Published:Updated:

தேர்டு பார்ட்டி அத்தாரிட்டி யார்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிளெய்ம்... தெரிந்துகொள்ள வேண்டியவை!

தெ.சு.கவுதமன்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தவுடன் அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் வரக்கூடிய மருத்துவமனை, வீட்டருகே எங்கு உள்ளது எனத் தெரிந்துவைக்க வேண்டும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ் ( vikatan )

புதுப்புது நோய்கள், எதிர்பாராத விபத்துகள் பலரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடுகின்றன. அத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து குடும்பத்தைக் காக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேரும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால் கிளெய்ம் செய்யும்போது நிராகரிக்கப்பட்டு கூடுதல் நிதிச்சிக்கலுக்கு உள்ளாக நேரிடும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
vikatan

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டுமென நிதி ஆலோசகர் ஸ்ரீதரனிடம் கேட்டோம்.

"ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவுடன் அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் வரக்கூடிய மருத்துவமனை, வீட்டருகே எங்குள்ளது என்பதைத் தெரிந்துவைக்க வேண்டும். அப்போதுதான் ஏதேனும் அவசரமென்றாலும் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் உடனடியாகச் சேர முடியும். பரபரப்பான நேரத்தில் அவற்றையெல்லாம் தேடிக்கொண்டிருக்க இயலாது. அதேபோல கிளெய்ம் செட்டில்மென்ட் செய்யக்கூடிய தேர்டு பார்ட்டி அத்தாரிட்டி யாரென்று தெரிந்துகொண்டு, அவர்களது தொடர்பு எண்ணை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கிளெய்ம் தொடர்பான விவரங்களை எளிதில் கேட்டுப் பெறலாம்.

ஒவ்வொரு பாலிசிக்கும் தொடக்கத்தில் சில மாதங்கள் காத்திருப்புக்காலம் இருக்கும். அந்தக் காலகட்டத்தில் சிகிச்சைக்குரிய செலவுக்கு பாலிசியைப் பயன்படுத்த முடியாது. எனவே, அதையும் பாலிசி வாங்கும்போதே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீதரன்
ஸ்ரீதரன்
vikatan

முன்கூட்டியே அறியப்பட்ட நோய்களுக்கான காத்திருப்புக்காலம் என்ற ஒன்று இருக்கிறது. அது பொதுவாக மூன்றாண்டுகள் இருக்கும். நோய்களைப் பொறுத்தும், நிறுவனங்களைப் பொறுத்தும் அந்தக் கால அளவு வேறுபடும். காத்திருப்புக் காலத்தில் அந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்குக் கிளெய்ம் செய்ய முடியாது. இதைத் தெரிந்து வைத்துக்கொண்டால் சில சிகிச்சைகளைத் தள்ளிப்போடலாம். அல்லது அதற்கேற்ப பணத்தைத் தயார் செய்துகொள்ளலாம்.

சில தீவிர நோய்களுக்கு சாதாரண ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிளெய்ம் கிடைக்காது. அந்த நோய்கள் எவையென்று அறிந்துவைத்திருக்க வேண்டும். அதேபோல சில நோய்க்கூறுகளின் தொடர் விளைவாக உருவாகக்கூடிய வியாதிகளுக்கும் பாலிசி விதிமுறைகளின்படி கிளெய்ம் கிடைக்காமல் போகலாம். அதுகுறித்த விதிமுறைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். பெரிய பல்நோக்கு மருத்துவமனைகளில் சேரும்போது அறை வாடகை, மருத்துவர் கட்டணம் போன்றவை பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, நாம் சேரும் அறை எத்தகையது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
vikatan

இறுதியாக, முக்கியமான ஒன்று. பாலிசியின் நகல் ஒன்றை மொபைல் போனில் சேமித்து வைப்பது மிகவும் நல்லது. அதேபோல வீட்டிலிருக்கும் நபர்களுக்குத் தெரியும்படியாக பாலிசியை வீட்டில் வைத்திருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் பாலிசிதாரரால் பாலிசியை வைத்துள்ள இடம் குறித்துத் தகவல் கூற முடியாதபோதும் வீட்டிலிருப்பவர்கள் அதைப் பயன்படுத்த ஏதுவாகும்" என்றார்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் நம் மக்களிடையே பரவி வருகிறது. எனினும், ஹெல்த் இன்ஷூரன்ஸில் கிளெய்ம் செய்வது எப்படி? எவற்றுக்கெல்லாம் கிளெய்ம் கிடைக்கும் என்ற விவரங்கள் அதிகம் தெரியாது. இதுகுறித்து விவரிக்க வேண்டிய முகவரும் சரியாக விளக்காமல் விட்டுவிட்டால் பாலிசி குறித்து தவறான அபிப்ராயமே அவருக்கு ஏற்படும். உடனே பாலிசியால் ஒரு பயனும் இல்லையென்ற தவறான முடிவுக்கு வந்து அதைப் புதுப்பிக்காமலேயே விட்டுவிடுவார்.

பாலிசி எடுத்து மூன்றாண்டுகளுக்குப் பின் முழுமையாகப் பயனளிக்கக்கூடிய சூழலில், புதுப்பிக்காமல் விடுவதால் அதன் பயனை அனுபவிக்க முடியாமலேயே போய்விடும்.
சகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா? #DoubtOfCommonMan

எனவே, கூடுமானவரை பாலிசி எடுக்கும்போது விதிமுறைகளை ஒருமுறையாவது முழுமையாக வாசித்து அதன் கருத்தைத் தெரிந்துகொள்ள முற்பட வேண்டும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது நமக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கும் இன்னொரு உயிர்த்தோழன் என்பதில் சந்தேகமில்லை.