பிரீமியம் ஸ்டோரி

கோவிட் - 19 பாதிப்பு, அனைவர் மத்தியிலும் மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தக் காப்பீட்டை எடுப்பதன் முக்கியமான நோக்கம், மருத்துவச் சிகிச்சைக்கான தொகையைக்கோரி பெறுவது என்கிற அர்த்தத்தில் இதற்கு ஆரம்பத்தில் ‘மெடிக்ளெய்ம்’ என்கிற பெயர் இருந்தது. மெடிக்ளெய்ம் பாலிசியில் மருத்துமனைச் செலவு, சிறிய கவரேஜ் தொகை போன்ற அம்சங்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகு, ரைடர் பாலிசி இணைப்பு, மருத்துவமனைக்கு வெளியே ஆகும் செலவு, ஆம்புலன்ஸ் செலவு, அதிக கவரேஜ் தொகை போன்ற அம்சங்களுடன் ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ என்கிற பெயரில் மருத்துவக் காப்பீடுகள் கொண்டுவரப்பட்டன.

சிவகாசி மணிகண்டன்
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

மருத்துவக் காப்பீடு ஏன் தேவை?

இன்றைய தேதியில், மருத்துவச் செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகி இருக்கிறது. திடீர் விபத்து, உடல்நலக் குறைவு போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் திடீர் மருத்துவச் செலவைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு அவசியம் ஆகும்.

திடீர் மருத்துவச் செலவு வரும்போது, மாதச் சம்பளம் வாங்கும் பலர் உடனடியாக லட்சக்கணக்கான தொகையைத் திரட்ட இயலாதவர்களாக இருக்கிறார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கு பவர்கள், சொத்து, நகைகளை அடமானம் வைத்துச் சமாளிப்பவர்கள் அந்தக் கடனி லிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றன. சேமிப்பை, முதலீட்டையும் அவசர மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்துபவர்கள் மீண்டும் அந்த சேமிப்பையும் முதலீட்டையும் சேர்க்க பல ஆண்டு காலம் பாடுபட வேண்டியிருக்கிறது.

ஆயுள் காப்பீட்டு பாலிசியைக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், மருத்துவக் காப்பீடு அப்படியில்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவர் பெயரிலும் அவசியம் எடுக்க வேண்டும். பலர் தனக்கு மட்டும் ஹெல்த் பாலிசி எடுத்துவிட்டு, வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று நினைத்து, எடுக்காமல் விட்டுவிடு கின்றனர். மனைவி அல்லது பிள்ளைகளுக்கு விபத்து ஏற்பட்டு அல்லது உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் செலவு செய்யப்போவது குடும்பத் தலைவர்தான் என்பதை நினைவில் கொண்டால், குடும்பத்தினர் அனைவருக்கும் ஹெல்த் பாலிசி எடுக்க குடும்பத் தலைவர் தயங்கமாட்டார்.

மருத்துவக் காப்பீடு ஏன் தேவை?

எவ்வளவு தொகைக்குக் காப்பீடு எடுக்கலாம்?

பொதுவாக, ஒருவர் வசிக்கும் நகரைப் பொறுத்து, காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யலாம். பெரிய நகரமாக இருந்தால், ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரைக்கும், சிறிய நகரமாக இருந்தால், ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். அடுத்து முக்கியமாக, எவ்வளவு தொகை பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவு தொகைக்கு பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது.

விபத்து / நோய் பாதிப்பால் சில சமயங்களில் தற்காலிக அல்லது நிரந்த ஊனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிலைமையைச் சமாளிக்கவும் மருத்துவ பாலிசிகள் இருக் கின்றன. உடல்நலப் பாதிப்பால் சிறிது காலம் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் சம்பள இழப்பை இந்த பாலிசி ஈடுசெய்யும். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது இதர செலவுக்குத் தேவையான தொகை, தீவிர நோய்க்கான சிகிச்சை போன்றவற்றுக்கு பாலிசிகள் இருக்கின்றன. இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மருத்துவக் காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம் அல்லது அடிப்படை மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்துக்கொண்டு துணை பாலிசியாக (ரைடர்) ஆஸ்பிட்டல் கேஷ் இன்ஷூரன்ஸ். ஆக்சிடென்ட் டிஸெபிள்ட்டி பாலிசி, க்ரிட்டிக்கல் இல்னெஸ் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலிசிகளைக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒருவருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை, பாலிசி நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்குவதாகும். மேலும், ஓராண்டில் ஒருமுறைக்கு மேலும் இழப்பீட்டைக் கோர முடியும். இது பாலிசி கவரேஜ் தொகை மற்றும் பாலிசியில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கும் க்ளெய்ம் தொகையைப் பொறுத்து அமையும். பாலிசி கவரேஜ் தொகையை இழப்பீட்டுத் தொகை தாண்டவில்லை எனில், ஓராண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை க்ளெய்ம் பெற முடியும்.

முக்கிய நிபந்தனைகள்…

உடல்நலக் குறைவு, விபத்து பாதிப்பு போன்றவற்றுக்காக 24 மணி நேரமும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். நீண்ட கால நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுப்பது போன்றவற்றுக்கு முன்கூட்டியே காப்பீட்டு நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். பாலிசியின் நிபந்தனையைப் பொறுத்து குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும்.

சிலர் மருத்துவமனையில் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்துவிட்டு, 24 மணி நேரம் தங்கி இருந்ததுபோல் ஆவணங் களைப் பெற்று க்ளெய்ம் பெற விண்ணப்பிப்பது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், காப்பீடு நிறுவனம் நியமித்திருக்கும் மூன்றாம் தரப்பு நிர்வாகத்தினரின் விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தால், இழப்பீடு கிடைக்காது. எனவே, பாலிசியின் நிபந்தனைகளை சரியாகப் பின்பற்றுவது மிக முக்கியம்.

மருத்துவமனை அறைக்கான வாடகை, அவசரக்கால சிசிச்சை செலவு, அறுவைசிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவ ஆலோசகர், மயக்க மருந்து கொடுப்பவர், சிறப்பு மருத்துவர் போன்றவர் களுக்கான கட்டணம், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்து, மாத்திரைகள், நோய் கண்டறியும் சிகிச்சை, இ.சி.ஜி எக்ஸ்ரே உள்ளிட்ட செலவுகளுக்கு பாலிசி யில் க்ளெய்ம் கிடைக்கும்.

மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன் செய்யப்பட்ட செலவு (மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அவசரச் சிகிச்சை செலவு போன்றவை), மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகான செலவு களுக்கும் பாலிசியின் தன்மையைப் பொறுத்து செலவுத் தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.

அறை வாடகை, ஐ.சி.யு மற்றும் மருத்துவர் கட்டணம்

அனைத்துச் செலவுகளுக்கும் மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடு கிடைக்காது. நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் செலவுத் தொகை அனுமதிக்கப்படும். பொதுவாக, அறை வாடகை என்பது காப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம்தான் அனுமதிக்கப்படும். உதாரணத்துக்கு, கவரேஜ் தொகையில் அறை வாடகை தினசரி செலவு 1.5% என்பது பாலிசி நிபந்தனை மற்றும் விதிமுறை என வைத்துக்கொள்வோம். பாலிசி கவரேஜ் தொகை ரூ.3 லட்சம் எனில், அறை வாடகையாகத் தினசரி ரூ.4,500 க்ளெய்ம் செய்ய முடியும். அதற்கு மேற்பட்டு செய்யும் செலவு தொகையைக் கையிலிருந்துதான் போட வேண்டும். இந்த பாலிசியில் ஐ.சி.யு கட்டணம் நாள் ஒன்றுக்கு 3% என்றால் நாள் ஒன்றுக்கு 13,500 ரூபாய், மருத்துவர் கட்டணம் கவரேஜ் தொகையில் 40% என்றால் 1.20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோர முடியும்.

மருத்துவக் காப்பீடு ஏன் தேவை?

எதற்கெல்லாம் இழப்பீடு கிடையாது..?

பொதுவாக வீட்டிலிருந்து சளி, இருமல், ஃபுளு காய்ச்சல், காய்ச்சல், மலேரியா, காசநோய் (டி.பி.) போன்றவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதால் இவற்றுக்கு க்ளெய்ம் கிடையாது. உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்க்கு மருத்துவமனையில் பாலிசி எடுத்து சிறிது காலத்தில் சிகிக்சை எடுத்துக்கொண்டாலும் க்ளெய்ம் கிடையாது. ஆனால், நிபந்தனைக்கு உட்பட்டு சில பாலிசிகளில் ஏற்கெனவே உள்ள நோய்க்கு, பாலிசி எடுத்து 2, 3, 4 ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் க்ளெய்ம் பெற முடியும்.

முக அழகு சிகிச்சை, பல் தொடர்பான சிகிச்சை, போரில் காயம் அடைதல் போன்றவற்றுக்கு க்ளெய்ம் கிடையாது. மேலும், கண்ணுக்கான லேசர் ட்ரீட்மென்ட் செலவு, கான்டாக்ட் லென்ஸ், மூக்கு கண்ணாடிக்கான செலவு போன்றவற்றுக்கும் க்ளெய்ம் கிடையாது. விபத்தில் பல் உடைந்துவிட்டால் அதற்கான சிகிக்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும். பாலிசி விவரப் புத்தகத்தில் எந்தெந்த சிகிச்சைக்கு எல்லாம் இழப்பீடு கிடைக்கும், கிடைக்காது என்கிற பட்டியல் இருக்கும். அதை முன்கூட்டியே அறிந்து பாலிசி எடுப்பது நல்லது.

(வளரும்)

ஆயுள் காப்பீட்டு பாலிசி - மருத்துவக் காப்பீட்டு துணை பாலிசிகள்..!

மருத்துவக் காப்பீட்டு துணை பாலிசிகள் என்பவை ஆயுள் காப்பீட்டுடன் எடுக்க வேண்டிய துணை பாலிசிகள் ஆகும். இந்த ரைடர்கள் வழக்கமான ஹெல்த் பாலிசிகள் போல் இல்லாமல், நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சைக்குத் தேவைப்படும் தொகையைச் சார்ந்திருக்காமல், காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரருக்குக் கொடுக்கும். இந்த ஹெல்த் ரைடர்களை ஆயுள் காப்பீடு எடுக்கும்போதே எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தனியாக எடுக்க முடியாது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் க்ரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியைத் துணை பாலிசியை எடுத்திருந்தால், புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும். நோய் இருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்தாலே போதும். சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கான ஆதாரத்தைத் தர வேண்டியதில்லை; ரைடருக்கான முழுக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு