Published:Updated:

உருமாறும் வைரஸ்கள்... உங்களைக் காக்கும் பாலிசிகள்! ஹெல்த் இன்ஷூரன்ஸ் A to Z கைடுலைன்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

கவர் ஸ்டோரி

கொரோனாவின் கோர தாண்டவம் இரண்டாண்டுகள் ஆகியும் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக் கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்து வரும் புயலுக்குப் பெயர் வைப்பதைப்போல, உறிமாறி வரும் வைரஸ்களுக்கு ஆல்பா, டெல்டா எனப் பெயர் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் ஒமைக்ரான் என்கிற பெயரில் புது வைரஸாக அவதாரம் எடுத்திருக்கிறது கொரோனோ. தற்போது டெல்டா வைரஸ்தான் உலகில் 99% கொரோனா தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்த இடத்தை ஒமைக்ரான் பிடிக்கும் என்பதே லேட்டஸ்ட் எச்சரிக்கை.

அறிகுறிகளே இல்லாமல்...

குறிப்பாக, ஒமைக்ரான் வகை வைரஸால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனச் சொல்லப்படு கிறது. மேலும், குறிப்பிடும்படியான அறிகுறி களே இல்லாமல் பலருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, இந்த வைரஸ் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

பல நாடுகளில் இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள், ஊரடங்குகள் அமல்படுத்து வது மட்டுமல்லாமல், சில நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடத் தொடங்கிவிட்டன.

ஒரு வாரத்துக்கு முன்பு வரை இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், புதன்கிழமை மதியம் வரை 23 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறது என அரசு அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதைப் பார்த்தால், இந்த வைரஸும் ஒரு ரவுண்ட் வரும்போலவே தெரிகிறது.

தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் உருமாறி வரும் கொரோனா வைரஸிடமிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாது காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி என நோய்த்தொற்று ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், குணப்படுத்திக்கொள்ள ஆகும் செலவுகளைச் செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

உருமாறும் வைரஸ்கள்... உங்களைக் காக்கும் பாலிசிகள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் A to Z கைடுலைன்

சிகிச்சைக்கான செலவுகள்...

கொரோனா சிகிச்சைக்கான செலவுகள் குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை ஆகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிகிச்சைபெறும் செலவு சராசரி நடுத்தர வருமானதாரரின் ஏழு மாத வருமானத்துக்கு ஈடானது என்கிறது ஓர் அறிக்கை.

இந்த எதிர்பாராத மருத்துவச் செலவுகளைப் பலர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலம் சமாளித்திருக்கிறார்கள். ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் இல்லாத பலர், எதிர் காலத்துக்கென சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்திருக்கிறார்கள். பலர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, செலவு செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர், தங்க நகைகளையும் வீட்டையும் அடமானம் வைத்துகூட செலவு செய்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஏற்கெனவே பலருக்கு வருமானம் இல்லை, வேலை இழப்பு என்கிற நிலையில், கொரோனா சிகிச்சைக்கான செலவும் சேர்ந்து பலரையும் நிரந்தரமாகப் பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.

மருத்துவக் காப்பீடு...

அந்த நிலை இனி நமக்கும் வராமல் இருக்க நாம் எப்படிப் பட்ட மருத்துவக் காப்பீட்டை எடுக்க வேண்டும், என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது நிதி ஆலோச கர் எஸ்.ஶ்ரீதரனிடம் (https://wealthladder.co.in/) கேட்டோம்.

எஸ்.ஶ்ரீதரன்
எஸ்.ஶ்ரீதரன்

“மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மருத்துவச் செலவுக் கான பணத்தைக் கையிலிருந்து செலவு செய்வது நம் நாட்டில் 63 சதவிகிதமாக உள்ளது. இது வளர்ந்த நாடுகளில் 18% மட்டுமே. தவிர, நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரில் 57% பேர், சொந்தப் பணத்திலிருந்து மருத் துவச் செலவை செய்கிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப் புணர்வுடன் இருப்பதால், எதிர் பாராமல் வரும் மருத்துவச் செலவுகளைக் கஷ்டப்படாமல் சமாளித்துவிடுகிறார்கள். வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர்தான் காப்பீடு எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் நெருக்கடி காலத்தில் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக் கிறார்கள். தேவையான சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாததால், உயிர் இழப்பு என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி, குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.

நம் நாட்டில் பலவிதமான காப் பீட்டுத் திட்டங்கள் செயல்பாட் டில் உள்ளன. மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள், மாநில முதலமைச்சர்கள் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் காப்பீட்டுத் திட்டங்கள் எனப் பல்வேறு வழிகளில் கணிச மான மக்கள் மருத்துவக் காப்பீட் டின் கவரேஜுக்குள் வருகிறார்கள்.

ஆனாலும் நம் நாட்டிலுள்ள 130 கோடி பேரில் 30% பேர் அதாவது, சுமார் 40 கோடி பேர் எந்தவித இன்ஷூரன்ஸ் கவ ரேஜுக்குள்ளும் வராமல் இருக் கிறார்கள். கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் எடுப்போரின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளது. அதற்கு முன்பு இது 6%-7% என்ற அளவில் தான் இருந்துவந்தது. இது வரவேற்கத்தக்கது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை சூழலில் அனைவருமே தங்களுக்கு உதவும் சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

மருத்துவக் காப்பீட்டு வகைகள்

தனிநபர் பாலிசி, பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி, ஊழியர் மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமகன் மருத்துவக் காப்பீட்டு பாலிசி, தீவிர நோய்களுக்கான காப்பீடு, டாப் அப் மருத்து வக் காப்பீடுகள், தனிநபர் விபத்து காப்பீடு என பலவகை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் மூலம் கிடைக்கும் பலன்கள் தனித்தனி யானவை. இவற்றுக்கான நிபந்தனைகள் வேறுபாடு கொண்டவை. நம் தேவைக்கேற்ப சரியான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

திருமணமாகாதவர் தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். கவரேஜ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட்ட தொகை க்ளெய்மாக கிடைக்கும். குடும்பமாக இருப்பவர்களுக்கு பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி சரியாக இருக்கும். பாலிசி காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சிகிச்சைக்கான தொகை யைப் பெற முடியும். குழு அல்லது ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் சந்தையில் இருக்கும் சராசரியைவிட குறைவாக இருக்கும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பாலிசி எடுக்கலாம். இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட பிரீமியம் செலுத்துவதன் மூலம் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இந்த பாலிசி எடுக்கும் முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயம். புற்றுநோய், இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவற்றுக்கான மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க பிரத்யேக தீவிர நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டம் உதவும். டாப்அப் காப்பீட்டுத் திட்டங்கள் ஏற்கெனவே உள்ள பாலிசியின் மீது கூடுதல் கவரேஜ் பெறுவதற்கான திட்டமாகும். கூடுதலாக பிரீமியம் செலுத்தி கூடுதல் கவரேஜ் பெற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உதவும். இப்படி ஒவ்வொருவரின் தேவை அடிப்படையில் குறிப் பிட்ட பிரீமியம் செலுத்தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வதன் மூலம் பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை பணம் செலவாவதைத் தவிர்க்க முடியும். இது ஒவ்வொரு குடும்பத்தின் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் நிதி ஆரோக்கியத்துக்கும் நல்லது.

உருமாறும் வைரஸ்கள்... உங்களைக் காக்கும் பாலிசிகள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் A to Z கைடுலைன்

கொரோனா சிகிச்சைக்கும் பொருந்தும்...

அனைத்து மருத்துவக் காப்பீடுகளும் கொரோனா சிகிச்சையையும் உள்ளடக்கியதாகவே உள்ளன. கொரோனா பரிசோதனை, உள்நோயாளி, வெளிநோயாளி சிகிச்சைகள், தனிமைப்படுத்தல் காலத்தில் மேற்கொள்ளும் சிகிச்சைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளன. கூடுதல் தகவல்களைச் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உறுதி செய்து கொள்ளலாம்.

கார்ப்பரேட் காப்பீடு மட்டும் போதாது...

கார்ப்பரேட் நிறுவனங்களில் வழங்கப்படும் பாலிசிகள் ரூ.2 லட்சம் வரையிலான குறைந்தபட்ச கவரேஜ் கொண்ட வையாகவே இருக்கும். அதிக பட்சம் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள சூழலில், அந்த கவரேஜ் போதாது. எனவே, குறைந்தபட்ச பிரீமியம் தொகையைச் சேர்த்து செலுத்து வதன் மூலம் கூடுதலாக கவரேஜ் தொகையை உயர்த்திக்கொள்ள முடியும். இதற்கு சூப்பர் டாப் அப் பாலிசிகள் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இது போன்ற பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

50 வயதுக்கு மேற்பட்டோர்...

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாக ஒரு பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், அவர்கள் ஓய்வு பெறக்கூடிய கட்டத்தில் இருக்கலாம் என்பதால், பின்னாளில் நிறுவன காப்பீட்டுத் திட்டங் களைப் பயன்படுத்த முடியாத சூழல் உண்டாகும். எனவே, தங்களுக்கு ஏற்ற பாலிசியைத் தனியாக எடுத்துக்கொள்வது நிச்சயம் பயனளிக்கும்.

இடையில் நிறுத்தினால்...

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஓராண்டுக்கானது. அந்த ஓராண்டில் எந்த மருத்துவத் தேவையும் ஏற்படவில்லை எனில், பாலிசியைப் புதுப்பிக்கா மல் விட்டுவிடுகிறார்கள். இவ்வாறு முடிவெடுப்பதால் திடீரென்று எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவுகள் வரும்போது நிதி நெருக்கடி உண்டாகும். அப்படி இடையில் நிறுத்தும்போது சில பலன்களை இழக்க நேரிடும்.

ஒவ்வோர் ஆண்டும் பாலிசி திட்டத்தைப் புதுப்பிக்கும்போது முந்தைய ஆண்டில் க்ளெய்ம் பெறவில்லை எனில், போனஸாக அதே பிரீமியத்தில் கூடுதல் கவரேஜ் உயர்த்தப்படும். இடையில் நிறுத்தினால் இந்தப் பலன் கிடைக்காது. மேலும், பாலிசிகளில் ஏற்கெனவே நோய்களுக்கான கவரேஜுக்கு காத்திருப்புக் காலம் என்று உண்டு. இது பாலிசிகளுக்கேற்ப மாறு படும். இவை குறைந்தபட்சமாக 30 நாள்களிலிருந்து சில ஆண்டுகள் வரை இருக்கலாம். பாலிசியை இடையில் நிறுத்திவிட்டு, சில ஆண்டுகள் பிறகு, மீண்டும் பாலிசி எடுக்கும்போது அந்தக் காத்திருப்புக் காலம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்.

பாலிசி எடுக்கும்போது...

1. நமக்குக் கிடைக்கும் பல பாலிசிகள் மற்றும் அவற்றின் அம்சங்களை முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னர் ஒப்பிட்டு, தேவையான சரியான பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும். பாலிசி எடுக்கும் முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா என்பதைப் பார்க்க வேண்டும்.

2. பாலிசியில் உள்ள நிபந்தனைகள், விலக்குகள் என்னென்ன, கவரேஜ் பலன்கள், காத்திருப்புக் காலம், ஆட் ஆன் (add on) அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. பாலிசித் திட்டத்தை ஏற்கும் மருத்துவ மனைகளின் பட்டியலை முன்பே தெரிந்துகொள்வது நல்லது.

4. ரொக்கமில்லா க்ளெய்ம் வசதி மற்றும் செலவுகளை செய்தபின், அந்தத் தொகையைக் கோருதல் வசதிகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவமனைகள் வழங்கும் பரிசோதனை முடிவுகள், ஸ்கேன், கட்டண ரசீதுகள் அனைத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

5. காப்பீடு க்ளெய்மில் எப்போதுமே விரைவாகச் செயல் படுவது முக்கியம். எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி காப்பீட்டு வசதிகளைப் பெறும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காப்பீடு அட்டை, கே.ஒய்.சி ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

வைரஸ் உருமாற்றங்கள் தொடரும் சூழலில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அனைவரும் உடனடியாக எடுப்பதன் மூலம் பெரிய செலவைத் தவிர்க்கலாமே..!

புஷ்கர், செல்லப்பா
புஷ்கர், செல்லப்பா

“வேலை இல்லாத சமயத்தில் இன்ஷூரன்ஸ் காப்பாற்றியது!”

- புஷ்கர், சென்னை

‘‘கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த நேரம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான் வேலை இழப்புக்கு ஆளாயிருந்தேன். நிறுவனக் காப்பீடு இனி கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட நான் கொஞ்சம் சுதாரித்து, எனக்கு, என் மனைவிக்கு மற்றும் மகளுக்குச் சேர்த்து பேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தேன். மகன் ஸ்பெஷல் சைல்ட் என்பதால், அவனுக்குத் தனியாக ஒரு பாலிசி எடுத்தேன். எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தும் கொரோனா எங்களை விட்டுவைக்கவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்த நிலையிலும் நானும் மனைவியும் பாதிக்கப்பட்டோம். குழந்தைகளுக்கும் தொற்று பரவியது. நால்வருக்கும் கொரோனா பாதித்த நிலையில் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வீதம் மருத்துவச் சிகிச்சை செலவானது. அதில் ரூ.50,000 கையிலிருந்து செலவிட வேண்டியிருந்தது. மீதம் ரூ.3.5 லட்சத்துக்குமேல் இன்ஷூரன்ஸ் மூலம் கேஷ்லெஸ் முறையில் க்ளெய்ம் செய்தோம். இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருந்திருந்தால், இத்தனை பெரிய செலவுகளை எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைக்கவே பயமாயிருக்கிறது..!’’

“ரூ.39,000 பிரீமியம் கட்டினேன், ரூ.5 லட்சம் க்ளெய்ம் கிடைத்தது..!”

- செல்லப்பா, சென்னை.

‘‘நான் ஒரு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்... கொரோனா பரவ ஆரம்பித்தபோது நான் தாய்லாந்தில் இருந்தேன். அங்கிருந்து இந்தியா வந்ததும் தனிமைப் படுத்தல் நடைமுறைகள் முடிந்து, வீடு வந்த சில நாள்களில் காய்ச்சல் வந்தது. எனக்கு சுவாசப் பிரச்னையும் ஏற்பட்டு, தீவிரமான நிலையில் மருத்துவமனையில் சேர்ந்தேன். 14 நாள்கள் சிகிச்சை. ரூ.7.5 லட்சம் செலவானது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்ததால், அதன் மூலம் மொத்தமாக ரூ.5,04,000 க்ளெய்ம் கிடைத்தது. மீதித் தொகையை நான் கையிலிருந்து செலவழித்தேன். 2012-லிருந்து தொடர்ந்து காப்பீட்டைப் புதுப்பித்து வந்தேன். இடையில் க்ளெய்ம் பெறவில்லை என்பதற்காக நிறுத்தவில்லை. நிறுத்தியிருந்தால் கொரோனா சிகிச்சைக்கான முழுத் தொகையும் கையிலிருந்துதான் செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும். இப்போது என் இன்ஷூரன்ஸ் கவரேஜை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தியிருக்கிறேன்!’’