நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இன்ஷூ ரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அவசியம் அதிகரிக்க வேண்டும்? வழிகாட்டும் டிப்ஸ்

இன்ஷூ ரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூ ரன்ஸ்

I N S U R A N C E

சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

பொதுவாக, நம்மில் பலர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது வருமான வரியைச் சேமிக்க வேண்டும் என்பதால்தான். அப்படி இருந்தாலும், பலர் ஒரு காலத்தில் எடுத்த கவரேஜ் தொகையுடன் இன்றுவரைக்கும் இருக்கிறார்கள். அது மகா தவறு. காரணம், வேலைக்குச் சேர்ந்தபோது 28 வயதில் சுமார் ரூ.2 லட்சம் கவரேஜுக்கு எடுத்த எண்டோவ்மென்ட் பாலிசி தவிர, வேறு பாலிசி எடுக்காமல் இருப்பது அல்லது பாலிசி கவரேஜை அதிகரிக்காமல் இருப்பது குடும்பத்தினரைப் பெரிய சிக்கலில் மாட்ட வைத்துவிடும். வருமானம் ஈட்டும் நபரான குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், வெறும் 2 லட்சம் ரூபாயை வைத்து எதுவும் செய்ய முடியாது. குடும்பத்தின் ஓராண்டு செலவுக்குக்கூட இந்தத் தொகை காணாது. அந்த வகையில், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது அவசியம். அந்தப் பாலிசியை எடுத்தாலும், அதன் கவரேஜைக் குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிப்பது அல்லது குறிப்பிட்ட நிகழ்வின்போது அதிகரிப்பது கட்டாயமாகும்.

சிவகாசி 
மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் எதிர்பாராமல் மரணம் அடைய நேரிட்டால், அந்தக் குடும்பம் எந்தவித நிதிச் சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுவதுதான் ஆயுள் காப்பீடாகும்.

ஆயுள் காப்பீடு எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு பொதுவான விதிமுறை (Thumb Rule) இருக்கிறது. அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் போல் 10 - 15 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது அவசியமாகும். நம்மில் பலர் வேலைக்குச் சேர்ந்தபோது எடுத்த கவரேஜ் அளவிலேயே லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் மருத்துவக் காப்பீட்டை கடைசி வரைக்கும் தொடர்கிறோம். இப்படிச் செய்யாமல் இந்த கவரேஜ் தொகையை எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

இன்ஷூ ரன்ஸ்
இன்ஷூ ரன்ஸ்

1. சம்பளம் / வருமானம் அதிகரிக்கும்போது

குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 10 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.

உதாரணத்துக்கு, கணவன் - மனைவி இருவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் எனில், அவர்கள் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஐந்தாண்டு கழித்து அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக அதிகரித்திருந்தால், அவர்கள் ஆயுள் காப்பீட்டு கவரேஜை ரூ.70 லட்சமாக அதிகரிக்க வேண்டும். பொதுவாக, நாம் சம்பளம் அதிகரிக்கும் போது நம் வாழ்க்கை முறையை மாற்றுகிறோம். இதனால், செலவு அதிகரிக்கிறது. வருமானம் ஈட்டும் நபர் இல்லை என்றாலும் அதே லைஃப் ஸ்டைல் தொடர வேண்டுமெனில், ஆயுள் காப்பீட்டு கவரேஜ் தொகையைக் கட்டாயம் அதிகரிப்பது அவசியத்திலும் அவசியம்.

2. கல்யாணமாகும்போது

ஒருவருக்குக் கல்யாணமாகும் போது அவரின் நிதிப் பொறுப்பு அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருடன் இருக்கும்போது, குடும்பப் பாதுகாப்பில் பெற்றோரின் பங்களிப்பும் இருக்கும் சமயத்தில் புதிதாகத் திருமணமானவருக்கு ஆயுள் காப்பீடு கவரேஜ் குறைவாக இருந்தாலும் பெரிய சிக்கல் வராது.

ஆனால், திருமணமாகி துணைவர் (கணவர் / மனைவி) வரும்போது ஒருவரின் பொறுப்பு அதிகரித்துவிடுகிறது. தன்னை நம்பி வந்திருப்பவருக்குதான் இல்லாத நிலை ஏற்பட்டால், அதன்மூலம் உருவாகும் நிதிச் சிக்கலைச் சமாளிக்க ஆயுள் காப்பீட்டு கவரேஜ் தொகையை அதிகரிப்பது அவசியமாகிறது.

நம்மில் பெரும்பாலானோர், கல்யாணமான பிறகே ஆயுள் காப்பீடு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதைத் தவிர்த்து வேலைக்குச் சேர்ந்தவுடன் பாலிசி எடுப்பது மூலம் குறைவான பிரீமியத்துக்கு அதிக கவரேஜ் கொண்ட பாலிசி களை எடுக்க முடியும்.

இன்ஷூ ரன்ஸ் கவரேஜ்... 
எப்போதெல்லாம் அவசியம் அதிகரிக்க வேண்டும்? வழிகாட்டும் டிப்ஸ்

3. குழந்தைகள் பிறக்கும்போது

கல்யாணமாகி பிள்ளைகள் பிறக்கும்போது அவர்களின் உயர் கல்வி மற்றும் கல்யாணம் பெற்றோரின் மிகப்பெரிய கடமை மற்றும் பொறுப்பாக உள்ளது. அதனால் வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதைத் தவிர்க்க ஆயுள் காப்பீட்டு கவரேஜை அதிகரிப்பது அவசியமாகிறது.

4. கடன்கள் அதிகரிக்கும்போது

அவசரச் செலவுக்காக தனிநபர் கடன், தேவை மற்றும் அந்தஸ்துக்காக வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் வாங்குகிறோம். இப்படிக் கடன் வாங்கும்போது, அந்தக் கடன் தொகைக்கு இணையாக டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் கடன் வாங்கிய நபரின் உயிருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்தினர் மீது இந்தக் கடன் சுமை விழாமல் இருக்கும்.

வீட்டுக் கடன் தொகை என்பது அதிகமாக இருக்கும் பட்சத்தில், கடன் தொகை குறைவதற்கேற்ப ஆயுள் காப்பீடு கவரேஜ் தொகையும் குறையும் படியான பாலிசியை எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.

5. பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும்போது

பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், அது தனிநபர்களின் நிதியை நிச்சயம் பாதிக்கும். உதாரணமாக, பண வீக்க விகிதம் அதிகமாக இருக்கும்போது, வழக்கமான தேவையை நிறைவேற்றிக் கொள்ளவே அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். அதனால் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை இருந்தால், கூடுதல் தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயாம். அப்போதுதான், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லை என்றாலும் அடுத்து வரும் ஆண்டுகளில் நிலைமையைச் சமாளிக்க முடியும்.

6. பெரிய நகரங்களுக்கு மாறும்போது

பொதுவாக, சிறிய நகரங்களில் காய்கனி விலை, மருத்துவர் கட்டணம் மற்றும் மருத்துவமனை செலவு குறைவாக இருக்கும். இது நகரங்களில் அதிகம். அந்த வகையில், கிராமப்புறங்களில் வசிப்பவர் களைவிட நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் அதிகத் தொகைக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். எனவே, இனி உங்கள் இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகரிக்கத் தயங்காதீர்கள்!

செல்வம் அதிகரிக்கும்போது..!

செல்வம் அதிகரிக்கும்போது குறிப்பாக, எளிதில் பணமாக்கக்கூடிய நிதிச் சொத்து, செல்வம் அதிகரிக்கும்போது ஆயுள் காப்பீட்டின் அளவை அதிகரிக்க தேவை இல்லை. ஆண்டு வருமானத்தைபோல் சுமார் 15 மடங்கு தொகைக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் நிலையில், ஒருவரின் செல்வம் நன்கு அதிகரித்திருந்தால் கவரேஜ் மதிப்பை ஆண்டு வருமானத்தைப்போல் 10 மடங்கு தொகைக்கு குறைத்துக் கொள்ளலாம். அல்லது கவரேஜை அதிகரிக்காமல் இருக்கலாம்!