பிரீமியம் ஸ்டோரி

நம்மவர்கள் பெரும்பாலும் வருமான வரிச் சேமிப்பு அல்லது சேமிப்பு என்கிற காரணத்துக்காகதான் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை (Life Insurance) எடுக்கிறார்கள். பாலிசி எடுக்கும் நோக்கம் தவறாக இருந்தாலும், பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும்போதுதான் அதன் உண்மையான அர்த்தம் பலருக்கும் தெரிய வருகிறது.

சிவகாசி மணிகண்டன்
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

ஆயுள் காப்பீடு ஏன் அவசியம் தேவை?

இந்தியாவில் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. நம் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 2.82% பேர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார்கள். இது உலக சராசரியான 3.35 சதவிகிதத்தைவிட மிகவும் குறைவாகும். ஆயுள் காப்பீட்டு விஷயத்தில் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்தியக் காப்பீட்டுத் துறையை ஒழுங்குப்படுத்தும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பும் ‘முதல்வேலையாக ஆயுள் காப்பீடு’ என்கிற பிரசாரத்தை நாடு முழுக்க முன்னெடுத்து வருகிறது. ஆயுள் காப்பீட்டு பாலிசியைச் சம்பாதிக்கும் (மாதச் சம்பளம் / தொழில் வருமானம்) நபர்கள் அனைவரும் அவசியம் எடுக்க வேண்டும். அதாவது, குடும்பச் செலவு மற்றும் நிதித் தேவைகளுக்குத் தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல்போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான் ஆயுள் காப்பீடு.

ஆயுள் காப்பீடு... ஏன் அவசியம் தேவை?

எப்போது பாலிசி எடுக்க வேண்டும்?

எப்போதும் இளம் வயதில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியாக இருக்கும். குறைந்தபட்சமாக, வேலைக்குச் சேர்ந்தவுடன் அதிகபட்சமாக, கல்யாணம் ஆனவுடன் ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பது அவசியமாகும். பொதுவாக, இளம் வயதில் நோய்த் தாக்குதல் குறிப்பாக, நீரிழிவு பாதிப்பு (ரத்தத்தில் அதிக சர்க்கரை), ரத்த அழுத்தப் பாதிப்பு இல்லாமல் இருக்கும். அதனால், பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். மேலும், மிக அதிக தொகைக்கும் பாலிசி எடுக்க முடியும். அதுவே வயதான பிறகு பாலிசி எடுத்தால், பிரீமியம் அதிகமாக இருப்பதுடன், கவரேஜ் தொகையும் குறைவாக இருக்கும். நோய்த் தாக்குதல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பாலிசி மறுக்கப்படலாம்.

ஆயுள் காப்பீட்டில் பல வகைகள் இருக்கின்றன. முழுக்க முழுக்க காப்பீடு அளிக்கும் டேர்ம் பாலிசி, டிரடிஷனல் பாலிசி, சிறிது காப்பீடு, சிறிது முதலீடு என்று கலந்திருக்கும் யூலிப் பாலிசி எனப் பல பாலிசிகள் உள்ளன.

டேர்ம் பிளான்...

முழுக்க காப்பீடு கவரேஜ் மட்டும் அளிக்கும் பாலிசிக்கு ‘டேர்ம் பிளான்’ (Term Plan) என்று பெயர். இந்த பாலிசியில் பாலிசிக் காலத்தில் பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே, அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். பாலிசி காலம் முடியும் வரை ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை எனில், பாலிசி முடிவில் பணம் கிடைக்காது. அதனாலேயே பலருக்கும் இந்த டேர்ம் பிளானை எடுக்கத் தயங்குகிறார்கள்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவு. 30 வயதான ஒருவர் ரூ.1 கோடிக்கு முப்பது ஆண்டுக்கு டேர்ம் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து சுமார் ரூ.6,000 முதல் ரூ.8,000 ஆக இருக்கும். அதாவது, மாதம் ரூ.500 - ரூ.700 தான். இதுவே இந்த பாலிசியை ஒருவர் அவரின் 45 வயதில் புதிதாக எடுத்தால், ஆண்டு பிரீமியம் கிட்டத்தட்ட ரூ.25,000 - ரூ.30,000-ஆக இருக்கும். ஆயுள் காப்பீட்டு பாலிசியில் பாலிசிக் காலம் என்பது ஐந்து ஆண்டில் தொடங்கி 40 ஆண்டுகள் வரை இருக்கிறது. இதை பாலிசிதாரர் தேவைக் கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும்?

நம்மில் பெரும்பாலானோர் போதிய தொகைக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்காமல் ஏனோதானோ என்று ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என எடுக் கிறார்கள். இந்த பாலிசிகளால் குடும்பத்தினருக்கு எந்தப் பெரிய நிதிப் பாதுகாப்பும் கிடைக்கப் போவதில்லை.

எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பது பாலிசிதாரரின் வருமானத்தைப் பொறுத்திருக்கிறது. பொதுவாக, ஒருவர் தன்னுடைய ஆண்டு வருமானத்தைப்போல குறைந் தது 15 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்தால் நல்லது. உதாரணமாக, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.50,000 என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம். அவர் குறைந்தது ரூ.90 லட்சம் ரூபாய்க்கு எடுக்க வேண்டும். இதற்கான ஆண்டு பிரீமியம் ரூ.5,500 – ரூ.7,500 ஆக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டின் முதன்மை நோக்கத்தைக் குறைந்த செலவில் நிறைவேற்றும் பாலிசியை அனைவரும் அவசியம் எடுப்பது அவசியம். அதுவும் முதலீடுகளை ஆரம்பிக்கும் முன்பாகவோ, அதனுடன் சேர்த்தோ எடுப்பது நல்லது.

ஆயுள் காப்பீடு... ஏன் அவசியம் தேவை?

காப்பீடும் முதலீடும்...

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் பல வகைகள் இருக்கின்றன. இதில் பிரபலமான பாரம்பர்ய காப்பீடு (Traditional Insurance) என்கிற போது எண்டோவ்மென்ட் பிளான், மணிபேக் பிளான், முழு ஆயுள் பாலிசி ஆகிய மூன்று வகை பாலிசிகள் வரும். இந்த பாலிசிகளை அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவை, காப்பீடு மற்றும் சேமிப்பு கலந்த பாலிசி களாகும். இந்த பாலிசிகளை நீண்ட காலத்தில் பணம் சேர்க்கவே பயன்படுத்தி வருகி றார்கள். குழந்தைகளின் படிப்பு, திருமணத்துக்காக இந்த பாலிசி களை பலரும் எடுக்கிறார்கள்.

காப்பீடும் சேமிப்பும் கலந்த யூலிப் பாலிசி மூலம் கிடைக்கும் வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டைச் சார்ந்திருக்கிறது. இதில் குறைந்த அளவு தொகை மட்டுமே இன்ஷூரன்ஸுக்காக செல்வதால், நமக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் கவரேஜ் இதில் கிடைக்காது.

பாரம்பர்யத் திட்டங்களான எண்டோவ்மென்ட் பிளான், முழு ஆயுள் பாலிசியில் பாலிசிதாரருக்கு சிறிய தொகைக்கு ஆயுள் காப்பீடு கவரேஜ் கிடைப்பதுடன் பாலிசி முதிர்வில் போனஸுடன் குறிப்பிட்ட மொத்தத் தொகை கிடைக்கும். மணிபேக் பிளானில் இடையிடையே குறிப்பிட்ட தொகை (பாலிசித் தொகையில் 15% அல்லது 20%) கிடைப்பதுடன், பாலிசி முதிர்வின்போதும் குறிப்பிட்ட மொத்தத் தொகை (பாலிசித் தொகையில் 50 - 40%) கிடைக்கும். இந்த பாலிசிகளில் டேர்ம் பிளானைவிட பிரீமியம் அதிகம். போனஸ், முதிர்வுத் தொகை சேர்ந்து பாலிசி முதிர்வில் சுமார் 5 - 6% வளர்ச்சி இருக்கும்.

பிரீமியம் எப்படி நிர்ணயம் செய்வார்கள்?

பொதுவாக, பாலிசிதாரரின் வயது, கவரேஜ் தொகை, பாலிசிக் காலம், பிரீமியம் கட்டும் ஆண்டுகள், திட்டம் மற்றும் வருமானத்தின் தன்மை, பாலிசிதாரரின் உடல் ஆரோக்கியம், பழக்கவழக்கம் (புகை மற்றும் மதுப்பழக்கம்) ஆகியவற்றைப் பொறுத்து பிரீமியத் தொகை மாறுபடும்.

பாரம்பர்ய பாலிசிகள் மற்றும் யூலிப் பாலிசிகளில் பிரீமியத்தை விகிதாசார அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கிறார்கள். அதில், ஒரு பகுதி ஆயுள் காப்பீடு கவரேஜுக்கும், இன்னொரு பகுதி சேமிப்புக்கும், மற்றொரு பகுதி காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாகச் செலவுக்கும் எனப் பிரிக்கப்படுகின்றன. இந்த பாலிசிகளில் நிர்வாகச் செலவு கொஞ்சம் அதிகமாக இருப்பதால், வருமானமும் காப்பீட்டு கவரேஜ் தொகையும் குறைவாகத்தான் இருக்கும்

டேர்ம் பாலிசியில் பிரீமியம் என்பது காப்பீடு மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாகச் செலவுக்கு மட்டுமே செல்வதால், அதிக தொகைக்கு கவரேஜ் கிடைக்கும். முதலீட்டுக்கு எனப் பணம் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்பதால், பாலிசி முதிர்வில் தொகை எதுவும் கிடைக்காது. இந்த பாலிசியில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

(வளரும்)

காப்பீட்டுத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது?

சுமார் 30 வயதான ஒருவர் ரூ.1 கோடிக்கு 30 ஆண்டுக்கு டேர்ம் பாலிசி எடுத்து ஆண்டு பிரீமியமாக ரூ.6,500 கட்டியுள்ளார். இந்த நிலையில், பாலிசி எடுத்த ஆறாவது மாதம் அவர் திடீர் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறார். அவரின் குடும்பத்துக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.1 கோடி கொடுத்துவிடுகிறது.

இப்படி ரூ.6,500 கட்டிய பாலிசிக்கு ரூ.1 கோடி கொடுத்தால் காப்பீட்டு நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக இருக்குமா? அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. காரணம், பாலிசி எடுத்திருக்கும் லட்சக் கணக்கான நபர்களில் ஏதாவது ஓரிரு நபருக்குத்தான் இப்படி அசம்பாவிதம் ஏற்படக்கூடும். அந்த வகையில், காப்பீட்டு நிறுவனத்துக்கு பாதிப்பு இருக்காது.

கடனுக்கும் காப்பீடு..!

ஒருவருக்குக் கடன் இருந்தால், அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கும் சேர்த்து ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம்.

உதாரணமாக, மாதம் ரூ.60,000 சம்பளம் வாங்கும் ஒருவர் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார். அவர் வீட்டுக் கடன் வாங்கும்முன் ரூ.40 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுத்திருக்கிறார். அவர் எதிர்பாராத விதத்தில் இறந்துபோனால், டேர்ம் பிளான் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைமூலம் வீட்டுக் கடனை அடைத்ததுபோக, ரூ.10 லட்சம் மட்டுமே மிச்சம் இருக்கும். அந்தத் தொகையைக் கொண்டு குடும்பத்தினர் மீதிக் காலத்தை ஓட்டுவது கடினம். அவர் ரூ.30 லட்சத்துக்கு வீட்டுக் கடன் காப்பீடு எடுத்திருந்தால், வீட்டுக் கடன் அந்தக் காப்பீட்டின்மூலம் ஈடுகட்டப்பட்டு, வீடு குடும்பத்தினருக்குச் சொந்தமாகி இருப்பதுடன், அவர் எடுத்திருந்த ரூ.40 லட்சம் டேர்ம் பிளான் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். வீட்டுக் கடன் காப்பீடு எடுக்கும்போது, கடன் தொகை குறைவதற்கேற்ப, இழப்பீட்டுத் தொகையும் குறையும் தன்மை கொண்ட பாலிசி எடுக்கும்பட்சத்தில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு