Published:Updated:

ஐ.ஆர்.டி.ஏ. அதிரடி இனி இல்லை டி.பி.ஏ. குறுக்கீடு !

இரா.ரூபாவதி

பிரீமியம் ஸ்டோரி

இன்ஷூரன்ஸ்

##~##

மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவமனை செலவுகளிலிருந்து  நம்மை பாதுகாத்துக்கொள்ளத்தான். ஆனால், இப்படி எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சில நேரங்களில் நமக்கு கைதருவதில்லை. பாலிசிதாரர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் தராமல் நிராகரித்துவிடுகிறது. பாலிசிதாரர்கள் செய்யும் தவறு என்ன, ஐ.ஆர்.டி.ஏ.வின் விதிமுறைகள் என்ன என்பதுகுறித்து பஜாஜ் கேப்பிட்டல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.ரவி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எந்த க்ளைமையும் மறுக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. பாலிசிதாரர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சின்னச் சின்ன தவறுகளால்தான் க்ளைம் மறுக்கப்படுகிறது. அதனால், எந்த ஒரு பாலிசியையும் எடுப்பதற்கு முன், அந்த பாலிசியின் நிபந்தனை என்ன என்பதைத் தெளிவாகப் படித்து புரிந்துகொண்டு பாலிசி தொடர்பான ஆவணங்களில் கையெழுத் திடுங்கள். அதில், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்களின் ஏஜென்ட் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான விதிமுறைகளை ஐ.ஆர்.டி.ஏ.  வருகிற அக்டோபர் மாதத்தில் மறுசீரமைத்து அமல்படுத்தத் திட்ட மிட்டுள்ளது.  அதில் முக்கியமாக நான்கு விஷயங்களைக் கொண்டுவர உள்ளது.

ஐ.ஆர்.டி.ஏ. அதிரடி இனி இல்லை டி.பி.ஏ. குறுக்கீடு !

டி.பி.ஏ. நீக்கம்..!

ஒரு பாலிசிதாரர் க்ளைம் கேட்கும்போது அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் நபர் நிர்வாகி (டி.பி.ஏ.) விசாரித்தபிறகே க்ளைம் தரலாமா என்று முடிவாகும். இந்த வேலையைச் செய்யும் டி.பி.ஏ. நிறுவனங்கள் சில, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு பாலிசிதாரரின் க்ளைமை நிராகரித்துவிடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது பாலிசிதாரர்கள்தான். கடந்த வருடம் மட்டும் இதுமாதிரியான 6,000 புகார்களை விசாரித்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ.வின் ஆம்புட்ஸ்மேன் அமைப்பு.

ஐ.ஆர்.டி.ஏ. அதிரடி இனி இல்லை டி.பி.ஏ. குறுக்கீடு !

இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும்விதமாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே, பாலிசிதாரர்களுக்கு நேரடியாக க்ளைம் தரவேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ. விதிமுறை விதிக்க உள்ளது. இனிமேல் டி.பி.ஏ. என்கிற அமைப்பு இருந்தாலும், அவர்கள் க்ளைமை விசாரிக்க மட்டுமே செய்வார்கள். இழப்பீடு தரலாமா, கூடாதா என்று முடிவெடுக்க முடியாது.  

மேலும், டி.பி.ஏ.களின் முக்கிய வேலையே பாலிசிதார்களுக்கு அடையாள அட்டை தருவது, க்ளைம் செட்டில் செய்வதுதான். இதற்காக டி.பி.ஏ. நிறுவனங்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசியில் 7 சதவிகித தொகையைத் தருகிறது. இந்த 7 சதவிகித தொகை பாலிசிதாரரின் பிரீமியத்தில் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் டி.பி.ஏ. இருக்காது என்பதால், இந்தத் தொகை மிச்சமாகும். இதனால் பிரீமியம் கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு.

 கருணைக் காலம் நீட்டிப்பு..!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை புதுப்பிப் பதற்கான கருணைக் காலத்தை (கிரேஸ் பீரியட்) பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்

7 நாட்களாக வைத்துள்ளன. இதுவே, தனியார் நிறுவனங்களில் 15 நாட்களாக உள்ளன. இந்தக் காலத்தை 30 நாட்களாக அதிகரிக்கவேண்டும் என்பது பலரது கோரிக்கை. புதிய விதிமுறைகளில் இம்மாற்றம் வரலாம்.  

வயது வரம்பு..!

இதுவரை பாலிசிதாரரின் அதிகபட்ச வயது என்பது 75-ஆக இருந்து வருகிறது. இனி ஆயுட்காலம் முழுவதுக்கும் பாலிசியைப் பெறமுடியும். அதாவது, ஒருவர் 30 வயதில் ஒரு பாலிசியை எடுத்து, தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வந்தால் 75 வயதிற்குபிறகும் பாலிசியை புதுப்பித்து, கவரேஜ் பெறமுடியும். இது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை பொறுத்து அமையும்.

ஆவண பாதுகாப்பு..!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரரின் தொடர்பு முடிந்தபின்பும், அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள் பற்றிய ஆவணங்களை

5 ஆண்டுகளுக்கு கட்டாயம் பாதுகாக்கவேண்டும் என்று ஐ.ஆர்.டி.ஏ. அறிவித்துள்ளது. பாலிசிதாரர், பாலிசியின் முடிவில் பணம் பெற்றவர் என யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிய தகவல் மற்றும் எல்லா ஆவணங்களையும்  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்  வைத்திருக்கவேண்டும். இதனால் கணக்கில் வராத பணம் மூலம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் மோசடியைத் தடுக்க முடியும்'' என்று முடித்தார் ரவி.

பாலிசிதாரர்களுக்கு பயன் தரும் இந்த மாற்றங்களை நிச்சயம் வரவேற்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு