Published:Updated:

தீவிர நோய் பாதிப்பு பாலிசியை ஏன் எடுக்க வேண்டும்?

மருத்துவக் காப்பீடு

பிரீமியம் ஸ்டோரி

சுப்பிரமணியம் பிரம்மஜோசியுலா தலைவர், மறுகாப்பீடு & திட்ட மேம்பாடு, எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, உலகளாவிய இறப்புகளில் இதய பாதிப்பு காரணமாக நடக்கும் இறப்புகள் 32 சதவிகிதமாக இருக்கின்றன. கடந்த காலங்களில் இதய நோய்கள் முதியவர்களை மட்டுமே பாதிக்கும் என்கிற நிலை காணப்பட்டது. ஆனால், இப்போது, இளைய தலைமுறையினரும் இந்தப் பாதிப்பால் இறக்கும் போக்கு அதிகரித்து வருகிறது

சுப்பிரமணியம் பிரம்மஜோசியுலா தலைவர், மறுகாப்பீடு & திட்ட மேம்பாடு, எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்
சுப்பிரமணியம் பிரம்மஜோசியுலா தலைவர், மறுகாப்பீடு & திட்ட மேம்பாடு, எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்

ஏன் எடுக்க வேண்டும்?

நவீன வாழ்க்கை முறையின் மன அழுத்தங்கள் மற்றும் பிரச்னைகள் சந்தேகத்துக்கு இடமின்றி அதிகரித்துவரும் இதயம் தொடர்பான வியாதிகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும், நம் இதயத்தைப் பாதுகாக்க நிறைய செய்ய முடியும்.

மேலும், அண்மைக் காலத்தில் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற தீவிர நோய்களின் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. சரியான மருத்துவக் காப்பீடு மூலம் தீவிர நோய் தொடர்பான பாதிப்புகளிலிருந்து சுலபமாக மீண்டு வர முடியும். அதற்கு சரியான தீவிர நோய் சிகிச்சைக் காப்பீட்டு (Critical Illness Insurance) பாலிசி எடுப்பது அவசியம்.

இதய நோய், புற்றுநோய்களுக்கான சிகிச்சைச் செலவு மிக அதிகமாக இருப்பதைக் கருத்தில்கொண்டால், வழக்கமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கவரேஜ் போதுமானதாக இருக்காது. மேலும், இந்தத் தீவிர நோய் பாதிப்புக்கான சிசிச்சை என்பது நீண்ட காலத்துக்குத் தேவைப்படும். மருத்துவமனையில் தங்கி குறிப்பிட்ட காலத்துக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். அதன்பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து, வீட்டிலிருந்தபடியே சில சிகிச்சைகளை எடுக்க வேண்டிவரும்.

தீவிர நோய் பாதிப்பு பாலிசியை
ஏன் எடுக்க வேண்டும்?

குறிப்பாக, மருந்துகள், பயணச் செலவுகள் (மருத்துவச் சிகிச்சைக்காக தொலைதூர நகரிலிருந்து வந்திருந்தால்) அதிக செலவாகும். நீண்ட காலத்துக்கு, வேலைக்குச் செல்ல வில்லை அல்லது தொழில்/ வணிகத்தைக் கவனிக்கவில்லை எனில், பாலிசிதாரரின் வருமானத்தைப் பாதிக்கும். போதுமான தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பது, அவசரக் காலங்களில் ஒருவருக்கு சரியாக மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும்.

உங்கள் மன அமைதியை உறுதி செய்வதற்கான மிகவும் செலவு குறைந்த வழிகளில் ஒன்று, தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டு பாலிசியுடன் கிரிடிக்கல் இல்னெஸ் ரைடர் (Critical Illness rider) பாலிசி எடுப்பது அல்லது தனியே கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி எடுத்துக்கொள்வதாகும்.

இப்படி, கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி எடுப்பது என்பது இதயப் பிரச்னை, புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு வாழ்நாள் சேமிப்பு மற்றும் முதலீடுகள் கரைந்துபோகாமல் காக்கும்.

இந்தத் தீவிர நோய் பாதிப்பு பாலிசியில், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட ஏதாவது தீவிர நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டால், பாலிசியின் கவரேஜ் தொகை மொத்தமாக வழங்கப்படும். குறிப்பிட்ட நோய்ப்பாதிப்புக் கான சிகிச்சைச் செலவுக்கு இந்த மொத்தத் தொகை பாலிசி தாரருக்கு உதவும்.

பொதுக் காப்பீட்டு நிறுவனங் களின் மூலம் தீவிர நோய்ப் பாதிப்பு கவரேஜை இரு வழிகளில் பெறமுடியும். ஒன்று, தனியே தீவிர நோய்ப் பாதிப்பு பாலிசி எடுப்பதாகும். மற்றது, ஓர் அடிப்படை மருத்துவக் காப்பீட்டு பாலிசியுடன் ரைட ராகத் தீவிர நோய்ப் பாதிப்பு பாலிசியை எடுத்துக்கொள் வதாகும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

தீவிர நோய்ப் பாதிப்பு பாலிசி எடுக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்ப்போம்.

* முக்கியமாக, வலுவான வாடிக்கையாளர் சேவை மற்றும் இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு விரைவாக மற்றும் அதிக சதவிகித பாலிசிகளுக்கு இழப்பீடு வழங்கி நற்பெயர் பெற்ற காப்பீட்டு நிறுவனத்தைத் தேடி, அதில் பாலிசி எடுங்கள்.

* காப்பீட்டு பாலிசி எடுப்பது பெரும்பாலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, நம்பகமான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

* உங்கள் குடும்ப வரலாறு, வாழ்க்கை நிலை, வாழ்க்கை முறை மற்றும் நிதிநிலை, வயது ஆகியவற்றின் அடிப்படையில் போதுமான தொகைக்கு காப்பீட்டைத் தேர்வு செய்யவும். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு கட்டும் பிரீமியம், உங்கள் நிதி வாழ்க்கையைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

* மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போதே தீவிர நோய் பாதிப்புக்கான ரைடரை எடுங்கள். தீவிர நோய் பாதிப்பு ரைடர் பாலிசியைத் தனியே எடுக்க முடியாது. எனவே, மருத்துவக் காப்பீடு எடுக்கும் போதே இந்தத் துணைப் பாலிசியையும் சேர்த்து எடுப்பது அவசியம்.

* கிரிட்டிக்கல் இல்னெஸ் கவர் பாலிசியைத் தனிநபர் பாலசி அல்லது குடும்ப ஃப்ளோட்டர் பாலிசியாக எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தின் மருத்துவ வரலாறு, குடும்ப உறுப்பினர்களின் நிதித் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர் பாலிசியாகவோ, குடும்ப ஃப்ளோட்டர் பாலிசியாகவோ எடுக்கவும்.

* கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியைத் தனியாக எடுத்திருந்தால், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை எனில், வேறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி ரைடரை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியாது என்பதை பாலிசி எடுக்கும்போது மனதில் வைத்துக்கொள்ளவும்

* உங்களால் பிரீமியம் கட்டும் அளவுக்கு உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு சரியான பாலிசியைத் தேர்வு செய்யவும். தனிநபர் பாலிசியா, குடும்ப ஃப்ளோட்டர் பாலிசியா என்பதுடன், கவரேஜ் தொகையைப் பொறுத்தும் பிரீமியம் இருக்கும்.

* மேலும், இழப்பீடு மருத்துவமனை செலவுக்கு ஏற்ப இருக்குமா அல்லது நிலையான தொகை வழங்கப்படுமா, பாலிசி எடுப்பவர்கள் வசிப்பது நகரமா, கிராமமா, குடும்ப உறுப்பினர்களின் வயது, குடும்ப உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும்.

வாழ்க்கை முறை வெகுவாக மாறிவரும் இன்றைய சூழலில் ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் போதுமான தொகைக்கு கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி எடுப்பது அவசியமாகும். இதுவரை இந்த பாலிசியை நீங்கள் எடுக்கவில்லை எனில், இப்போது எடுப்பது சரியாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு