நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் அடமானக் கடன்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அடமானக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
அடமானக் கடன்

L O A N I N S U R A N C E

சென்னையில் கீழ்ப்பாக்கம், அயனாவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தலா 52,000 ரூபாய் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தனர். வாடிக்கையாளர்கள் கட்டிய பாலிசி பணத்துக்கேற்ப கடன் தருவதாக அதன் ஊழியர் சொல்ல, உடனே இருவரும் கடன் தரும்படி கேட்க, அந்த ஊழியர் கடன் தர மறுக்க, இதனால் கோபமடைந்த இருவரும் அந்த ஊழியரைக் கடத்திச் சென்று மிரட்ட, ஒரு வழியாகக் காவல் துறையினர் வந்து அந்த ஊழியரை மீட்டிருக்கின்றனர்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து அடமானக் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்ன, அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு, கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள தனியார் வங்கி அதிகாரியான மணியன் கலியமூர்த்தியிடம் பேசினோம்.

மணியன் கலியமூர்த்தி
மணியன் கலியமூர்த்தி

“ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டைப் பயன்படுத்த முடியும் என நினைக்க வேண்டாம். நிதி சார்ந்த சிக்கல் ஏற்படும் சமயத்தில் காப்பீட்டை அடமானமாக வைத்து கடன் பெறவும் முடியும். ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், சில வங்கிசாரா நிதி நிறுவனங்கள் காப்பீட்டை அடமானமாக வாங்கிக்கொண்டு கடன் வழங்குகின்றன.

பாலிசி அடமானக் கடனைப் பொறுத்தவரை, சரண்டர் மதிப்பு இருக்கும் பாலிசிகளை மட்டுமே அடமானமாக வைக்க முடியும். அதாவது, எண்டோவ்மென்ட் மற்றும் மணிபேக் பாலிசிகளை மட்டுமே அடமானம் வைக்க முடியும். டேர்ம் பாலிசி, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட சில பாலிசிகளை அடமான மாக வைக்க முடியாது.

பொதுவாகவே, எண்டோவ்மென்ட் பாலிசிகளில் முதிர்வுக் காலத்தை 16 ஆண்டுகள் மற்றும் 21 ஆண்டுகள் என்றுதான் பெரும்பாலான இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இந்த பாலிசியை அடமானமாக வைத்து கடன் வாங்குபவர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கான பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். அப்போதுதான் ‘கேரன்டீடு ‘சரண்டர் வேல்யூ’-வுக்கு பரிசீலிக்கப்படும். அந்த கேரன்டீடு சரண்டர் மதிப்பை வைத்துதான், பாலிசி அடமானக் கடன் கொடுக்க முடியும்.

உதாரணத்துக்கு, ஒரு பாலிசிதாரர் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் பிரீமியம் செலுத்தியிருக்கிறார். மூன்று வருடத்தில் அவர் மூன்று லட்சம் ரூபாயை பிரீமியமாக செலுத்தியிருப்பார். இந்த மூன்று லட்சம் ரூபாயில், அதிகபட்சம் 40%, அதாவது 1,20,000 ரூபாய் கேரன்டீடு சரண்டர் வேல்யூவாக உருவாகியிருக்கும்.

இந்த மதிப்பில் அதிகபட்சம் 60% தொகையை, அதாவது 72,000 ரூபாயை கடனாக அந்த பாலிசிதாரர் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 20,000 வரை கடன் பெறலாம். பாலிசிக் காலம் அதிகரிக்கும் பட்சத்தில் சரண்டர் மதிப்பும் அதிகரிக்கும் என்பதால், பாலிசியின் இறுதிக் காலத்தில் அடமானம் வைக்கும்போது கூடுதல் தொகையைக் கடனாகப் பெற முடியும்.

தனிநபர் கடனுக்கான வட்டியைவிட பாலிசியை அடமானம் வைத்து வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் குறைவு. பெரும் பாலான வங்கிகளில் தனிநபர் கடனுக்கு 15% - 24% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாலிசி அடமானக் கடனுக்கு 10% - 12% வட்டிதான் வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கடனில் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டுமே முக்கியமான ஆவணம் ஆகும். இந்தக் கடனிலும் செயலாக்கக் கட்டணம் இருக்கிறது. ஆனால், மற்ற தனிநபர் கடன்களைவிட இந்தக் கடனில் அந்தக் கட்டணம் குறைவு. மேலும், பாலிசியை அடமானமாக வைத்து, கடன் வாங்கும்பட்சத்தில் கடன் வழங்கும் நிறுவனத்துக்கு அந்த பாலிசியின்மீது அனைத்து அதிகாரமும் உண்டு. கடன் காலத்தில் ஏதேனும் அசம்பா விதம் நடக்கும்பட்சத்தில் க்ளெய்ம் தொகை நேரடியாக நாமினிக்கு செல்லாது.

அடமானக் கடன்
அடமானக் கடன்

கடன் கொடுத்த நிறுவனம், கடனுக்கான தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகை யைத்தான் நாமினிக்கு வழங்கும். அதனால் குறுகியகால தேவை களுக்கு மட்டும் காப்பீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கலாம்” என்றார் தெளிவாக.

இன்ஷூரன்ஸ் எடுப்பதே பாதுகாப்புக்காகத்தான், அதை வைத்து அடமானக் கடன் பெறுவது சரியா என நிதி ஆலோசகர் வித்யாபாலாவிடம் கேட்டோம். “இன்ஷூரன்ஸ் எடுக்கும் விஷயத்தில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு கிடையாது. பாதுகாப்புக்காக மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இன்ஷூரன்ஸ் என்றாலே, ஹெல்த் இன்ஷூரன்ஸ், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியும்தான். இவை தவிர, வேறு எந்த பாலிசியும் தேவை இல்லை.

வித்யாபாலா
வித்யாபாலா

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் லாப நோக்கத்துக்காக விற்கப் படும் பாலிசிகளை முதலீடாக நினைத்து மக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகபட்சம் 5 சதவிகித மாகத்தான் இருக்கும். இப்படியான முதலீட்டுக் கண்ணோட்டமே தவறாக இருக்கும்போது, அந்த பாலிசிகளைக் கொண்டு கடன் வாங்கலாம் என்கிற எண்ணம் உருவாவது மிகவும் தவறான விஷயமாகும். ஏற்கெனவே வருமானம் குறைவாக உள்ள ஒரு விஷயத்தை, அடமானமாக வைத்து 8-10% வரை வட்டியை அடமானக் கடனுக்குக் கொடுப்பது முட்டாள்தனம்.

இதற்கு மாறாக, பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்து, அந்த முதலீட்டுப் பத்திரங்களை அடமானமாக வைத்துக் கடன் பெறுவது நல்லது. புத்திசாலித்தனமும்கூட. அதனால் தேவைக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டு, அடமானக் கடன் தேவைகளுக்கு மற்ற முதலீடுகளைப் பரிசீலிக்கலாம்” என்றார்.

இனியாவது மக்கள் விழித்துக் கொள்ளட்டும்!