Published:Updated:

150 சிசிக்கு மேல் உள்ள பைக்... க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்!

மோட்டார் இன்ஷூரன்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

நீங்கள் 150சிசி-க்குமேல் பைக் வைத்திருந் தால், தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கான உங்கள் இழப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது...’’ - இப்படி ஒரு தகவல் கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் பரவி, வைரலாகி இருக்கிறது.

எஸ்.ஶ்ரீதரன் 
நிதி ஆலோசகர், 
Wealthladder.co.in
எஸ்.ஶ்ரீதரன் நிதி ஆலோசகர், Wealthladder.co.in

லூதியானாவைச் சேர்ந்த ஒருவர், இன்ஷூரன்ஸுக்கான இழப்பீட்டைக் கேட்க, அவரது கோரிக்கையை நிராகரித்ததுடன் மேற்சொன்ன காரணத்தையும் சொல்லி ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் கடிதம் அனுப்ப, அந்தக் கடிதம்தான் வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வந்தது.

இந்தக் கடிதம் 2020 ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதியில் காப்பீட்டு நிறுவனத்தால் அனுப்பப்பட்டது. ஓராண்டுக் காலம் இந்தக் கடிதத்தை யாருமே கண்டுகொள்ளாத நிலையில், தற்போது திடீரென இந்தக் கடிதத்தைத் தற்போது எல்லோரும் பகிர்ந்து வருகிறார்கள்.

150 சிசிக்கு மேல் உள்ள பைக்...
க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்!

இதைத் தொடர்ந்து, ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் தற்போது விளக்கம் அளித்திருக்கிறது. இழப்பீடு கேட்ட இந்தக் காப்பீட்டாளரின் குடும்பத்துக்குக் காப்பீட்டுத் தொகையானது கடந்த வருடமே வழங்கப் பட்டுவிட்டது. மேலும், இந்த பாலிசியில் குறிப் பிட்டுள்ள இன்ஜின் திறன் பழைய பாலிசிகளில் இருந்தது. கடந்த அக்டோபர், 2020-க்குப் பிறகு இந்த விதிமுறையானது பாலிசியிலிருந்து நீக்கி, அதன்பின் வந்த பாலிசிகளிலும் மேலும் ஏற்கெனவே எடுத்த பாலிசிகளிலும் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்தின் இன்ஜின் திறன் எதுவாக இருந்தாலும் அந்த பாலிசியின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும் வகையில் பாலிசி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் சொல்லியிருக்கிறது.

ஆனால், சிலபல காரணங்களால் மோட்டார் வாகனச் சட்டப்படி தனிநபர் விபத்துக் காப்பீடு மறுக்கப்பட நிறையவே வாய்ப்புள்ளது. அந்தக் காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

 வாகன ஓட்டி மது அருந்தி வண்டி ஓட்டினால் க்ளெய்ம் வழங்கப்பட மாட்டாது.

 இரு சக்கர வாகனத்தை வணிக ரீதியாக உபயோகப்படுத்தும்போது விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் கிடைக்காது.

 ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சுமை ஏற்றிச் செல்லும்போது விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது.

 மூன்றாவது நபர் பாலிசி எடுத்திருக்கும் தருவாயில், வாகனத்துக்குச் சொந்த சேதம் (ஓன் டேமேஜ்) ஆகும் தருவாயில் க்ளெய்ம் கிடைக்காது.

 ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் விபத்து நடந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் க்ளெய்ம் செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தக் கால அவகாசத்தை மீறினாலும் க்ளெய்ம் மறுக்கப்படலாம்.

 பழைய வாகனத்தை வாங்கி, பெயர் மாற்றம் செய்யும்போது இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் பெயர் மாற்றம் செய்வது மிகவும் அவசியம். அவ்வாறு செய்யவில்லை எனில், க்ளெய்ம் மறுக்கப்படலாம்.

ஆகவே, ஒரு வாகனம் வாங்குவதற்கு செலவிடும் நேரத்தில், ஒரு சில நிமிடங்கள் வாகன இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதும் ஒதுக்கி பாலிசியின் விதிமுறைகளை ஆராய்ந்து எடுப்பது அவசியத்திலும் அவசியம். அப்படிச் செய்தால்தான், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்ததற்கான அர்த்தமே நிறைவேறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு