Published:Updated:

கண்டிஷன்ஸ் அப்ளை: படித்துப் பார்த்து வாங்குங்கள்!

ச.ஸ்ரீராம் படம்: கு.கார்முகில் வண்ணன்.

இன்றைக்கு எந்த ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும், 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற இரு வார்த்தைகளை  நட்சத்திரக் குறியுடன் அச்சிடத் தவறுவதில்லை. சோப்பு முதல் செல்போன்கள் வரை எல்லா பொருட்களிலும் இந்த வார்த்தைகளைக் கட்டாயம் பார்க்கலாம். நிறுவனம் தயாரிக்கும் பொருளில் ஏதாவது குறை இருந்தால் அல்லது சேவை சரியில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் செய்தால், 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற வார்த்தைகளைக் காட்டி தப்பித்துவிடுகிறது அந்த நிறுவனம்.

மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என முதலீட்டு உலகிலும் 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற எச்சரிக்கை இருந்தாலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் எனப்படும் நுகர்வோர் பொருட்களில்தான் இந்த வார்த்தைகளை  சாதுரியமாகப் பயன்படுத்துகின்றன பல நிறுவனங்கள். நாம் வாங்கும் இந்தப் பொருட்களில் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய எழுத்துகளில் லென்ஸ் வைத்துப் படிக்கிற மாதிரி அச்சிடப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள். 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என நிறுவனங்கள் அச்சிடுவதோடு சரி, என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. என்ன நிபந்தனை என அந்த நிறுவனத்திடம் கேட்டால், அதை எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்துக் கொள்ளுங்கள் என்கின்றன.

கண்டிஷன்ஸ் அப்ளை: படித்துப் பார்த்து வாங்குங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி, என்ன நிபந்தனைகளைச் சொல்லியிருப்பார்கள் என இணையதளத்துக்குச் சென்று பார்த்தால், நிபந்தனைப் பட்டியல் பத்து, பதினைந்து பக்கங்களுக்குமேல் செல்கின்றன. இந்த நிபந்தனைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இந்த ஆங்கிலமும் புரியாதபடிக்கு டெக்னிக்கல் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதனால் சாமானியர்களால் இந்த நிபந்தனைகளை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஐந்து ரூபாய் தந்து வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டில் நமக்கு என்ன பாதகம் வந்துவிடப்போகிறது; இதற்கு ஏன் நிபந்தனை போடுகிறார்கள் என்று நினைத்து, அதன் நிபந்தனைகளைப் படித்தால், நம் வயிறு எரியும். அந்த சிப்ஸில் கலக்கப்பட்டுள்ள சில மூலப்பொருட்களினால் நம் உடலுக்குப் பாதிப்பு வரலாம் என்று  சொல்லியிருப்பார்கள். ஆனால், இதைத் தெரிந்துகொள்ள இந்தப் பொருளை வாங்குகிற விலையைவிட அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

எல்லா பொருட்களிலும் 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என அச்சிடுவது சரியா, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்‌ஷன் குரூப் ஒருங்கிணைப்பாளர் சரோஜாவிடம் கேட்டோம்.

கண்டிஷன்ஸ் அப்ளை: படித்துப் பார்த்து வாங்குங்கள்!

'நிறுவனங்கள் இப்படி செய்வது தவறு. வாடிக்கையாளர்களுக்குப் புரிகிற மாதிரி எளிமையான மொழியில்தான் நிபந்தனைகளுக்கான வாசகங்களை  தரவேண்டும். இதில் மக்கள் செய்யும் தவறு என்னவெனில், 'இன்றோடு இந்த ஆஃபர் முடிகிறது’ என்கிற விளம்பரத்தைப் பார்த்தாலே போதும், உடனே அந்தப் பொருளை வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதனால் அந்தப் பொருளை வாங்குவதற்கான நிபந்தனைகளைப் அவர்கள் படித்துப் பார்ப்பதில்லை.

ஆனால், 'கண்டிஷன்ஸ் அப்ளை’  என்று சொல்லும் விற்பனையாளர்கள், அவர்கள் சொல்லும் நிபந்தனைகளை மக்களுக்கு அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை கண்ணுக்கு தெரியும்படி, புரியுமாறு அச்சிட்டிருக்க வேண்டும்.

நிபந்தனைகளில் சொன்னபடி இல்லாமல், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும்பட்சத்தில் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். ஆனால், 'நான் வாங்கும் 10 ரூபாய் பொருளுக்கு பல ஆயிரம் செலவு செய்து வழக்குப் போட வேண்டுமா?’ என்று நினைத்து பலரும் சும்மா இருந்துவிடுகிறார்கள். இதனால் நிறுவனங்கள் செய்யும் தவறுகள் திருத்தப்படாமலே போய்விடுகிறது.

'

கண்டிஷன்ஸ் அப்ளை: படித்துப் பார்த்து வாங்குங்கள்!

கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று பார்த்த மாத்திரத்தில், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

1.ஒரு பொருள் அல்லது  சேவைவை வாங்கும்முன், அதற்கான நிபந்தனைகளை நன்றாகப் படித்து, புரிந்துகொண்டு கையெழுத்திடுங்கள். ஒருவேளை ஏஜென்ட்டோ , விற்பனை யாளரோ அவசரப்படுத்தினால் அனுமதிக்காதீர்கள்!

2. பொருட்களோடு வழங்கப்படும் ஆஃபர்களை நிராகரிக்க உங்களுக்கு உரிமை உண்டு. அப்படி திணிக்கப்பட்டால் நீங்கள் வேண்டாம் என்று முறையிடலாம். ஆனால், இதில் நீங்கள் படிக்காமல் கையெழுத்து போட்டுவிட்டால், அதன்மேல் வழக்குத் தொடர இயலாது.

3. சமூக வலைதளங்கள், இணையதளங்களில் கணக்கு துவங்கும்முன் அதன் சட்டதிட்டங்களைப் படியுங்கள். அதில் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அனுமதியுங்கள்.

4. 'கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று படித்தபின், அங்கே நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில், அந்த நிறுவனத்தை அணுகியோ இணையதளத்திலோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருநாள் ஆனாலும் பரவாயில்லை பார்த்துப் படித்து ஆராய்ந்து வாங்குவது சிறந்தது'' என்றார்.

எந்த விஷயத்தையும் பதற்றப்படாமல் செய்தாலே, பிற்பாடு எந்தப் பிரச்னையும் வராது. குறைந்த விலையில் பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்கள் என்றால், பிற்பாடு உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடவே முடியாது!