Published:Updated:

கார் இன்ஷூரன்ஸ்... உரிமையாளர்கள் உஷாராக இல்லாவிட்டால்..?

கார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கார் இன்ஷூரன்ஸ்

மோசடி

கார் இன்ஷூரன்ஸ்... உரிமையாளர்கள் உஷாராக இல்லாவிட்டால்..?

மோசடி

Published:Updated:
கார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கார் இன்ஷூரன்ஸ்

தங்கள் நிறுவனம் மூலம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொல்லும் கார் விற்பனையகங் களும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கஸ்டமர்களை ஏமாற்றும் மிகப் பெரிய மோசடியை செய்கின்றன எனத் தொடர்ந்து ஒருபக்கம் புகார்கள் எழுந்து வருகின்றன.

நாடு முழுவதும் வாகன இன்ஷூரன்ஸ் மோசடி ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி அளவுக்கு நடந்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜானகிராமன் தனக்கு நியாயம் கேட்டுப் போராடி வருகிறார். அவருக்கு நேர்ந்த அனுபவத்தை மனம் கொதித்தபடி நம்மிடம் விளக்கிச் சொன்னார்.

“நான் 2018-ல் டொயோட்டோ எடியோஸ் காரை வாங்கினேன். வாங்கும்போதே காருக்கான இன்ஷூரன்ஸை, கார் வாங்கிய ஷோரூம் கடைக்காரர்கள் சொன்ன இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்திலேயே எடுத்தேன்.

கார் இன்ஷூரன்ஸ்... உரிமையாளர்கள் உஷாராக இல்லாவிட்டால்..?

குறைந்த பிரீமியத்தில் பல கார் இன்ஷூ ரன்ஸ் பாலிசிகள் வெளியில் கிடைத்தாலும், கார் விற்பனை செய்த நிறுவனம் சொன்ன நிறுவனத்திலேயே இன்ஷூரன்ஸ் எடுத்தால் சர்வீஸ் என்று வரும்போது எந்த பிரச்னையும் இருக்காது. தவிர, கேஸ்லெஸ் இன்ஷூரன்ஸ் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்று ஷோரூம் கடைக்காரர்கள் சொன்னதால், மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைவிட 30% அதிகமாக பிரீமியம் தந்து, ஷோரூம்காரர்கள் சொன்ன இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.5,59,970-க்கு பாலிசி எடுத்தேன்.

கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி எங்களோட அந்த கார் தாராபுரம் அருகே, எதிரே வந்த வாகனத்தின் தவறால் விபத்தில் சேதமடைந்தது. அதைச் சரிசெய்ய கார் வாங்கிய மதுரை ஷோரூம் சர்வீஸ் சென்டரில் ஒப்படைத்தேன். அவர்கள் சொன்ன இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருப் பதால், இழப்பீட்டைப் பெறுவதில் பிரச்னை இருக்காது என்று நினைத்தேன்.

காரில் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் கார் விற்பனை செய்த நிறுவனத்தின் சர்வையர் மூலம் கணக்கிட்டு ரூ.3,92,653 இழப்பீடு கிடைக்கும் என்றார்கள். சரி என்று ஒப்புக்கொண்டு வேலை பார்க்கச் சொல்லிவிட்டேன்.

ஆனால், பல நாள்களாகியும் காரை சரி செய்து தரவில்லை. எனவே, 60 நாள்களுக்குப் பின் அதாவது, டிசம்பர் 28-ம் தேதி நானே நேரில் சென்று, காரை ஏன் சரிசெய்து தரவில்லை என்று கேட்டேன்.

அவர்களுடைய சர்வையரால் ரூ.3,92,653-க்கு ஏற்கெனவே மதிப்பீடு செய்துதந்த நிலையில், ரூ.4,11,976-க்கு மற்றொரு எஸ்டிமேட்டை என்னிடம் தந்தார்கள். ‘ஏற்கெனவே ஒரு எஸ்டிமேட்டைத் தந்துவிட்டு, இப்போது புது எஸ்டிமேட்டை ஏன் தருகிறீர்கள்’ என்று நான் கேட்டதற்கு, ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள். சரி போகட்டும் என்று அதற்கும் ஒப்புக்கொண்டு, சர்வீஸ் பார்க்க சொன்னேன். அப்போதுதான் அவர்களுடைய நிஜமுகத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள்.

காரின் மொத்த மதிப்பீடு ரூ.5,59,970. இந்த மதிப்புக்கு 75 சதவிகிதத்துக்குமேல் செலவு வந்தால், அதற்கு சர்வீஸ் பார்க்காமல், காரை விற்றவர்களே திட்டமிட்டு எஸ்டிமேட் டைக் கூடுதலாக நிர்ணயம் செய்து, கார் டோட்டல் டேமேஜ் ஆகியிருப்பது போல காட்ட முயற்சி செய்தார்கள். ஆனால், உண்மையில் கார் டோட்டல் டேமேஜ் என்று சொல்கிற அளவுக்கு சேதமாக வில்லை.

டோட்டல் டேமேஜாகக் காட்டி, இன்ஷூரன்ஸ் தொகையை ரூ.5,59,970 ஆகத் தருகிற மாதிரி பேச ஆரம்பித்தார்கள். அதாவது, காரை யாருக்கோ ரூ.4 லட்சத்துக்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்துடன் மேற்கொண்டு இன்ஷூரன்ஸ் மூலம் வரும் ரூ.1 லட்சத்தையும் சேர்த்துத் தருவதாகச் சொன்னார்கள். அதெல்லாம் வேண்டாம், என் காரை எனக்குத் தந்துவிடுங்கள் என்று கேட்டதற்கு ரூ.1,40,000 மட்டுமே தருவோம் என்றார்கள்.

முதலாவதாக, அவர்கள் எனக்குக் கொடுத்த எஸ்டிமேட்படி டேமேஜ் என்பது 68 சதவிகிதம்தான். ஆனால், இரண்டாவதாக தந்த எஸ்டிமேட்படி, அது 74.25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருந்தது. அதனால் வெளியிலிருந்து ஒரு சர்வயரை அழைத்து வருவதாகச் சொன்னேன். அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பது தெரிந்து, இன்ஷூரன்ஸ் எடுத்த நிறுவனத்துக்குப் போனால், அவர்களும் அதையே சொன்னார்கள்.

நான் கார்களை செண்டிமென்டாக வைத்திருப்பவன். இந்த மாடல் கார் இப்போது வருவதில்லை. அதனால் சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ளவே விரும்பினேன். ஆனால், அவர்களோ டோட்டல் டேமேஜ் என்று சொல்லி குறைந்த விலைக்கு கார்களை வாங்கி சர்வீஸ் செய்து நல்ல விலைக்கு ரீசேல் செய்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். பல கார் ஓனர்களும் இது தெரியாமல் ஏமாறுகிறார்கள்.

காரை சரிசெய்து தராததால், கார் வாங்கிய நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 19-ல் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். உடனே அவர்கள் முன்தேதியிட்ட எஸ்டிமேட் ஒன்றை அனுப்பினார்கள். அதாவது, அது மூன்றாவது எஸ்டிமேட். அதில் ரூ.33,000 கூடுதலாகப் போட்டிருந்தார்கள். தவிர, ‘‘உங்கள் கார் இவ்வளவு நாள்களாக இங்கு உள்ளது. அதற்கு வாடகை செலுத்த வேண்டும்’’ என்று நோட்டீஸ் அனுப்பினார்கள். நான் சர்வீஸுக்கு ஒப்புதல் தராததே தாமதத்துக்குக் காரணம் என்று அதில் ஜோடித்திருந்தார்கள்.

அவர்கள் கேட்ட வாடகை யைக் கொடுத்துவிட்டு, காரை எடுத்து வந்து இப்போது வேறு சர்வீஸ் சென்டரில் விட்டு வேலை பார்த்து வருகிறேன்.

இது ஒரு கசப்பான அனுபவம். கார் இன்ஷூரன்ஸ் என்கிற பெயரில் பெரும் மோசடி நடந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முறைப் படுத்தாவிட்டால், பிற்காலத்தில் பல பிரச்னைகள் ஏற்படும், பலரும் பாதிப்படைவார்கள்’’ என்றார்.

இது குறித்து கார் இன்ஷூ ரன்ஸ் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷிடம் கேட்டோம்.

வி.எஸ். சுரேஷ்
வி.எஸ். சுரேஷ்

“வாகன இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வதில் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கார் இன்ஷூரன்ஸ் மூலம் என்ன மாதிரியான பலன்கள் கிடைக் கும் என்பதை பாலிசிதாரர் களுக்கு இன்ஷூரன்ஸ் ஏஜென்சி கள் விளக்குவதில்லை. பாலிசி தாரர்களும் நிபந்தனைகளை புரிந்துகொள்வதில்லை.

ஹெல்த் இன்ஷூரன்ஸில் எந்தளவுக்கு பாலிசி எடுத்திருக் கிறோமோ, அந்த அளவுக்கே இழப்பீட்டைப் பெற முடியும். ஆனால், வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் சொன்னதை செய்வதில்லை. இதனால் ஒவ்வொரு கஸ்டமரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற கார் இன்ஷூரன்ஸ்களால் பாதிக்கப் படுகிறவர்களில் நீதிமன்றம் செல்கிறவர்கள் சிலர்தான். கன்ஸ்யூமர் கோர்ட், மாவட்ட சப் கோர்ட், அடுத்து மாநில கன்ஸ்யூமர் கோர்ட் அல்லது உயர் நீதிமன்றத் தில்தான் வழக்கு தொடர முடியும். அதிலும் ஆதாராங்கள் சரியாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

கார் இன்ஷூரன்ஸ்... உரிமையாளர்கள் உஷாராக இல்லாவிட்டால்..?

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் க்ளெய்ம் தருவதை விரும்புவதில்லை. உதாரணமாக, ஜாம்ஷெட்பூரில் ஒரு டிரக் திருடுபோனது. இன்ஷூ ரன்ஸில் க்ளெய்ம் கேட்டு உரிமையாளர் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போனார். அவருக்கு க்ளெய்ம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் மாநில கன்ஸ்யூமர் கோர்ட்டில் அப்பீலுக்குச் சென்றது. அந்த கோர்ட்டும் க்ளெய்ம் கொடுக்கும்படி சொன்னது. கடைசியில் உச்ச நீதிமன்றம் சென்ற இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘‘லாரி உரிமையாளர் ஒரிஜினல் ஆர்.சி கொடுக்கவில்லை. டூப்ளிகேட் ஆர்.சி.தான் கொடுத்தார், ஒரிஜினலை வைத்து வேறு எங்காவது லோன் வாங்கியிருக்கலாம்’’ என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால், உச்ச நீதிமன்றமோ, ‘‘அவர்தான் லாரி உரிமையாளரா என்பதை உறுதிப்படுத்தி, அந்த அடிப்படையில் க்ளெய்ம் கொடுக்கும்படி’’ தீர்ப்பளித்திருக்கிறது.

இப்போதுள்ள சூழலில் எல்லோராலும் நீதிமன்றம் சென்று போராட முடியாது. நிறுவனம் உச்ச நீதிமன்றம் வரை சென்றால், அந்த வழக்கு 12 வருடங்கள் நடக்கும். அதிலும் எல்லா வழக்கிலும் பாலிசிதாரருக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 3-ம் நபர் காப்பீடு மட்டுமே செய்கின்றன. கார் உரிமையாளர்களும் குறைவான பிரீமியம் என்பதால், அதற்கான பணத்தை மட்டும் செலுத்திவிடுகிறார்கள். இதனால் கார் உரிமையாளர்களுக்கு பெரிய நன்மை எதுவும் இல்லை. நமக்கு என்ன கவரேஜ் கிடைக்கும் என்பதை அவர்களும் சொல்வதில்லை.

கார், டூவீலர் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் பெட்ரோல் பேங்க், ஏஜென்சிகள் என ஆங்காங்கே தென்படுகிற ஏஜென்டுகளிடம் இன்ஷூரன்ஸ் எடுக்கக் கூடாது. நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கே போய் அனைத்து விவரங்களையும் தெளிவாகக் கேட்டு பாலிசி எடுக்க வேண்டும். வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து ஆறு பேர் வரைக்கும் சேர்த்து இன்ஷூ ரன்ஸ் எடுக்க வேண்டும். இதற்கு ஆகும் பிரீமியம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அதைக் கட்டி பாலிசி எடுக்க வேண்டுமே தவிர, பயன் தராத பாலிசிகளை எடுக்கக் கூடாது’’ என்றார் வழக்கறிஞர் சுரேஷ்.

கார் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் கார் உரிமையாளர்கள் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதே மதுரை தொழிலதிபருக்கு நேர்ந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துச் சொல்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism