Published:Updated:

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஏமாற்றி விற்கும் வங்கிகள்... எச்சரித்த ஐ.ஆர்.டி.ஏ.ஐ... என்ன பிரச்னை?

மக்களிடம் நம்பிக்கையை விதைப்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையை குறைக்கும் விதத்தில் நடந்து கொள்வது காப்பீட்டு திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்க செய்யும்.

Published:Updated:

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஏமாற்றி விற்கும் வங்கிகள்... எச்சரித்த ஐ.ஆர்.டி.ஏ.ஐ... என்ன பிரச்னை?

மக்களிடம் நம்பிக்கையை விதைப்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையை குறைக்கும் விதத்தில் நடந்து கொள்வது காப்பீட்டு திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்க செய்யும்.

இன்று பிரபல வங்கிகள், வங்கி சார்ந்த சேவைகள் மட்டுமன்றி வேறு பல சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. பல காப்பீட்டு பாலிசிகளை வாடிக்கையாளருக்கு விற்கவேண்டும் என்று வங்கி ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு விற்கப்படும் பாலிசிகளுக்கு கமிஷன் தொகையும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதனால், வங்கி முகவர்கள் இதுபோன்ற பாலிசிகளை வாடிக்கையாளருக்கு விளக்கிச் சொல்லாமல் சுயநல நோக்கில் விற்று விடுகின்றனர். காரணம், இந்த பாலிசிகள் மூலம் கிடைக்கும் அதிக சதவிகித கமிஷன் ஆகும்.

மேலும் காப்பீட்டு பாலிசி என்பது 3 முதல் 5 ஆண்டுகள் வரை லாக்கின் பீரியட் கொண்ட திட்டங்களாக இருக்கும். இந்தத் திட்டத்தில் இருந்து பணத்தை குறுகிய காலத்தில் எடுக்க முடியாது. இதனால், முதலீட்டு நோக்கில் பரிந்துரைக்கப்பட்ட இந்த பாலிசிகளிலிருந்து அவசர செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் பலரும் திணறுகிறார்கள்.

Bank (Representational Image)
Bank (Representational Image)

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (Insurance Regulatory and development authority of India - சுருக்கமாக IRDAI) 2019-20 காலகட்டத்தில் மட்டும் வங்கிகள் மீது 9,600 புகார்களும் காப்பீட்டு முகவர்கள் மீது 9,900 புகார்களும் வந்திருக்கின்றன. மேலும், இந்தியாவில் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனங்களின் மேல் 43,444 புகார்கள் பதியப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட புகார்கள் மட்டும் இந்த அளவிற்கு இருக்கும்போது புகார் தெரிவிக்காத வாடிக்கையாளர்களையும் கணக்கில் சேர்த்தால் இந்தப் பிரச்னையின் தீவிரம் புரியும். இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த புகார்களின் எண்ணிக்கை 2015-16 காலகட்டத்தில் 1.02 லட்சம் என்ற அளவில் இருந்தது. இப்பொழுது இந்தப் புகார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 50,000-க்கும் கீழ் சென்றுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (LIC) எதிராக 4,000 புகார்களும் பிற தனியார் நிறுவனங்களுக்கு எதிராக 40,000 புகார்களும் பதியப்பட்டுள்ளன.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

அவ்வாறு பெறப்பட்ட புகார்களில் பெரும்பாலும் கீழ்க்கண்ட காரணங்கள் இடம்பெற்றுள்ளன:

1) பாலிசி பற்றி முழுமையாக விளக்காமல் விற்றது

2) திட்டத்திற்கான கட்டணங்களை சரியாக விவரிக்காதது

3) ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும் என்று கூறி பலமுறை பிரீமியம் செலுத்தும் திட்டத்தில் அறியாமல் சேர்த்து விட்டது

4) ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணம் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்லாதது

5) இந்த பாலிசி வாங்கினால்தான் வங்கியில் பிற சேவைகள் (வங்கி லாக்கர், கடன்) கிடைக்கும் என்று வலுக்கட்டாயமாக வாடிக்கையாளரிடம் இந்த சேவையை விற்றது

இதுகுறித்து IRDAI வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இது போல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் காப்பீட்டு திட்டங்களை விற்பது சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிரானதாகப் போய்விடும்.

மக்களிடம் நம்பிக்கையை விதைப்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையை குறைக்கும் விதத்தில் நடந்து கொள்வது காப்பீட்டு திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்க செய்யும். நீண்டகால நோக்கில் இந்தச் செயலானது காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக சென்றுவிடும். அதனால் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் திட்டங்களை விளக்கிச் சொல்லி விற்பனை செய்வதே இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவும்" என்று தெரிவித்துள்ளது.

(Representational Image)
(Representational Image)

வாடிக்கையாளர்களும் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தத் திட்டத்தைப் பற்றி நன்கு புரிந்து அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்த காலத்திலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் விலகிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கும். ஒருவர் முதலீடு செய்த பிறகு அந்த திட்டத்தின் ஸ்டேட்மென்ட் ஆனது காப்பீட்டு நிறுவனத்தால் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த ஸ்டேட்மென்ட்டை சரிபார்த்து எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது, அந்தத் திட்டத்தின் செயல்பாடு எப்படி இருக்கும், தனக்கு ஏற்ற திட்டம்தானா என்று அறிந்து தனக்கு தோதான திட்டம் அது இல்லை என்று கருதினால் உடனடியாக அதிலிருந்து விலகிக் கொள்வதற்கு முடியும். பெரும்பாலும் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு எடுத்த 15 நாட்கள் வரை வாடிக்கையாளர் விரும்பாவிட்டால் விலகிக் கொள்வதற்கு வாய்ப்பளித்திருப்பார்கள்.