரீமியத்தை ஒப்பீடு செய்வதற்கு முன்பு அந்த பாலிசியின் நிபந்தனைகள் என்னவென்றும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அது சரியான சமயத்தில் அவசியம் கை கொடுக்கும்'' என்றார் அவர்.

அடிப்படை விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால், நாம் பணத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism