பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தின் நிதிக் காவலன்!

டேர்ம் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ்

காப்பீடு என்பது ஹெல்மெட் உயிரை எப்படிப் பாதுகாக்கிறதோ, அது போன்ற தாகும். ஆயுள் காப்பீடு என்கிறபோது முழுக்க முழுக்க காப்பீட்டுப் பாதுகாப்பு அளிக்கும் டேர்ம் பிளானை எடுப்பது மிக அவசிய மாகும். இந்தக் காப்பீடு குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாப்பு அளிப்பதால், டேர்ம் இன்ஷூரன்ஸ் எனப்படுகிறது.

டேர்ம் பிளான் எடுப்பதன் மூலம் கிடைக்கும் ஐந்து முக்கியப் பலன்களாக ஆயுள் காப்பீடு, வருமான வரிச் சேமிப்பு, அதிக காப்பீட்டு கவரேஜ், குறைவான பிரீமியம், குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பு ஆகியவை உள்ளன.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com/

நாமினி நியமிப்பதன் அவசியம்...

இந்த பாலிசியில், பாலிசி எடுத்திருப்பவருக்கு திடீரென ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நாமினிக்கு நிதி சார்ந்த பலன் கிடைக்கும். இங்கே நாமினி என்பவர் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் அல்லது உறவினர், நண்பர் ஆகிய யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் இந்தப் பணத்தைப் பெற்று வாரிசு களுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டவர் களாகும். கூடியவரையில் குடும்ப உறுப்பினர் களில் பொறுப்பான ஒருவரை நாமினியாக நியமிப்பது நல்லது.

நாமினி நியமிக்கப்படவில்லை எனில், நீதிமன்றத்தின் மூலம்தான் இழப்பீட்டுத் தொகையை வாரிசுகள் பெற வேண்டும். இளைஞர்கள் திருமணம் ஆகும் முன் பாலிசி எடுக்கும்போது பெற்றோரை நாமினியாக போடுகிறார்கள். திருமணமான பின் மனைவியை நாமினியாக மாற்றிக்கொள்வது அவசியமாகும்.

மிகக் குறைந்த பிரீமியம்...

இந்த பாலிசி குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் காப்பீடு கவரேஜ் அளிப்பதாக இருக்கிறது. இளம் வயதில் பாலிசி எடுக்கும் போது பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். 18 வயதான ஒருவருக்கு ரூ.1 கோடிக்கு கவரேஜ் எனில், மாத பிரீமியம் சுமார் ரூ.500தான். ஆண்டு பிரீமியம் எனில், சுமார் ரூ.11,000தான். இளம் வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். 30 வயதுள்ள ஒருவர் ரூ.1 கோடிக்கு டேர்ம் பிளான் எடுக்க வேண்டும் எனில், ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.20,000 ஆகும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தின் நிதிக் காவலன்!

யார் எடுக்க வேண்டும்?

இந்த பாலிசியை திருமணம் ஆகாத வேலை பார்க்கும் ஆண் / பெண், வேலை பார்க்கும் கணவன்/ மனைவி, சுயதொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், சார்ந்திருக்கும் பிள்ளைகள் அல்லது பேரன்களைக் கொண்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் அவசியம் எடுக்க வேண்டும்.

வருமான வரிச் சலுகை...

டேர்ம் பிளானுக்குக் கட்டும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. மேலும், பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு குடும் பத்தினருக்குக் கிடைக்கும் இழப்பீட்டுக்கும் வரி கிடையாது.

எந்த நிதிப் பாதிப்புக்கெல்லாம் கைகொடுக்கும்?

பொதுவாக, வீட்டின் வருமானம் ஈட்டும் நபர் திடீரென மறைந்துவிட்டால் குடும்பம் உடனடியாக நிதிச் சிக்கலுக்கு உள்ளாகும். அவசர கால நிதி ஏதாவது சேர்த்து வைத்திருந்தால், 3 முதல் 5 மாத செலவுகளை சமாளிக்க முடியும். அதன் பிறகு குடும்பச் செலவுகளான வீட்டு வாடகை/ வீட்டுக் கடன் மாதத் தவணை, குடும்ப மளிகைச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், பிள்ளைகளின் பள்ளிக்கூடச் செலவுகள் ஆகியவற்றை சமாளிப்பது மிக கஷ்டமாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்கள் யாராவது குறிப்பாக, கணவன்/ மனைவி வேலைக்குச் சென்றால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும். உடனடி யாக வேலை கிடைக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறி தான். அதுமட்டுமல்ல, பிள்ளை களின் உயர்கல்வி, கல்யாணம், கணவன் / மனைவியின் ஓய்வுக் காலம் மிகவும் சிக்கலாக மாறிவிடும்.

இந்த இடத்தில்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் அதிக தொகைக்கு எடுத்திருக்கும் பட்சத்தில் அது குடும்பத்தின் உடனடிச் செலவுகளை சமாளிக்கவும் நீண்ட கால நிதி இலக்குகளை நிறைவேற்றவும் உதவுகிறது.

உதாரணமாக, மாதம் ரூ.60,000 சம்பளம் வாங்கும் ஒரு குடும்பத் தலைவர் அவரின் ஆண்டுச் சம்பளத் தைப்போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு அதாவது, ரூ.1 கோடிக்கு டேர்ம் பிளான் எடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் விபத்து ஒன்றில் இறக்கிறார் எனில், அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கிடைக்கிறது. இதை ஆண்டுக்கு 6% வட்டி கிடைக்கும் முதலீட்டுத் திட்டம் ஒன்றில் முதலீடு செய்யும்பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் கிடைக்கும். அதாவது, மாதம் ரூ.50,000 கிடைக்கும். குடும்பத்துக்கு வருமானம் தருபவர் இல்லை எனில், இந்த ரூ.50,000 குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவும். இடையில் பிள்ளை களின் கல்வி, திருமணத்துக்குத் தலா ரூ.25 லட்சம் எடுத்தாலும் மீதி ரூ.50 லட்சம் இருக்கும். அதைக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் நிதி சார்ந்த பிரச்னைகள் இல்லாமல் வாழ முடியும்.

ஆசைகளை நிறைவேற்றும் அதே வேளையில்...

புதிதாகத் திருமணமான மனைவிக்குப் புத்தாடைகள், புதிய ஸ்மார்ட் போன்கள், ரோஜா பூக்கள், சாக்லேட்டுகள் வாங்கிக் கொடுப்பது வெளி யில் சாப்பிட அழைத்துச் செல்வது, சினிமாவுக்கு கூட்டிச் செல்வது ஆகியவை முக்கியம்தான். ஆனால், ஆசை மனைவியின் எதிர் காலத்தைக் கவனத்தில் கொண்டு தனக்குப் போதிய அளவுக்கு டேர்ம் பிளான் எடுப்பது மிக அவசியமாகும்.

ஒரு பெண் பணிபுரியும்பட்சத்தில் அவரும் டேர்ம் பிளான் எடுப்பது மிக அவசியமாகும். காரணம், இன்றைய காலகட்டத்தில் குடும்பமானது பணிபுரியும் மனைவியின் வருமானத்தையும் சார்ந்திருப்பதாகும். விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுக்கும்போது இன்றைக்கு கணவன்/மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்கிற நிலை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்களில் காணப்படுகிறது.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தின் நிதிக் காவலன்!

சுயமாக சம்பாதித்தாலும்...

தொழில்வல்லுநர்கள், சுய தொழில் செய்பவர்கள் சுயமாக சம்பாதித்தாலும் அவர்களும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது கட்டாயமாகும். காரணம், அவர்களையும் சார்ந்து குடும்ப உறுப் பினர்கள் (கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர்) இருக்கிறார்கள். இன்றைக்கு உலகமானது மிகவும் விரைவானதாக மாறியிருக்கிறது. பயணம் தொடங்கி பணிப் பளு வரை பலவும் சிக்கலாக மாறியிருக்கிறது.எனவே, வருமானம் ஈட்டும் வல்லுநர்கள் கட்டாயம் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

மாதச் சம்பளம் வாங்கு பவர்களுக்கு பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் மூலமான காப்பீடு போன்ற சில சலுகைகள் இருக்கின்றன. ஆனால், சுயதொழில் செய்பவர் களுக்கு அப்படி எதுவும் இல்லை என்பதால், அவர்கள் கட்டாயம் டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் ஆகிய வற்றை நிறைவேற்ற கணவன்/மனைவி முதலீடு செய்து வருவார்கள். இவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் முதலீடு தடைபடும். அப்போது பிள்ளை களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும். இதை தடுக்க முதலீடு செய்பவர்கள் எந்த இலக்குக்காக முதலீடு செய்கிறார்களோ, அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிக தொகைக்கு டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது நல்லதாகும்.