இனி தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசியைத் தேர்வு செய்வது மிக எளிது... ஏன் தெரியுமா?

தனிநபர் விபத்து பாலிசி என்பது, விபத்தால் நடக்கும் மரணம் அல்லது விபத்தால் நிரந்தரமாக ஏற்படும் உடல் உறுப்பு இழப்பு போன்றவற்றை கவர் செய்யும் வகையில் இருக்கும் பாலிசி ஆகும்.
கடந்த வாரம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ (இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்)
பொது காப்பீடு மற்றும் ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசிகள் எளிய வடிவிலும் அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் சீரான பாலிசியை 2021 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வடிவமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது காப்பீட்டுச் சந்தையில் பல்வேறு வகையான தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசிகள் உள்ளன. ஒவ்வொரு பாலிசியும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் விளங்குகிறது.

இது சாதாரண மக்களுக்கு ஒவ்வொரு பாலிசியையும் ஆராய்ந்து பார்த்து தனக்குத் தகுந்த ஒரு தனிநபர் விபத்து பாலிசியைத் தேர்ந்தெடுப்பது சவாலாகவே உள்ளது.
சாதாரண மக்களும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எந்த விதமான கூடுதல் பிரிவுகள் இல்லாமல் எளிய வகை தனிநபர் பாலிசியை உருவாக்க ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.
தனிநபர் விபத்து பாலிசி என்பது, விபத்தால் நடக்கும் மரணம் அல்லது விபத்தால் நிரந்தரமாக ஏற்படும் உடல் உறுப்பு இழப்பு போன்றவற்றைக் கவர் செய்யும் வகையில் இருக்கும் பாலிசி ஆகும்.
புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள இந்த எளிய பாலிசி கீழ்க்கண்டுள்ள குறைந்தபட்ச அம்சங்களைக் கொண்டவாறு இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

1. பாலிசி ஒரு வருட காலம் அமலில் இருக்குமாறும் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
2. பாலிசி எடுத்து ஒரு வருடத்துக்குள் பாலிசிதாரர் விபத்தில் இறந்துவிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டால் கவரேஜ் தொகை 100% வழங்கப்பட வேண்டும்.
3. நிரந்தர ஊனம் என்பது இரு கண்களை இழப்பதோ, இரு கைகள் அல்லது இரு கால்களை இழப்பதைக் குறிக்கும். இந்தக் காரணத்தால் பாலிசிதாரர் வேலைக்குப் போக முடியாத நிலையில் பாலிசிதாரருக்கு முழு கவரெஜ் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும்.
4. பாலிசிதாரருக்கு விபத்தால், உடலின் ஒரு பாகம் (உதாரணத்துக்கு, ஒரு கண் அல்லது ஒரு கால் அல்லது ஒரு கை) இழந்து அவதிப்பட்டால் அவருக்கு காப்பீட்டுத் தொகையில் 50% இழப்பீடாகக் கொடுக்க வேண்டும்.

5. விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் காப்பீட்டு தொகையில் 10% வரை இழப்பு வழங்க வேண்டும்.
6. பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு (2 குழந்தைகள் வரை) காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை வழங்க வேண்டும்.
7. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2.5 லட்சமாகவும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடிக்கு மிகாமலும் இந்த வகை பாலிசிகள் இருக்க வேண்டும்.
இந்த பாலிசிகள் 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரும்பட்சத்தில் ஒவ்வொரு சாமானியனும் எளிதில் புரிந்துகொண்டு தனிநபர் விபத்து பாலிசி எடுக்க வசதியாக இருக்கும்.
- எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in