பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கச்சிதமான மருத்துவக் காப்பீடு எடுக்க கட்டாயம் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

மருத்துவக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

இந்தியாவில் கோவிட் 19 பரவலுக்குப் பிறகு, மருத்துவக் காப்பீடு (Health Insurance) அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. காரணம், வருமானம் ஈட்டிய குடும்பத் தலைவரின் மறைவு பல குடும்பங்களை நிலை குலைய வைத்துவிட்டது. விளைவு, முன்பைவிட மிக அதிகமானவர்கள் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆரம்பித்திருக் கிறார்கள்.

சிவகாசி மணிகண்டன், 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

இந்தியாவில் வருமான வரியை மிச்சப்படுத்தவே அதிகம் மருத்துவக் காப்பீடு எடுக்கப்படுகிறது என்றாலும், பல நேரங்களில் பல பணி யாளர்களின் உயிர் மற்றும் வாழ்நாள் சேமிப்பை அந்தக் காப்பீடுதான் காப்பாற்றி இருக்கிறது. எனவே, ஒருவர் கட்டாயம் அவருக்கும் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கும்போது எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கும் தெரியவில்லை; சிலருக்கும் புரியவில்லை.

ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

1. மொத்த கவரேஜ் தொகை...

மருத்துவக் காப்பீடு பாலிசி யின் கவரேஜ் தொகையைத் தேர்வு செய்யும்போது, இப்போதைய மருத்துவச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு குறைவான தொகைக்கு பாலிசி எடுக்கக் கூடாது. காரணம், இந்த பாலிசியை 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கழித்துக்கூட பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். அப்போது பாலிசியின் கவரேஜ் தொகை குறைவாகவும் மருத்துவச் சிகிச்சைக்கான தொகை அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் நம் கையிலிருந்து அதிகமான பணத்தைக் கட்ட வேண்டும். விலைவாசி உயர்வை மனதில் கொண் டால், அதுவும் மருத்துவ பணவீக்கத்தைக் கவனத்தில் கொண்டால் பிற்காலத்தில் எடுக்கப்போகும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும்.

அதாவது, பாலிசி எடுத்து பல ஆண்டுகள் கழித்து ஏதாவது மருத்துவச் சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது செலவுகளை ஈடுகட்ட சிறிய காப்பீட்டுத் தொகை போதுமானதாக இருக்காது. பணவீக்க அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு அதிக தொகைக்குக் காப்பீடு எடுங்கள்.

ஆரம்பத்தில் அதிக கவரேஜ் தொகைக்கு பிரீமியம் கட்ட முடியவில்லை எனில், பாலிசி எடுத்து 3 ஆண்டு அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகு கவரேஜ் தொகையை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

2. பாலிசி கவரேஜ் வரம்பைக் கவனியுங்கள்...

எந்த இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாலும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் (Terms and Conditions) கவனிப்பது கட்டாயம். அவற்றில் முக்கிய மாக, மருத்துவமனை அறை வாடகைக்கு பாலிசியில் வரம்பு இருக்கும். அதாவது, கவரேஜ் தொகையில் 1% அல்லது 2% என்பது போல்தான் அறை வாடகைக்கு தொகை வழங்கப்படும்.

ஒரு பாலிசியின் கவரேஜ் தொகை ரூ.2 லட்சம் என்றும், அறை வாடகை வரம்பு நாள் ஒன்றுக்கு 1% என வைத்துக்கொண்டால், ரூ.2,000 மட்டுமே அறை வாடகை அனுமதிக்கப்படும். அதிக வாடகை அறையில் இருந்தால் மீதித் தொகையைக் கையிலிருந்து செலுத்த வேண்டும். மேலும், பல பாலிசியின் அறை வாடகையின் விகிதாசாரத்துக்கேற்பதான் இதர செலவுகளுக்குமான கவரேஜ் அளவு இருக்கும். எனவே, இந்த அம்சங்களைக் கவனித்து அறைகளைத் தேர்வு செய்தால், அதிக தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.

மேலும், ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எடுக்கப்படும் சிகிச்சைக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிகிச்சை செலவுகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்பது போன்ற உள்ளடக்கிய நிபந்தனை களைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.இவற்றைக் கவனிக்காமல் பாலிசி எடுத்து அதைப் பயன்படுத்தும்போது கையிலிருந்து அதிக தொகை செலுத்த வேண்டியதாக இருக்கும்.

கச்சிதமான மருத்துவக் காப்பீடு எடுக்க கட்டாயம் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

3. ரொக்கமில்லா சிகிச்சை வசதி...

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. இதனால் அவர்களின் பாலிசிதாரர்கள் அந்த மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை (Cashless Treatment) எடுத்துக்கொள்ள முடியும்.

காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேரும்போது பணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. காப்பீட்டு நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு நிர்வாகிக்கு (TPA) தகவல் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடியும். எனவே, காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப் பட்டுள்ள மருத்துவமனைகளின் நெட்வொர்க்கைப் பார்க்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் இருந்தால் நல்லது.

மேலும், உங்கள் வீட்டின் அருகில் அது போன்ற நெட்வொர்க் மருத்துவமனைகள் இருக்கிறதா என்பதைக் கவனித்து எடுப்பது நல்லது.

4. உரிமைகோரல் தீர்வு விகிதம்...

பாலிசி எடுக்கும்முன், காப்பீட்டு நிறுவனத்தின் உரிமைகோரல் தீர்வு விகிதம் என்கிற க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தைக் (Claim Settlement Ratio) கவனிக்க வேண்டும்.

இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்ட உரிமை கோரல்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவையில் உள்ள உரிமைகோரல்களின் எண்ணிக்கை ஆகியவற்றிலிருந்து அந்தக் காப்பீட்டு நிறுவனம் எந்த அளவுக்கு இழப்பீடு கொடுத்திருக்கிறது என்பது தெரியவரும்.

அதிக இழப்பீடு விகிதத்தைக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் பாலிசி எடுப்பதன்மூலம் பாலிசியில் இழப்பீடு மறுப்பதற் கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.

5. காப்பீடு எடுக்கும் வயது...

வயதான நிலையில், நோய் களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாலிசி எடுக்கும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது. இதனால், காப்பீடு பாலிசி தராமல் மறுக்கலாம் அல்லது அதிக பிரீமியம் நிர்ணயம் செய்யலாம். எனவே, மருத்துவக் காப்பீட்டை இளம் வயதிலேயே எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும், வயதான நிலையில் பாலிசி எடுக்கும்போது அதிக நிபந்தனைகள் விதிக்கப்படும். இளம் வயதில் பாலிசி எடுக்கும் போது, சுலபமாக பாலிசி கிடைப்பதுடன், அதிக தொகைக் கும் பாலிசி கிடைக்கும். பிரீமிய மும் குறைவாக இருக்கும். நோய் பாதிப்பு இருக்காது என்பதால், சிகிச்சை எடுத்துக்கொள்வதற் கான காத்திருப்புக் காலம் இருக்காது.

6. குடும்பத் திட்டம்...

குடும்பத்தில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியே மருத்து வக் காப்பீடு பாலிசி எடுத்தால் பிரீமியம் அதிகமாக இருக்கும். அதற்குப் பதிலாக பொதுவாக, குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குடும்பத் திட்டம் என்கிற ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை எடுப்பது நல்லது.

ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில் ஒரு தனிநபருக்கான இழப்பீட்டுத் தொகை, தனிநபர் பாலிசியைவிட அதிகமாக இருக்கும். மேலும், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் (குடும்பமாக காரில் சென்றபோது விபத்து மற்றும் கோவிட் 19 போன்ற தொற்று நோய் பரவல் தவிர்த்து) மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், குடும்பத் திட்டம் லாபமாக இருக்கும்.

கச்சிதமான மருத்துவக் காப்பீடு எடுக்க கட்டாயம் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

7. காப்பீட்டுத் தொகையை மீட்டமைத்தல்...

ஒரு குறிப்பிட்ட காலத்தில் காப்பீட்டுத் தொகை தீர்ந்து விட்டால், காப்பீட்டுத் தொகையை மீட்டெடுப்பது (Restoration) முக்கியம் ஆகும். அதாவது, ஓராண்டில் பாலிசியின் கவரேஜ் தொகை முழுவதும் க்ளெய்ம் செய்யப்பட்டுவிட்டால், அந்தப் பாலிசியில் அந்த ஆண்டில் மேற்கொண்டு சிசிச்சை எடுக்க முடியாது.

சற்றுக் கூடுதல் பிரீமியம் கட்டி காப்பீட்டுத் தொகையை அதிகரித் துக்கொள்ளும் வசதியை ஏற்படுத் திக்கொள்வது மூலம் அந்த ஆண்டில் வழக்கமான கவரேஜ் தொகை அனைத்தும் தீர்ந்து விட்டால், கவரேஜ் தொகையை மீட்சி செய்து அதிகரித்து தருவார்கள்.

இப்படி கவரேஜ் தொகை மீட்டெடுப்புக்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கின்றன. இருந்தாலும் பாலிசி வாங்கும்போது இதைக் கருத்தில்கொண்டு கவரேஜ் தொகை மீட்டெடுப்புக்கு அடிப் படை பாலிசி எடுக்கும்போதே ஏற்பாடு செய்வது நல்லது.

8. கோ-பேமென்ட்...

மருத்துவக் காப்பீட்டுத் தொகை யில் கோ–பேமென்ட் (Co-payment) இருக்கும். அதாவது, ஒருவர் ஒரு பாலிசியில் இழப்பீடு கோருகிறார் எனில், இழப்பீட்டுத் தொகையில் 5 - 10% தொகையை அவர் கையிலிருந்து செலுத்த வேண்டி இருக்கும். இதைத்தான் ‘கோ-பேமென்ட்’ என்பார்கள். இந்த வரம்பு குறைவாக இருந்தால், பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். ‘கோ-பேமென்ட்’ அதிகமாக இருந்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.

9. துணை வரம்புகள்...

இதே போல், மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் ஒவ்வொரு சிகிச்சைக்கான செலவுக்கும் ஒரு துணை வரம்பு (Sub- limit) வைத்திருப்பார்கள். அதற்கு மேல் செலவானால் தர மாட்டார்கள்.

ஒரு பாலிசியில் ‘கோ-பேமென்ட்’, துணை வரம்பு இரண்டும் இருந்தால், அதற்கேற்ப பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். மேலும், இந்த ‘கோ-பேமென்ட்’ மற்றும் துணை வரம்புகள் இல்லாத அல்லது குறைவாக உள்ள பாலிசிகளைத் தேர்வு செய்ய முடியும். அப்படி குறைவாக இருக்கும்பட்சத்தில் பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.

போதிய தொகைக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி உங்களிடம் இருக்கும்பட்சத்தில் திடீர் மருத்துவச் செலவு களைக் கண்டு பயப்படத் தேவையில்லை; இதனால், மன நிம்மதி தானாகவே வரும். வரும்முன் காப்பதுதானே புத்திசாலித்தனம்!

குரூப் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டியது...!

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, குரூப் மருத்துவக் காப்பீடு (Group Health Insurance) பாலிசியை நிறுவனம் எடுத்துக் கொடுத் திருக்கும். இதனால், பணியாளர்கள் தனியாக பாலிசி எடுப்பதில்லை. அலுவலக பாலிசிகளில் பெரும்பாலும் குறைவான தொகைக்குதான் கவரேஜ் இருக்கும். இதனால், பல நேரங்களில் மருத்துவச் செலவுகளுக்கான தொகையைக் கையிலிருந்து அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, குரூப் பாலிசி வைத்திருப்பவர்கள் தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். குறைந்தபட்சம் அலுவலக அடிப்படை பாலிசியின் அடிப்படையில் டாப்அப் பாலிசியாவது எடுத்துக்கொண்டால் கையிலிருந்து அதிக தொகை போடவேண்டி வராது.