Published:Updated:

இன்ஷூரன்ஸ் க்ளைம் விகிதம்: இதையும் கவனிங்க...

இன்ஷூரன்ஸ் க்ளைம் விகிதம்: இதையும் கவனிங்க...

##~##

எல்ஐசி- ன் க்ளைம் விகிதம் பிற தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பிட்டால் மிக சிறப்பாக இருக்கிறது!

தனியார் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் விகிதத்துடன் ஒப்பிடும்போது எல்ஐசி-யின் க்ளைம் விகிதம் சிறப்பாக உள்ளது என ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது. அதாவது, முதிர்வடைந்த பாலிசிகள், மணிபேக் பாலிசிகள், இறப்பு க்ளைம் ஆகிய அனைத்திலும் எல்ஐசிதான் முதலிடத்தில் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2012-ம் வருடத்தில் எல்ஐசி-ன் க்ளைம் விகிதம் 97.42 சதவிகிதமாக இருந்தது.  2013-ல் இது 97.73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே, தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் விகிதம் 2012-ல் 89.34 சதவிகிதமாகவும், 2013-ல் 88.65 சதவிகிதமாகவும் உள்ளது என ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.    

பாலிசி எடுக்கும்முன் க்ளைம் விகிதம் எப்படி உள்ளது என தெரிந்துகொள்வது அவசியம். அதிக க்ளைம் விகிதம், பிரச்னையின்றி க்ளைம்  செட்டில் செய்யப்பட்டதற்கான அறிகுறி ஆகும். இந்த நிலையில் தனியார் நிறுவனங்களைவிட எல்ஐசி-யினால் அதிக விகிதத்தில் எப்படி க்ளைம் தரமுடிகிறது என எல்ஐசி-ன் தென்மண்டல மேலாளர் டி.சித்தார்த்தனிடம்  கேட்டோம்.

''எல்ஐசி பழமையான பொதுத்துறை நிறுவனம் என்பதால் மக்கள் இந்த நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், மிகச் சிறிய கிராமங்களில்கூட எல்ஐசி ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் ஏஜென்ட்கள் இருப்பதால் க்ளைம்கள் சரியாக பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் க்ளைம் விகிதம் அதிகமாக உள்ளது.

இன்ஷூரன்ஸ் க்ளைம் விகிதம்: இதையும் கவனிங்க...

பாலிசி முதிர்ச்சிக்கு ஆறு மாதங் களுக்கு முன்பே பாலிசிதாரர்களுக்கு தகவல் தெரிவிப்போம். பாலிசி தொகை பாலிசிதாரின் வங்கிக் கணக்கிலேயே போடப்படுகிறது. இப்படி செய்வதனால் பாலிசி முடிவடைந்த ஒருவாரத்துக்குள் முதிர்வுத் தொகை பாலிசிதாரர்களுக்கு கிடைத்துவிடும். மேலும், பாலிசிதாரரின் குடும்பப் பின்னணியைப் பொறுத்து க்ளைம் விஷயத்தில் முடிவு எடுப்போம்.  

சில காரணங்களினால் நிராகரிக்கப்படும் பாலிசிகளுக்கும் குறைதீர்க்கும் கமிட்டி மூலமாக அந்த பாலிசிதாரர்களின் நிலையை அறிந்து க்ளைம் தருவோம். இதனால், எல்ஐசியில் க்ளைம் நிராகரிப்பு என்பது மிகக் குறைவு'' என்றார்.  

க்ளைம் விகிதத்தில் தனியார் நிறுவனங்கள் பின்தங்கி இருப்பது குறித்து கவர்ஃபாக்ஸ்  இன்ஷூரன்ஸ் ப்ரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநர் சீனிவாசனிடம் கேட்டோம்.

இன்ஷூரன்ஸ் க்ளைம் விகிதம்: இதையும் கவனிங்க...

''எல்ஐசி ஒரு பழமையான, பொதுத்துறை நிறுவனம். எனவே, அதனிடம் அதிக எண்ணிக்கையில் பாலிசிகள் இருக்கும். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால், அவர்களிடம் இருக்கும் பாலிசிகளின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

எல்ஐசி-ன் க்ளைம் விகிதத்தில் முதிர்வடைந்த பாலிசிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இதை அவர்கள் க்ளைம் விகிதமாக பார்க்கக் கூடாது. ஏனெனில், மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தொகையை ப்ரீமியமாகச் செலுத்தினால் சில ஆண்டுகள் கழித்து இவ்வளவு தொகையைத் தருவோம் என உறுதியளித்து பாலிசிகளை விற்பனை செய்கிறது எல்ஐசி. இதை க்ளைம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இறப்பினால் ஏற்படும் க்ளைம்களின் விகிதத்தை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

இன்ஷூரன்ஸ் க்ளைம் விகிதம்: இதையும் கவனிங்க...

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுக்கும் போது க்ளைம் விகிதத்தை மட்டும் பார்க்காமல் எத்தனை பாலிசிகளுக்கு க்ளைம் தரப்பட்டுள்ளது என்பதையும் பார்க்கவேண்டும். அதாவது, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் குறிப்பிட்ட வருடத்தில் ஒரே ஒரு பாலிசிக்கு மட்டும் க்ளைம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு அதற்கு க்ளைம் தந்தால் அந்த நிறுவனத்தின் க்ளைம் விகிதம் 100 சதவிகிதமாக இருக்கும். அதேநேரத்தில் 10,000 க்ளைம் விண்ணப்பங்கள் வந்து அதில் 9,790 பாலிசிகளுக்கு க்ளைம் தந்தால் அதன் க்ளைம் விகிதம் 97.9 சதவிகிதம் ஆகும்.

எனவே, எவ்வளவு பாலிசிகள் க்ளைம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை விண்ணப்பங்கள் செட்டில் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கவனிப்பதும் முக்கியம்.

- இரா.ரூபாவதி.