Published:Updated:

சிகரெட் புகைப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?!

பெரும்பாலானவர்கள், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது புகைபிடிக்கும் மற்றும் குடிப்பழக்கம் இருப்பதைச் சொன்னால் பாலிசி வழங்க மாட்டார்களோ, தவறாக நினைத்துக்கொள்வார்களோ என சொல்ல மாட்டார்கள்.

சிகரெட்
சிகரெட்

"புகைபிடிப்பதால் உலக அளவில் சுமார் 80 லட்சம் பேர் ஒரு வருடத்தில் இறக்கிறார்கள். இதில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர், நேரடியாகப் புகைப்பதன் மூலமும், சுமார் 10 லட்சம் பேர் புகைபிடிக்கும்போது வெளிவரும் புகையை சுவாசிப்பதன் மூலமும் மரணிக்கிறார்கள்" என்கிறது உலக சுகாதார அமைப்பின் சர்வே. இதைப் படிக்கும்போது உங்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும். ஆனால், இதுதான் இன்றைய நிலை.

சிகரெட்
சிகரெட்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்தான் இருக்கிறதே... அதை எடுத்துக்கொண்டால், புகைப்பதனால் வரக்கூடிய நோய்களுக்கு மருத்துவம் பார்த்து சரிசெய்துகொள்ளலாமே என்று நீங்கள் யோசிக்கலாம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்காக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை நீங்கள் அணுகும்போது அவர்கள் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி, 'உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதா?' என்பதுதான். நீங்கள் எத்தனை ஆண்டுகளாகப் புகைக்கிறீர்கள், ஒரு நாளைக்கு நீங்கள் புகைக்கும் சிகரெட்களின் எண்ணிக்கை எத்தனை போன்ற பல கேள்விகளைக் கேட்டு, உங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே பாலிசி விவரங்கள் பற்றிப் பேசுவார்கள்.

உண்மையை மறைக்காதீர்கள்

சிகரெட்
சிகரெட்

பெரும்பாலானவர்கள், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது புகைபிடிக்கும் மற்றும் குடிப்பழக்கம் இருப்பதைச் சொன்னால் பாலிசி வழங்கமாட்டார்களோ, தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று நினைத்து, அதை மறைக்க நினைக்கிறார்கள். பாலிசி எடுக்க நீங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகும்போது, உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப் பரிந்துரைப்பார்கள். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையில் உங்கள் உடலில் இருக்கும் நிகோடின் அளவு தெரிந்துவிடும். நீங்கள் அவர்களிடம் புகை பிடிப்பதில்லை என்று பொய் சொன்னாலும், இந்தப் பரிசோதனை முடிவு உங்களைக் காட்டிக்கொடுத்துவிடும். அதனால் உண்மையை மறைக்காதீர்கள். மேலும், பரிசோனையின் முடிவை வைத்துதான் உங்களுக்கு எவ்வளவு கவரேஜ், பிரீமியம் போன்றவற்றை அவர்கள் முடிவு செய்வார்கள்.

பாலிசி ஒன்றுதான்; நடைமுறைகள் வேறு

சிகரெட் புகைப்பதால் மட்டுமல்ல, ஒருவர் நிக்கோடின் என்கிற போதைப் பொருளை எந்தவகையில் உட்கொண்டாலும், அவர்களைப் புகைபிடிப்பவர்களாகத்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கருதும். ஒருவேளை நீங்கள் நாளொன்றுக்கு 20 சிகரெட்களுக்கு மேல் புகைக்கும் செயின் ஸ்மோக்கராக இருந்தால், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமும் உங்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்காது. மற்றபடி புகைபிடிப்பவர்களுக்கும் புகைபிடிக்காதவர்களுக்கும் வழங்கப்படும் பாலிசி ஒன்றுதான். ஆனால், நடைமுறைகள் வேறு மாதிரியாக இருக்கும்.

சிகரெட்
சிகரெட்

பிரீமியம் விவரங்கள்

வழக்கமாகப் புகைபிடிக்காதவர் குறைந்த வயதில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டால், கட்டக்கூடிய பிரீமியத்தின் அளவு குறைவாக இருக்கும். அதே புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவர் குறைவான வயதில் பாலிசியை எடுத்தாலும் அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். ஏனெனில், புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் தேவைப்படும் மருத்துவத்தின் அளவும், அதற்கான செலவும் வெவ்வேறாக இருக்கும் என்பதுதான். அதுமட்டுமல்லாமல் நீங்கள் தினமும் புகைக்கும் சிகரெட் எண்ணிக்கையை வைத்தும் பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்படும்.

ஏன் எடுக்க வேண்டும்?

சாதாரணமானவர்களுக்கு வரக்கூடிய உடல் ரீதியான பிரச்னைகளும், புகைப்பவர்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளும் வெவ்வேறு மாதிரியானவை. உதாரணத்துக்கு, லைஃப் ஸ்டைலை முறையாகக் கையாள்கிறவர்களுக்கு ஸ்ட்ரோக், மனஅழுத்தம், இதயம் சார்ந்த பிரச்னைகள், கேன்சர் போன்ற வியாதிகள் வராது. ஆனால், இந்த வியாதிகள் புகைபிடிப்பவர்களை எளிதில் தாக்கும். அதுமட்டுமல்ல, புகைப்பழக்கம் அடிக்கடி உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாகச் சின்னச் சின்ன பிரச்னைகளை ஏற்படுத்தும். இதைப் பொருளாதார ரீதியாக அணுக, நிச்சயம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்.

லைஃப்ஸ்டைல் மாற்றங்களைத் தெரியப்படுத்துங்கள்

இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை, ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டேன் என்பவர்கள், அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்துவது அவசியம். அதே போலத்தான் குடிப்பழக்கம் குறித்த விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். அப்படித் தெரியப்படுத்தாமல், கிளெய்ம் செய்யும் நேரத்தில் தெரியவரும்போது தேவையில்லாத பிரச்னைக்கு வழிவகுக்கும். கிளெய்ம் தொகை கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் லைஃப்ஸ்டைல் மாற்றங்களை அவ்வப்போது இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்திவிடுங்கள்.