மருத்துவக் காப்பீட்டில் க்ளெய்ம் போனஸ் என்றால் என்ன?
இழப்பீடு (க்ளெய்ம்) செய்யாத ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுக்கான கவரேஜ் தொகை அதிகரிக்கப்படுவது நோ க்ளெய்ம் போனஸ் (No claim bonus - NCB) எனப்படும்.
நோ க்ளெய்ம் போனஸ் வகைகள் எவை?
மருத்துவக் காப்பீட்டில் நோ க்ளெய்ம் போனஸ் இரு வகைப்படும்.
1. தொடர்ந்து அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகை.
2. ப்ரீமியத்தில் தள்ளுபடி.
நோ க்ளெய்ம் போனஸ் அதிகபட்சம் எத்தனை சதவிகிதம் கிடைக்கும்?
பொதுவாக, காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து 5% கவரேஜ் தொகை அதிகரிக்கப்படும். அதிகபட்சம் 50% வரை நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்கும்.
எந்தத் தொகைக்கு நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்கும்?
அடிப்படை பாலிசி தொகையின் கவரேஜ் தொகைக்குத்தான், நோ க்ளெய்ம் போனஸ் சதவிகித தொகை அதிகரிக்கப்படுகிறது; க்ளெய்ம் பெறாததால் அதிகரித்து வந்த தொகைக்கு நோ க்ளெய்ம் போனஸ் சதவிகிதம் உயர்த்தப்படுவதில்லை.
பாலிசியை வேறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றினால் நோ-க்ளெய்ம் போனஸ் கிடைக்குமா?
நோ- க்ளெய்ம் போனஸ் என்பது பாலிசிதாரருக்கு வழங்கப்படுகிறது. எனவே, மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஏதாவது ஒரு காரணத்துக்காக வேறு நிறுவனத்துக்கு மாற்றும் போது (Portability) நோ க்ளெய்ம் போனஸ் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல், ஒருவர் வேறு ஒரு மருத்துவக் காப்பீடு அதே நிறுவனத்தில் அல்லது வேறு நிறுவனத்தில் எடுக்கும்போது அதற்கும் நோ க்ளெய்ம் போனஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎந்த வகையான பாலிசிகளுக்கு நோ க்ளெய்ம் போனஸ் சலுகை கிடைக்கும்?
இந்த நோ க்ளெய்ம் போனஸ் என்பது தனிநபர் பாலிசி மற்றும் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசிகளில் வழங்கப்படுகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் காப்பீடு நிறுவனத்துக்கு நிறுவனம், பாலிசிக்கு பாலிசி மாறுபடக்கூடும். மேலும், அனைத்து ஹெல்த் பாலிசிகளிலும் நோ க்ளெய்ம் போனஸ் வழங்கப்படுவதில்லை.
தனிநபர் பாலிசியிலிருந்து ஃப்ளோட்டர் பாலிசிக்கு மாறினால் என்ன நடக்கும்?
ஒருவர் தனிநபர் பாலிசி எடுத்திருக்கும் நிலையில் நோ க்ளெய்ம் போனஸ் சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கும் போதும் நோ க்ளெய்ம் போனஸ் சலுகை கிடைக்கும். ஆனால், அதே சதவிகித அளவுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.

ஹெல்த் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றால் நோ க்ளெய்ம் பாலிசி என்ன ஆகும்?
பாலிசியைப் புதுப்பிக்கும்போதுதான் நோ க்ளெய்ம் போனஸ் சலுகை கிடைக்கும். பாலிசியை புதுப்பிக்கவில்லை என்றால் நோ க்ளெய்ம் போனஸ் செயலிழந்துவிடும் (Deactivated) என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கவரேஜ் அதிகரிப்பு, ப்ரீமியம் தள்ளுபடி, எது லாபகரமாக இருக்கும்?
இது தனிப்பட்ட நபர்களைப் பொறுத்திருக்கிறது. சிலர் கவரேஜ் அதிகரிப்பதை விரும்புவார்கள், சிலர் பிரீமிய தள்ளுபடியை விரும்புவார்கள். மேலும், காப்பீட்டு நிறுவனம் இரு ஆப்ஷன்களையும் வழங்குகிறதா என்பதைப் பொறுத்தும் அமையும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரீமியத் தள்ளுபடியைவிட கவரேஜ் தொகை அதிகரிப்பு அதிக லாபகரமாக இருக்கும். காரணம், ஒரு குடும்பம் ரூ. 10 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறது. இதற்கு ஆண்டு பிரீமியம் ரூ.20,000 என வைத்துக்கொள்வோம். பத்து ஆண்டுகள் க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை என்றால் பத்தாவது ஆண்டில் 50% நோ க்ளெய்ம் போனஸ் சேர்ந்திருந்தால் அப்போது கவரேஜ் தொகை ரூ. 15 லட்சமாக அதிகரித்திருக்கும். இதுவே பிரீமியத் தள்ளுபடி என்றால் ரூ. 20,000 பிரீமியம் கட்ட வேண்டிய இடத்தில் ரூ.10,000 கட்ட வேண்டி வரும். இங்கே ரூ.10,000 என்பதைவிட ரூ.5 லட்சம் கூடுதல் கவரேஜ் என்பதுதான் குடும்பத்தினருக்கு மிகவும் லாபகரமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
பாலிசியை கெடுதேதிக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
பாலிசியின் காலம் முடிவடைந்திருப்பதால் சேர்ந்திருக்கும் போனஸ் (cumulative bonus) மதிப்பு இல்லாமல் போய்விடும். எனவே, நோ க்ளெய்ம் போனஸ் சலுகை பெற பாலிசியை சரியான தேதியில் புதுப்பிப்பது மிக முக்கியமாகும். அதாவது, பொதுவாக, பாலிசிகெடு தேதிக்கு (Due Date) 30 நாள்களுக்குள் புதுப்பிப்பது மிக முக்கியமாகும்.
நோ க்ளெய்ம் போனஸ் வேறு ஏதாவது கூடுதல் சலுகை இருக்கிறதா?
மேலும், தொடர்ந்து 4 ஆண்டுகள் க்ளெய்ம் செய்யவில்லை என்றால் பல காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு தொகையில் 1 சதவிகித அளவுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கிறது.