Published:Updated:

ஷேர்லக் - எல்ஐசிக்கு போட்டி பிஎஃப்!

ஷேர்லக் - எல்ஐசிக்கு போட்டி பிஎஃப்!

‘‘இந்த வாரம் என்ன கவர் ஸ்டோரி?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். கவர் ஸ்டோரியின் பக்கங்களை அவரிடம் எடுத்துக் கொடுத்தோம். ‘‘வாசகர்கள் கேட்க நினைக்கும் கேள்வியை சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லியிருக்கிறீர்கள்’’ என்றவர், சந்தை பற்றிய பல செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘கடந்த 2005-ம் ஆண்டிலிருந்தே பிராவிடெண்ட் ஃபண்ட் பணத்தின் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்போது 5% முதலீடு செய்யலாம் என்றார்கள். அதை பிஎஃப் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முதலீட்டு வரம்பை மத்திய அரசு  2009-ல் 15 சதவிகிதமாக உயர்த்தியபோதும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டது.

2015 ஏப்ரலுக் குள் 30 சதவிகித தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிஎஃப் அமைப்புக்கு சொல்லியிருக்கிறது. ஆனால், 5 சதவிகித தொகையை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பிஎஃப் அமைப்பு சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பிஎஃப் தொகை யில் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி அளவுக்கு சந்தையில் (தற்போது ரூ.6.5 லட்சம் கோடி பிஎஃப்-ல் உள்ளது) முதலீடு செய்யும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட இருக்கிறது. அது நடைமுறைக்கு வந்தால் எல்ஐசிக்கு  அடுத்தபடியாக பங்குச் சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் அமைப்பாக பிஎஃப் அமைப்பு இருக்கும்’’ என்றவர், நாம் தந்த சூடான காபியைக் குடித்துவிட்டு, அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக் - எல்ஐசிக்கு போட்டி பிஎஃப்!

‘‘கடந்த புதன்கிழமையன்று சென்செக்ஸ் 27140 புள்ளிகளுடன் புதிய உச்சத்தைத் தொட்டது. இது 2014-ம் ஆண்டில் இதுவரைக்கும் 28% அதிகரிப்பாகும். இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் பங்குச் சந்தைகள் அளித்த வருமானத்தில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ் (22.3%), இந்தோனேஷியா (22.2%), பிரேசில் (20.5%) ஆகிய நாடுகள் உள்ளன. சீன பங்குச் சந்தை கொடுத்த வருமானம் 8.2%தான்’’ என புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார்.

‘‘பொதுத்துறை வங்கிப் பங்குகளில் முதலீடு  செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்’’ என்று பீடிகை போட்டவரிடம், ‘‘ஏன்? ஏதாவது பிரச்னையா?’’ என்று விசாரித்தோம்.

‘‘பொதுத்துறை வங்கிகளில் பல வங்கி களின் வாராக்கடன் மிகவும் அதிகமாக உள்ளது. 2013 மார்ச் மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் சராசரியாக 3.6 சதவிகிதமாக இருந்தது. இது 2014 மார்சில் 4.1 சத விகிதமாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் நிகர வாராக்கடன்
1.7%-லிருந்து 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால் அவற்றின் லாபம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கூடவே, அவற்றின் மூலதன தன்னிறைவு விகிதம், 2014 மார்ச் காலாண்டில் 11.67 சதவிகிதமாக இருந்தது. அது இப்போது ஜூன் காலாண்டில் 10.67 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வங்கிப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள், வாராக்கடன் மற்றும் மூதலதன தன்னிறைவு விகிதத்தைக் கவனித்து முதலீடு செய்வது நல்லது’’ என்று விளக்கினார்.

‘‘விஜய் மல்லையாவுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

ஷேர்லக் - எல்ஐசிக்கு போட்டி பிஎஃப்!

‘‘இத்தனைநாளும் தெம்பாக இருந்தவர், இப்போது வேண்டுமென்றே கடனை திரும்பிச் செலுத்தாதவர் என யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். எஸ்பிஐ வங்கியும் இதேமாதிரி சொல்லத் தயாரானதைத் தொடர்ந்து, அவருக்கு பிரச்னைமேல் பிரச்னை.

இந்தநிலையில் 2013-14ம் ஆண்டுக்கான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் கடைசி காலாண்டு முடிவுகளை, மூன்று முறை தள்ளி வைத்தபின் அண்மையில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் மொத்த நிகர இழப்பு ரூ.5,380 கோடியாக உள்ளது. யூபி ஹோல்டிங்ஸ்-க்கு கொடுத்த கடன் ரூ.350 கோடி மற்றும் மற்ற நிறுவனங் களுக்குக் கொடுத்த ரூ.600 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

 தற்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், பன்னாட்டு நிறுவனமான டியாஜியோ வசம் உள்ளது. குழும நிறுவனங்களுக்குத் தரப்பட்ட கடன்களில் ஏதாவது விதிமுறை மீறல் நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என டியாஜியோ அறிவித்துள்ளது. இந்த தொடர் தாக்குதல்களினால் மல்லையா தொல்லையாவாக மாறியிருக்கிறார்’’ என்றார்.

‘‘ஷார்தா கிராப்கெம் ஐபிஓ பற்றி..’’ என்று இழுத்தோம்.

‘‘பயிர் பாதுகாப்பு ரசாயனங்கள் வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும்படி பெரும்பாலான பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. பட்டியலிடப் படும் அன்று கணிசமான லாபம் பார்க்க முடியும் என அந்த புரோக்கரேஜ் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அதேசமயம் அதிக லாபம் தரும் கம்பெனி என்றால் ஏன் புரமோட்டர் அல்லாத பங்குதாரர்கள் அவர்களுடைய பங்குகள் மொத்தத்தையும் இந்த ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுபோன்ற வெளியீடு களுக்கு ரேட்டிங்கும் கிடையாது. மேலும், திரட்டப்படும் நிதி ஏற்கெனவே பங்குகளை ைவத்திருப்பவர்களுக்குத் தான் போய் சேரப்போகிறது. உற்பத்தி, அசெட் இல்லாமல் வெறும் வர்த்தகத்தை மட்டுமே கொண்டிருக்கும் நிறுவனம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது’’ என்று சொன்னார்.

‘‘ஜே.பி அசோசியேட்ஸ் பங்கின் விலை ஒரேநாளில் 20% வீழ்ச்சி கண்டிருக்கிறதே?’’ என்று ஆச்சர்யப்பட்டோம்.

‘‘இந்தக் குழுமத்தின் புரமோட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த ஜே.பி இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் சுமார் 1.30 கோடி பங்குகளை ஓப்பன் மார்க்கெட்டில் விற்றதால், இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டி ருக்கிறது. சமூக வளர்ச்சிக்கான திட்டங் களுக்கு பணம் தேவை என்கிற காரணத்துக்காக புரமோட்டர் நிறுவனம், குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்றுள்ளது. வேறு ஏதும் பிரச்னை இல்லை என ஜே.பி அசோசியேட்ஸ் விளக்கம் தெரிவித்துள்ளது. இதை நம்புவதும் நம்பாததும் வாசகர்களின் இஷ்டம்’’ என்றார் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி.

‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்குமாம்?’’ என்று கிளம்பத் தயாரானவரிடம் கேட்டோம்.

‘‘கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி, பணவீக்க விகிதம், உக்ரைன், ஈராக் பிரச்னைகளும் சந்தையின் ஏற்றத்தைப் பாதிக்கும் அம்சங்களாக உள்ளன. அதேநேரத்தில், இந்திய சந்தை யின் மதிப்பீடு ஒன்றும் அதிகமாக இல்லை. 2015 மார்ச்சுக்குள் நிஃப்டி 9000 தாண்டிவிடும் என ஐஎல் & எஃப்எஸ் கணித்திருக்கிறது.

அதேநேரத்தில், நிஃப்டி புள்ளிகள் 8500-9000 வரும்போது சந்தையில் கரெக்‌ஷன் வரும் என அனலிஸ்ட்கள் சொல்லியிருக்கிறார்கள். இதனை முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் சொல்கிறார்கள்.
மற்றபடி தற்போதைய ஏற்றம் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கும் என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது’’ என்று கிளம்பியவர், ஒரு துண்டுச் சீட்டைத் தந்தார். அதிலிருந்த பங்குகள் இதோ...

எல் அண்ட் டி , டாடா காபி, டாடா குளோபல் டிவிஎஸ் மோட்டார்ஸ், அர்விந்த் மில்ஸ், அப்பலோ டயர்ஸ், கர்நாடகா பேங்க்.