Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:

புதிய விதிமுறைகளின் எதிர்காலம்..? வா.கார்த்திகேயன்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:

புதிய விதிமுறைகளின் எதிர்காலம்..? வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறது ஐ.ஆர்.டி.ஏ.! இப்போதும் சில வரைவு விதிமுறைகளை வெளியிட இருக்கிறது. இந்த வரைவு விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பாலிசிதாரர்களுக்குப் பல சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்த வரைவு விதிமுறைகளை ரசிக்கவே இல்லை. ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என்ன நினைக்கிறது என்று பார்க்கும்முன் ஐ.ஆர்.டி.ஏ. வெளியிட்டிருக்கும் வரைவு விதிமுறைகளைப் பற்றி பார்ப்போம்!

இப்போதைக்குப் பெரும்பாலான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஒரு வருட காலம் மட்டுமே இருக்கிறது. சில பாலிசிகள் மட்டும் இரண்டு வருடத்துக்கு இருக்கிறது. இப்போது மூன்று ஆண்டுகால பாலிசியாகத் தரலாம் என்று சொல்லி இருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.! இந்தக் குறிப்பிட்ட காலத்தில் க்ளைம் வாங்கி இருந்தாலும், பிரீமியத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உயர்த்தக் கூடாது. அலோபதி தவிர மற்ற சிகிச்சை முறைகளுக்கும்கூட க்ளைம் தரச் சொல்லி இருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.! ஆனால், இந்தச் சிகிச்சையை அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில்தான் எடுத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முப்பது நாட்களுக்குள் பாலிசிதாரர்களுக்கு க்ளைம் செட்டில் செய்யப்படவேண்டும். ஆனால், காலதாமதமாக க்ளைம் செய்தார்கள் என்ற காரணத்துக்காக க்ளைமினை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்கக் கூடாது.

மூத்தக் குடிமக்களிடம் வாங்கும் பிரீமியம் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கவேண்டும். மேலும், மூத்தக் குடிமக்களின் பிரச்னைகளுக்குத் தனியாக ஒரு சேனல் அமைக்க வேண்டும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஏதாவது ஒரு பாலிசியை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தால் அதற்கு ஐ.ஆர்.டி.ஏ.வின் அனுமதி தேவை. தவிர, அந்த பாலிசியை எடுத்த பாலிசிதாரர்களுக்கு வேறு பாலிசியைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் வெளியே கசிந்திருக்கிறது.

ஆனால், இந்த வரைவு விதிமுறைகள் பற்றி இன்னமும் பலரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகே நடைமுறைக்கு வரும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:

இந்த விதிமுறைகள் பற்றி ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உயரதிகாரியுடன் பேசினோம். ''இந்த வரைவு விதிமுறைகள் பேச்சுவார்த்தை அளவில்தான் இருக்கிறது. இது நடைமுறைக்கு வர சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் ரேஷியோ அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலைமையில் பிரீமியத்தை உயர்த்தக் கூடாது என்பது ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதிகச் சிக்கலைதான் ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், அலோபதி அல்லாத சிகிச்சைகளுக்கும் க்ளைம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி யெல்லாம் செய்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருக்கிறது'' என்றார்.

மற்றொரு  இன்ஷூரன்ஸ் நிறுவன உயர் அதிகாரியிடம் பேசியபோது, ''ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்ஃபோலியோவில் அதிக நஷ்டம் வருவதற்கு காரணம் குரூப் பாலிசிகள் தான். குரூப் பாலிசிகள் அனைத்தும் ஒரு வருட பாலிசிகள்தான். அந்த பாலிசிகளில் நாங்கள் பிரீமியத்தை உயர்த்திக்கொள்ள முடியும். அதேபோல, அலோபதி அல்லாதச் சிகிச்சைகளுக்கு க்ளைம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அது அரசாங்கம் மற்றும் அது சார்ந்த மருத்துவமனைகளில் எடுக்கும்போதுதான் க்ளைம் தரவேண்டி இருக்கும் என்பதால் அதுவும் ஒரு பிரச்னை இல்லை'' என்றார்.

ஐ.ஆர்.டி.ஏ. கொண்டுவர இருக்கும் இந்த வரைவு விதிமுறையில் பல நல்ல, கெட்ட விஷயங்கள் இருந்தாலும் இனி அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பெரிய கேள்வி. காரணம், ஐ.ஆர்.டி.ஏ.வின் தலைவராக இருந்த ஹரி நாராயண் ஓய்வு பெற்றுவிட்டார். இந்தப் பதவிக்கு இப்போது எல்.ஐ.சி.யின் முன்னாள் தலைவர் டி.எஸ்.விஜயன் நியமிக்கப் பட்டிருக்கிறார். இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒருவர், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் மக்களுக்கு ஆதரவாகவும் என்ன செய்வார் என்பதும் இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism