Published:Updated:

மருத்துவக் காப்பீட்டு பாலிசி... வேறு நிறுவனத்துக்கு மாற்றுவது எப்படி?

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

மருத்துவக் காப்பீட்டு பாலிசி... வேறு நிறுவனத்துக்கு மாற்றுவது எப்படி?

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

Published:Updated:
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் ஒரு நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை எனில், அந்த பாலிசியை வேறு ஒரு நிறுவனத்துக்கு அதன் பலன்கள் எதையும் இழக்காமல் மாற்றிக்கொள்ள முடியும். இதை போர்ட்டபிலிட்டி (Portability) என்பார்கள்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

பாலிசியை ஏன் வேறு நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும்?

தற்போதைய மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாமல் இருப்பது, நீங்கள் எதிர்பார்க்கும் சில கவரேஜ்கள் உங்களின் தற்போதைய பாலிசியில் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது, தற்போது உள்ள பாலிசியில் இருக்கும் ஆப்ஷன்களைவிட புதிய நிறுவனத்தில் அதிக ஆப்ஷன்கள் இருப்பது, வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்...

வேறு ஒரு நிறுவனத்துக்கு ஹெல்த் பாலிசியை மாற்றும் முன்பு முக்கியமாக நான்கு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. நெட்வொர்க் மருத்துவமனைகள்...

மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளில் நெட் வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை (Cashless Treatment) மேற்கொள்ள முடியும். அந்த வகையில் புதிய காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனை களின் எண்ணிக்கை மற்றும் அவை உங்களின் வசிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ளனவா, மருத்துவச் சிகிச்சையின் தரம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து அதன் பிறகு, முடிவு எடுப்பது நல்லது.

2. மருத்துவ வரலாறு...

உங்களின் பாலிசியை மாற்றிக்கொள்ளும் புதிய காப்பீட்டு நிறுவனம், முதலில் உங்கள் மற்றும் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றைக் (Medical history) கட்டாயம் கவனிக்கும். அதன் பிறகு, பிரீமியத் தொகையை முடிவு செய்யும். மருத்துவ வரலாற்றில் எந்தப் பிரச்னையும் இல்லை எனில், பழைய பாலிசியைப் புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். இல்லை எனில், புதிய மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டிவரும்.

உங்களுக்கு ஏற்கெனவே நோய் இருக்கும் பட்சத்தில், அதற்கான சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்தால், உங்கள் தற்போதையை பாலிசியை அப்படியே புதிய காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கக்கூடும்.

உங்கள் வயது 45 அல்லது அதற்குமேல் இருந்தால், பெரும்பாலான புதிய காப்பீட்டு நிறுவனங்கள் உங்களை மருத்துவப் பரிசோதனை செய்ய சொல்லும். இதய நோய் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு பாதிப்பு உள்ளவர்கள், இதற்காக கணிசமாக தொடர்ச்சியாக செலவு செய்து வருபவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டிய வாய்ப்புகள் அதிகம்.

3. வயது

ஹெல்த் பாலிசி போர்ட்டபிலிட்டி வயது வரம்பு ஏதாவது இருக்கிறதா எனப் பலரும் கேட்கிறார்கள். அப்படி எந்த வயது வரம்பும் இல்லை. அதேநேரத்தில், வயதாகும்போது உடல்நலம் மோசமடைவதால், பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு போர்ட்டபிலிட்டி அனுமதி வழங்கத் தயங்கும். கூடுதலாக, புதிய காப்பீட்டு நிறுவனம் கூடுதல் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏற்கெனவே இருக்கும் நோய்களின் தற்போதைய நிலைமைகள் பற்றிய உறுதி மொழியைக் (Declaration) கேட்கும். நோய் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நோய்களுக்கான கவரேஜை அவை விலக்கலாம் அல்லது கூடுதல் நிபந்தனைகள் போடலாம்.

மருத்துவக் காப்பீட்டு பாலிசி... வேறு நிறுவனத்துக்கு மாற்றுவது எப்படி?

4. காத்திருப்புக் காலம்...

மருத்துவக் காப்பீட்டில் காத்திருப்புக் காலம் (Waiting Period- Cooling Period) உண்டு. காத்திருப்புக் காலகட்டத்தில் பாலிசி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உங்கள் திட்டம் எந்தப் பாதுகாப்பையும் அளிக்காது. உதாரணமாக, உங்கள் பாலிசியை போர்ட்டபிலிட்டி செய்ய முடியாத நிலையில், நீங்கள் ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை வாங்கினால், அது 30 நாள்களுக்கு காத்திருப்புக் காலத்தைக் கொண்டிருக்கும். இந்தக் கால கட்டத்தில் பாலிசி கவரேஜ் எதையும் (விபத்து வழக்குகள் தவிர) வழங்காது.

புதிய பாலிசி என்கிறபோது குறிப்பிட்ட நோய் பாதிப்புகளுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். அதன்பிறகுதான், அந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு, இழப்பீடு பெற முடியும்.

போர்ட்டபிலிட்டியில் என்னென்ன நன்மைகள்?

உங்கள் தற்போதைய பாலிசி யைப் புதுக் காப்பீட்டு நிறுவனம் அப்படியே ஏற்றுக்கொண்டு, போர்ட்டபிலிட்டி செய்தால், உங்களுக்கு பல வகையில் லாபகரமாக இருக்கும். புதிய நிறுவனத்தில் தரமான சேவை எதிர்பார்க்க முடியும். உங்களுக்கு நோ க்ளெய்ம் போனஸ் (No Claim Bonus - NCB) இருந்தால், அது புதிய நிறுவனத்தின் பாலிசிக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால், உங்களுக்கு பிரீமியத் தில் தள்ளுபடி கிடைக்கும். அல்லது கவரேஜ் தொகை அதிகரிக்கும். மேலும், காத்திருப் புக்காலம் இருக்காது. ஏற்கெனவே இருக்கும் நோய் களுக்கான காத்திருப்புக்காலம் பழைய பாலிசியில் இருந்து புதிய பாலிசியிலும் தொடர்வதால், அந்தக் காத்திருப்புக் காலம் முடிந்ததும் ஏற்கெனவே இருக்கும் நோய்க்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகளை க்ளெய்ம் செய்ய முடியும். இது பிரசவ கவரேஜ் (Maternity Coverage) செலவுக்கும் பொருந்தும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி நடைமுறை

இதற்கான நடைமுறையை இந்தியக் காப்பீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) எளிமையாக வைத்திருக்கிறது. தற்போதைய மருத்துவக் காப்பீடு பாலிசி காலாவதியாகும் 45 நாள்களுக்கு முன்னதாக (60 நாள்களுக்கு முன்பல்ல) போர்ட்டபிலிட்டி செய்யும் பணியை நீங்கள் தொடங்க வேண்டும்.

படி1: இதற்கு, நீங்கள் பாலிசியை மாற்ற விரும்பும் காப்பீட்டு நிறுவனத்தின் பெயரை உங்கள் தற்போதை யைக் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்கவும்.

படி 2: தற்போதைய பாலிசி காலாவதி தேதிக்கு 45 நாள்களுக்கு முன் புதிய காப்பீட்டு நிறுவனத்துக்கு பாலிசியை ‘போர்ட்’ செய்ய விரும்பும் விஷயத்தை எழுத்து மூலம் தெரிவிக்கவும்.

படி3: கோரிக்கையைப் பெற்றவுடன், புதிய காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு முன்மொழிவு படிவம் (proposal form), போர்ட்டபிலிட்டி படிவம் மற்றும் அந்த நிறுவனத்தின் பல்வேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் விவரங்களை வழங்கும்.

படி 4: ஒரு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு, முன்மொழிவுப் படிவத்தை நிரப்பி, புதிய காப்பீட்டு நிறுவனத்தின் போர்ட்ட பிலிட்டி படிவத்தை நிரப்பித் தர வேண்டும்.

படி 5: புதிய காப்பீட்டு நிறுவனம், பழைய காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும். மேலும், உங்கள் மருத்துவ அறிக்கைகள், இழப்பீடு கோரல் வரலாறு பற்றிய தகவல்களைப் புதிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ இணையதளத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்.

படி 6: உங்கள் போர்டபிலிட்டி கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், புதிய காப்பீட்டு நிறுவனத்தில் உங்கள் மருத்துவக் காப்பீடு பாலிசி தொடரும்.

புதிய காப்பீட்டு நிறுவனம், போர்ட்டபிலிட்டிக்கான உங்கள் கோரிக்கையை ஏற்க அல்லது நிராகரிக்க 15 நாள் எடுத்துக்கொள்ளும். இந்தக் கால அவகாசத்துக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை எனில், உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி வேறு நிறுவனத்துக்கு மாற்றும் பணி முடிந்து, அது அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டு பாலிசி... வேறு நிறுவனத்துக்கு மாற்றுவது எப்படி?

போர்ட்டபிலிட்டிக்குத் தேவையான ஆவணங்கள்.

 அடையாளச் சான்று, முகவரிச் சான்று, ஐ.ஆர்.டி.ஏ.ஐ போர்டபிலிட்டி படிவம், உங்கள் பழைய காப்பீட்டு நிறுவனத்தின் முந்தைய பாலிசி ஆவணங்கள், முன்மொழிவு படிவம், நோ க்ளெய்ம் போனஸ் இருந்தால் அதற்கான ஆதாரம், இழப்பீடு ஏதும் கோரியிருந்தால், டிஸ்சார்ஜ் சுருக்கம் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள்...

மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்தத் தகவல்கள் அனைத்தையும் மனதில் நிறுத்திக்கொள்வது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism