Published:Updated:

ஆயுள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தேர்வு செய்வது எப்படி? - ஒரு வழிகாட்டுதல்!

பலர் கூடியிருக்கும் கூட்டத்தில், டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால், ஏறக்குறைய எல்லோருமே தெரியும் என்று கை தூக்குவார்கள். ஆனால், பாலிசி பற்றி முழுவதும் அறிந்து வைத்திருப்பவர்கள் ஒரு சிலர்தான்.

'எனக்குப் பிறகான நாட்களில், என் குடும்பம் பொருளாதார ரீதியாக நலமுடன் இருக்க வேண்டும்' என நினைப்பவர்களுக்குக் கைகொடுக்கிறது, 'லைப் இன்ஷூரன்ஸ்' எனப்படும் ஆயுள் காப்பீடு.

பலர் கூடியிருக்கும் கூட்டத்தில், ஆயுள் காப்பீடு குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால், ஏறக்குறைய எல்லோருமே தெரியும் என்று கை தூக்குவார்கள். ஆனால், பாலிசி பற்றி முழுவதும் அறிந்து வைத்திருப்பவர்கள் ஒரு சிலர்தான். இந்தியா முழுவதும் வெறும் 5 சதவிகிதம் பேர்தான் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த அளவிற்குத்தான் நாம் விழிப்புணர்வு பெற்றுள்ளோம்.

Vikatan

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்போம். ஆனால், தேவையானதை வாங்க கஞ்சத்தனம் செய்வோம். இது இயல்பாக அனைவருக்கும் இருக்கும் குணம்தான். ஆனால், ஆயுள் காப்பீட்டு விஷயத்தில் இப்படியான அணுகுமுறை இருக்கக்கூடாது. ஏனெனில், ஆயுள் காப்பீடுதான் ஒரு குடும்பத்தில் யாருக்கேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அவர் சம்பந்தப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படாமல் தாங்கிப் பிடிக்கும்.

விழிப்புணர்வு குறைவு!

'வெளிநாடுகளில் எல்லாம், மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே, ஆயுள் காப்பீடு முதல் மருத்துவக் காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை. ஆனால், நம் நாட்டில் இன்னும் இன்ஷூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டி உள்ளது' என நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.

பலர், இன்ஷூரன்ஸை பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். 'வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதனால் ஒரு பாலிசி போட்டேன், இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...' என்று பாலிசி எடுப்பவர்கள்தான் அதிகம். ஆனால், பாலிசியை முதலீட்டுக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

பைக் அல்லது காருக்கு எப்படி இன்ஷூரன்ஸ் எடுக்கிறோமோ, அதுபோலத்தான் நமக்கு எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியும். அதிலிருந்து லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதற்காகவெல்லாம் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும்?!

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் குடும்பத் தேவைகளுக்காக வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் எனப் பல்வேறு கடன்களை வாங்கியிருப்பார். அவரின் எதிர்பாராத மறைவுக்குப் பின்னர், குடும்பத்தினரைக் கடன் சுமை பாதிக்காமலிருக்க ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கவேண்டியது அவசியம்.

பிள்ளைகளை மேற்படிப்பு படிக்கவைக்கவும், அவர்களின் கல்யாணத்தை ஊரே பிரமிக்கும் வகையில் நடத்தவும் நினைத்திருப்பார்கள். இதற்கு எந்த பாதிப்பும் வராமலிருக்க, வருமானம் ஈட்டும் நபர் பெயரில் ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும்.

டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்... எது நல்லது?

குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, பிள்ளைகளுக்குத் திருமணமாகி தனியாகச் சென்றுவிடுவார்கள். அப்போது, வாழ்க்கைத் துணையின் செலவுகளை ஈடுகட்டத் தேவையான தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்து வைத்திருப்பது நல்லது.

ஆயுள் காப்பீடு பாலிசிக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை, செலுத்தும் பிரீமியத்தில் வரிச் சலுகை கிடைக்கும். தவிர, கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கும் வரிச்சலுகை உண்டு.

மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்!

“மெடிக்கல் இன்ஷூரன்ஸ் என்பது தேவைக்காக அல்ல. நம்முடைய பாதுகாப்பிற்காகக் கண்டிப்பாக ஒவ்வொருவரும் எடுக்கவேண்டியது” என்கிறார், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் கலைச்செல்வி. “நம் உடலைப் பாதிக்கும் நோய்களுக்குப் பலவிதமான வைத்தியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எந்த விதமான வைத்தியம் எந்த நோயாளிக்குத் தீர்வினை அளிக்கும் என்று டாக்டர்கள் விளக்கம் அளித்தாலும் நோயாளிகள் முதலில் கேட்பது, இதற்கான மருத்துவச் செலவு எவ்வளவாகும் என்பதுதான்.

ஹெல்த் 
இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

அப்படியே இருந்தாலும், குறைந்த செலவில் எவ்வாறு மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்பது அவர்களின் அடுத்த எண்ணமாக உள்ளது. விஞ்ஞானம் பல வகையில் வளர்ந்திருந்தாலும், எல்லாரும் விலை அதிகமான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதே சமயம் எதிர்பாராத விபத்தோ அல்லது உடல் நிலை சரியில்லாமல் போகும் நேரத்தில், நாம் மற்றவர்களை நாடாமல் இருக்கவே இந்த இன்ஷூரன்ஸ் திட்டம்.

நாம் ஆரோக்கியமாக இருக்கும் இள வயதிலேயே மருத்துவ காப்பீடு எடுப்பது மிக மிக அவசியம். மருத்துவ காப்பீட்டில், உங்களின் வயது மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்து, பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யப்படும். 25 வயது நபர் சர்க்கரை நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு இவற்றால் பாதிப்பு அடைந்த பட்சத்தில், பாலிசி எடுக்க வருகிறார் எனில் அவரின் வயதுக்கான பிரீமியத் தொகையோடு சேர்த்து ’லோடிங்க்’ என்ற பெயரில் பத்து சதவிகிதம் கூடுதலாக பிரீமியம் வசூலிக்கப்படும். 

வயதான பின்பு ஒருவர் மருத்துவ காப்பீடு எடுத்தால் ரிஸ்க் அதிகம். அதனால் வயது குறைவாக இருக்கும்போதும், ஆரோக்கியமாக இருக்கும்போதும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது நல்லது" என்றார். சில நிறுவனங்களில், பிறந்த முதல் நொடியிலிருந்து காப்பீடு உள்ளது. ஆனால், அதைப்பெற குழந்தையின் பெற்றோர் இருவரும் அல்லது யாரேனும் ஒருவர் காப்பீடு வைத்திருக்க வேண்டும். குழந்தை பிறந்தபின் வரும் முதல் மூன்று மாதங்களுக்கான மருத்துவக் ‌காப்பீடு முற்றிலும் இலவசம். அதன்பின், அந்தக் குழந்தையின் பெயரை, பெயர் வைக்காத பட்சத்தில் நியூ பார்ன் பேபி என்று பிரீமியம் தொகை செலுத்தி‌ சேர்த்துக்கொள்ளலாம்.

குடும்ப ஆரோக்கியம் அவசியம்
குடும்ப ஆரோக்கியம் அவசியம்
freepik

சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில், திருமணமான ஆண் அல்லது பெண் ஒருவருக்கு, ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு இருக்கும் பட்சத்தில், தன் இணையைத் தனது பாலிசியில் இணைத்துக்கொள்ளலாம். ஆனால், திருமணம் முடிந்து 60 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும். ஆதாரமாக, திருமண அழைப்பிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

தற்போது இரண்டே விஷயங்களுக்கு மருத்துவக் காப்பீடு கொடுப்பதில்லை. ஒன்று, மனநோய். இன்னொன்று, பல் தொடர்பான பிரச்னைகள். மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப அதற்கான கட்டணம் செலுத்தலாம். அதாவது, நாம் எடுக்கும் தொகையை முன்னிட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பிரீமியம் தொகை மாறுபடும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... பாலிசியைத் தேர்வுசெய்ய கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

இதில் நாம் கட்டும் பிரீமியம் தொகைக்கு ஏற்ப அவர்கள் தங்கும் அறையின் வசதிகள் மாறுபடுமே தவிர, சிகிச்சை முறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. சில சமயம், நாம் தங்கும் அறையின் கட்டணம் காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படவில்லை என்றால், அதற்கான கூடுதல் கட்டணத்தை நாம் தனியாக செலுத்திக்கொள்ளலாம். எல்லா நோய்களுக்கும் நிலையான மருத்துவச் செலவு இருக்காது. இது, மருத்துவமனை மற்றும் நோய்க்கு ஏற்ப மாறுபடும்.

ஆகையால், மக்கள் இனிவரும் காலங்களில் தனக்கு, தன் குடும்பத்துக்கு எனத் தேவைப்படும் அளவுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு