Published:Updated:

இன்ஷூரன்ஸ் எடுப்பதை முதலீடாகக் கருதலாமா? - ஒரு வழிகாட்டுதல்!

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

பாலிசியின் பெயர்களில் சில்ட்ரன்ஸ் பிளான், ரிட்டயர்மென்ட் பிளான் எனத் திட்டங்களின் பெயர்களை வைத்திருப்பதால், அந்தந்த தேவைக்கு எனக் கருதி மக்கள் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள்.

நம் சம்பாத்தியத்தை நம்பியே நம் குடும்பமும் உறவுகளும் இருக்கின்றன. நம் சம்பாத்தியம்தான் அவர்களுக்கான வாழ்வாதாரமாகவும் இருக்கலாம். 'ஒருவேளை நாளையே நாம் இல்லாமல் போய்விட்டால், அவர்கள் கதி?'

இந்தக் கேள்வி, எதிர்மறையாகத் தெரியலாம். ஆனால் யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்வி நம் நிம்மதிக்கு வித்திடும் அலாரமாகவே இருக்கும்.

பெங்களூருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அவருடைய மாதச் சம்பளம் 1,20,000 ரூபாய். தனிநபர் கடன் இ.எம்.ஐ, வீட்டுக் கடன் இ.எம்.ஐ, நகைக்கடன் வட்டி போன்றவற்றைத் தாண்டி, தன் பிள்ளைக்குப் படிப்பு, வீட்டுச் செலவு, தன் பெற்றோருக்கும், தன் மனைவியின் பெற்றோருக்குமான செலவு என அனைத்தையும் கச்சிதமாக நிர்வகித்து வந்தார். மனைவி ராகவி குடும்ப நிர்வாகி. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... பாலிசியைத் தேர்வுசெய்ய கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

ஒருநாள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது பெரும் விபத்தைச் சந்திக்கிறார் ராதாகிருஷ்ணன். அன்றைய தினம் அவருடைய குடும்பம் மொத்தமும், தவியாய்த் தவித்துப் போனது. தங்கள் நேசத்துக்குரியவரை இழந்துவிட்ட சோகத்தில் அந்தக் குடும்பம் கண்ணீரில் தத்தளித்தது. அந்தக் குடும்பத்தைப் பற்றி அறிந்த உற்றார் உறவினர்கள் 'உச்'சுக்கொட்டியபடி முதலில் யோசித்த ஒரே விஷயம், 'இனிமே இந்தக் குடும்பத்தோட கதி?'

ஆனால், ராதாகிருஷ்ணன் தனக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்துவிட்டால், தன் குடும்பம் பொருளாதார நெருக்கடியால் தவிக்கக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன், தனக்கு திருமணமான கையுடன், தனது 25 வயதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுத்திருந்தார். அதற்கு அவர் மாதம் தோறும் செலுத்தி வந்த பிரீமியம் தொகை ரூ.1000-ஐ விடக் குறைவு.

அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்துக்குக் கிடைத்த அந்த முதிர்வுத் தொகை, பிள்ளைகள் பெரியவர்களாகி வேலைக்குப் போகும் வரை உதவிகரமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இப்போது புரிகிறதா டேர்ம் இன்ஷூரன்ஸின் மகத்தான பலன் என்னவென்று?!

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல!

ஆனால், நம்மில் பலருக்கு இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மீது தவறான கண்ணோட்டம் இருக்கிறது. அதாவது, இன்ஷூரன்ஸ் என்பதை, நமது குடும்பத்தின் பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களும் வருமானம் பார்ப்பதற்காக தேவையில்லாத பாலிசிகளையெல்லாம் மக்கள் தலையில் கட்டிவருகிறார்கள்.

கொரோனா பேரிடர் மாதிரியான நேரங்களைப் பயன்படுத்தி, மக்களை இன்ஷூரன்ஸ் எடுக்க வைப்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். பாலிசியின் பெயர்களில் சில்ட்ரன்ஸ் பிளான், ரிட்டயர்மென்ட் பிளான் எனத் திட்டங்களின் பெயர்களை வைத்திருப்பதால், அந்தந்த தேவைக்கு எனக் கருதி மக்கள் அதை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள்.

மைக்ரோ இன்ஷூரன்ஸ்
மைக்ரோ இன்ஷூரன்ஸ்

இப்படியான இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்காக கட்டும் பிரீமியத்தில் பெரும்பகுதி, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு மற்றும் அரசு சார்ந்த பத்திரங்கள், நிறுவனப் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இதிலிருந்து வருமானம் கிடைத்தால், அதிலிருந்து பெரும்பகுதியை நிறுவனம் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை எடுத்து உங்களுக்கு முதிர்வாகக் கொடுக்கும்.

இப்படி குறைந்த லாபத்திற்கு, இன்ஷூரன்ஸை முதலீடாக நினைத்து முதலீடு செய்வதற்குப் பதிலாக, நீண்டகால அடிப்படையில் நல்ல லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் நேரடியாக முதலீடு செய்யலாம்.

ரிஸ்க் உள்ளவர்களுக்கு பிரீமியம் அதிகம்!

டேர்ம் இன்ஷூரன்ஸ், நாம் கேட்கிற தொகைக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் இருக்காது. மாறாக, கவரேஜ் தொகையானது பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்பச் செலவுகள் (கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவை), கடன்கள், எதிர்காலத் திட்டங்கள், இன்னும் சர்வீஸ் உள்ள வருடங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் கணக்கில்கொண்டுதான் நிர்ணயிக்கப்படும். ரிஸ்க் குறைவாக உள்ள பாலிசிதாரருக்கு பிரீமியம் குறைவாகவும், ரிஸ்க் அதிகமுள்ளவருக்கு பிரீமியம் அதிகமாகவும் இருக்கும். புகை, குடிப்பழக்கம் இருந்தால் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியம் மாறும்.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்
டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்... எது நல்லது?

டேர்ம் இன்ஷூரன்ஸில் ஒருவர் தனது வருடாந்திரச் சம்பளத்தில் 10 அல்லது 15 மடங்கு வரை கவரேஜ் எடுத்துக்கொள்ளலாம். ஓய்வுபெறும் வயது வரை மட்டும் பாலிசி காலத்தை வைத்துக்கொள்ளலாம். டேர்ம் இன்ஷூரன்ஸுடன் கூடுதல் கவரேஜ் பெறும் வழிமுறையும் உள்ளது. அதற்கான வசதிகளை `ரைடர்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. விபத்து, நோய் போன்றவற்றுக்குக் காப்பீடு தனியாக எடுத்தால், அதிக பிரீமியம் செலுத்தவேண்டிவரும். அதுவே டேர்ம் பிளானுடன் சேர்த்து ரைடராக எடுத்தால், பிரீமியம் மிகக் குறைவாகவே இருக்கும்.

ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் 25 - 30 வயதுடைய ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், ஆண்டு பிரீமியம் 8,000 - 10,000 ரூபாய்க்கும் குறைவாகவே வரும்.

அதனால், இனி முதலீட்டுக் கண்ணோட்டத்தில் இன்ஷூரன்ஸை அணுகாமல், ரிஸ்க் குறைவாக இருக்கும்போதே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு