Published:Updated:

ஆயுள் காப்பீட்டு பாலிசி... பிரீமியம் செலவைக் குறைக்க சிறந்த வழிகள்..! - நிபுணர் சொல்வது என்ன?

பிரீமியம் செலவு அதிகம் என்று நினைத்து, இன்ஷுரன்ஸ் பாலிசியை எடுக்காமலே இருந்து விடுகிறார்கள் சிலர்!

பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கையில் நிச்சயமற்ற சூழல்களின் போது அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க அவசியமாக இருப்பது ஆயுள் காப்பீடு. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லாதபோது, குடும்பத்தினர் கஷ்டப் படாமல் வாழ்க்கையைத் தொடரத் தேவையான நிதி உதவியை வழங்குகிறது. இதனால் குடும்பத்தினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
ஆயுள் காப்பீட்டு பாலிசி... பிரீமியம் செலவைக் குறைக்க சிறந்த வழிகள்..! - நிபுணர் சொல்வது என்ன?

இது பலருக்குத் தெரிந்திருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்காமலே விட்டுவிடுகிறார்கள். இதற்கு ஒரு முக்கியக் காரணம், பாலிசிக்கான பிரீமியம் தொகை. ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் தொகை உலகின் வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போதும் நம் நாட்டில் மிகவும் குறைவுதான். ஆனால், பெரும்பாலான மக்கள் அது அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசியையே எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டால் பிரீமியம் செலவை குறைக்கலாம். புத்திசாலித்தனமாகக் குறைக்கும் சில வழிகள் இனி...

1. இளமையிலேயே பாலிசி எடுங்கள்...

உங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசியின் பிரீமியத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளில் வயது ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும், ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இறப்புக்கான கவரேஜ் பிரீமியம் அதிகரிக்கும். எனவே, நீங்கள் வயதாகும்போது ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தால் பிரீமியம் மிகவும் உயர்ந்துவிடுகிறது.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

உங்களின் 20 வயதிலோ, 30-களின் முற்பகுதியிலோ இளம் வயதில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். ஆகவே, வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் ஆயுள் காப்பீடு எடுப்பது, ஒருவரின் வாழ்வின் பிற்காலத்தில் விவேகமாக அதிக பலனை பெற முடியும்.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

2. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஒருவரின் மருத்துவ வரலாற்றை உற்றுக் கவனிக்கின்றன. ஏனெனில், மோசமான உடல்நலத்துடன் இருக்கும் ஒருவர், சிறந்த உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரைவிட உயிருக்கு ஆபத்தான நோய்களுக்குப் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் புகைபிடிப்பவர்களுக்கான பிரீமியம், புகைபிடிக்காதவர்களுக்கான பிரீமியத்தைவிட 10 மடங்கு அதிகம் இருக்கிறது.

எளிதாகச் சொன்னால், ஒருவர் ஆரோக்கியமானவர் என்றால், குறைந்த பிரீமியத்தை அவர் செலுத்துவார். உடல்திறனை வலுப்படுத்த, பல ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், உடற்பயிற்சிகள், ஓட்டம், நீச்சல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்ற நேர்மறையான ஆரோக்கிமான மாற்றங்கள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் பிரீமியத்தில் தள்ளுபடி வழங்குகின்றன.

3. ஆண்டுக்கு ஒருமுறை பிரீமியம்

ஆண்டுக்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தும் போது தானாகவே பிரீமியம் தொகை குறைந்துவிடும். மாதம்தோறும் பிரீமியம் செலுத்துவதைவிட ஆண்டுக்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தும்போது உங்கள் காப்பீட்டு நிறுவனம் பிரீமியத்தில் தள்ளுபடியை உங்களுக்குத் தரும்.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

தனிநபரின் வருமானம் மற்றும் பட்ஜெட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்வது, ஆண்டுக்கு ஒருமுறை மொத்தமாக பிரீமியத்தைச் செலுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். ஆனால், இந்தத் தொகையைச் சேர்க்க ஆர்.டி அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரலாம். இதன் மூலம் வருமானம் வரும் அதேநேரத்தில், பிரீமியம் செலவும் குறையும். இதனால், ஆண்டு முழுவதும் பிரீமியம் செலுத்துவது பற்றிக் கவலைப்படாமல் இருக்கவும் முடியும்.

இன்ஷூரன்ஸ் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஓர்அம்சம். இதை எடுக்கும்போது ஏற்படும் சில அசெளகர்யங்களைச் சரிசெய்ய நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றி இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பதே சரி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிக கவரேஜ் அவசியம்..!

யுள் காப்பீடு பாலிசி எடுக்க நீங்கள் தயாராக இருந்தால், உங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்காலம் சரியான கவரேஜ் தொகையுடன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம். குடும்பத்தில் சம்பாதிப்பவரின் துரதிர்ஷ்டவசமான மரணத்தின்போது, பரிந்துரைக்கப்பட்டவர்(கள்) பெறும் காப்பீட்டுத் தொகையை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உறுதியளிக்கிறது.

குடும்பத்தின் சம்பாதிப்பவரின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்குப் பிறகும், தற்போதைய வாழ்க்கைமுறைக்கு ஏற்ப, ஒருவரின் குடும்பம் ஒரு வசதியான வாழ்க்கைமுறையைத் தொடர்ந்து நடத்துவதை இந்த பாலிசி உறுதி செய்கிறது. குடும்பத்தில் முதன்மையாகச் சம்பாதிப்பவரின் இழப்பு, குடும்பத்தில் நிதி வெற்றிடத்துக்கு வழிவகுக்கிறது. இது தற்போதைய வாழ்க்கைமுறையைப் பலவீனப்படுத்துகிறது மற்றும் குடும்பத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறைகளை நோக்கித் திரும்பும்படி கட்டாயப்படுத்துகிறது. இதனால், குறைந்த பிரீமியம் தொகையில் கணிசமான கவரேஜ் தொகையை உறுதிசெய்யும் டேர்ம் பிளான்களை வாங்குவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவை அதிக மதிப்புடையவை மற்றும் நீங்கள் தேடும் பாதுகாப்புத் தேவைகளை ஈடுகட்ட உதவும். மேலும், குடும்பம் பெரிதாகும்போது, நிதி இலக்குகள் மாறும்போது, புதிதாக கடன் வாங்கும்போது ஆயுள் காப்பீடு கவரேஜ் தொகையை அதிகரிப்புது மிக முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு