Published:Updated:

பிரதமர் மோடி அறிவித்த சுகாதாரக் கணக்கு ஐ.டி! - அனைவருக்கும் பயன் தருமா?

கணக்கு ஐ.டி
பிரீமியம் ஸ்டோரி
News
கணக்கு ஐ.டி

இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டைப் போன்று ஒரு சுகாதார ஐ.டி வழங்கப்படும்!

`இந்திய மருத்துவத்துறையில் இது ஒரு புரட்சி!’ - சுதந்திர தினத்தன்று தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய வார்த்தைகள் இவை. “பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஏற்படும் பிரச்னைகளைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்ப்பதற்கு இந்தத் திட்டம் உதவும். இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஒரு தனிப்பட்ட சுகாதார ஐ.டி (Health ID) வழங்கப்படும். அந்த ஐ.டி ஒவ்வொருவரின் இந்திய சுகாதாரக் கணக்காகச் செயல்படும்” என்றும் தெரிவித்தார் பிரதமர். இந்தத் திட்டம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின்கீழ் செயல்படும்.
பிரதமர் மோடி அறிவித்த சுகாதாரக் கணக்கு ஐ.டி! - அனைவருக்கும் பயன் தருமா?

தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ன் கீழ் தேசிய டிஜிட்டல் சுகாதார ஆணையம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. திட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திட்டத்துக்கான புளுபிரின்டைக் குழுவின் தலைவரும் UIDAI-யின் தலைவருமான சத்யநாராயணா வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது பிரதமர் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

அதென்ன சுகாதார ஐ.டி?

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டைப் போன்ற சுகாதார ஐ.டி வழங்கப்படும். அதில் தனிநபரின் சிகிச்சை சார்ந்த அனைத்து விவரங்களும் சேமிக்கப்படும். மருத்துவர் சந்திப்பு, நோய் குறித்த விவரங்கள், சிகிச்சை விவரங்கள், சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். டெலிமெடிசின் ஆலோசனை, மருந்துகளை இணையதளம் மூலம் ஆர்டர் செய்யும் விவரங்கள் அனைத்தும் இதில் சேர்க்கப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மொபைல் ஆப் மூலம் இந்த ஐ.டியை உருவாக்கிக்கொள்ள முடியும். ஐ.டி உருவாக்கிய பிறகு, அந்தந்த நபர் தன் உடல்நிலை குறித்த தகவல்கள், பரிசோதனை முடிவுகள் ஆகிய ஆவணங்களை மருத்துவமனை அல்லது மருத்துவர்களிடம் டிஜிட்டலாகப் பகிர்ந்து கொள்ள முடியும். எந்த ஆவணத்தை மருத்துவரிடம் பகிர வேண்டும் என்பதை அந்த நபரே தீர்மானிப்பார். அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களானது மருத்துவரின் அல்லது மருத்துவமனையின் தரவுதளத்தில் இடம்பெறும். அந்தந்த நபரின் லாக்கரிலும் (மொபைல் அப்ளிகேஷனில் அதற்கான வசதிகள் இடம்பெறும்) சேகரிக்கப் படும்.

பிரதமர் மோடி அறிவித்த சுகாதாரக் கணக்கு ஐ.டி! - அனைவருக்கும் பயன் தருமா?

மருத்துவரிடம் ஆலோசனை பெற, மருந்து மாத்திரைகளுக்கான கட்டணம் ஆகியவற்றை பேடிஎம், போன்பே போன்ற யூ.பி.ஐ (UPI) கணக்குகள் மூலம் செலுத்தும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு டிஜிட்டல் சேவைகளையும் ஒரே குடையின்கீழ் இணைக்கவும் இந்தத் திட்டம் உதவும். அதன் மூலம் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை உறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் விவரங்களைச் சேகரிப்பதன் மூலம் தேசிய சுகாதாரப் பதிவேடு ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.

தெளிவான பதில் இனிதான் கிடைக்க வேண்டும்!

மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களைப் பெற விரும்புவோர் தங்களுடைய சுகாதார ஐ.டியை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும், மாநிலங்கள் வழங்கும் சுகாதாரத் திட்டத்தை இந்த ஐ.டியில் இணைப்பது எப்படி, தமிழகத்திலுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஐ.டியுடன் இணைப்பது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு இனிமேல்தான் தெளிவான விடை கிடைக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கான மொபைல் அப்ளிகேஷன் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டம் குறித்த புதிய தகவல்கள், சுகாதார ஐ.டி உருவாக்குதல், திட்டத்தின் நன்மைகள், ஐ.டி. பெற விண்ணப்பித்த பிறகு, அதன் நிலை என்னவாயிற்று என்பன உள்ளிட்ட விவரங்களை https://nha.gov.in/ என்ற இணைய தளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதுகாப்பாக இருக்குமா?

இந்தத் திட்டத்தில் தனிநபரின் விவரங்கள் எந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்கள். தனிநபர் ஆரோக்கியம் குறித்த விவரங்களை வைத்து சிலர் பணம் சம்பாதிக்கும் நிகழ்வுகள் நடைபெறவும் வாய்ப்புண்டு. எனவே, தக்க பாதுகாப்போடு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்தத் திட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹெல்த் ஐ.டி உருவாக்க முடியும். அப்படியிருக்க 130 கோடி மக்களுக்கும் இந்தத் திட்டத்தை எளிதாகக் கொண்டு செல்வதற்கான வழிகளைக் கண்டறிந்தால்தான் திட்டம் வெற்றிபெறும் என்பதே பலரது கருத்து!