Published:Updated:

எல்.ஐ.சி ஜீவன் சரல் பாலிசியில் மோசடியா... என்ன பிரச்னை?!

தெ.சு.கவுதமன்

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஜீவன் சரல் பாலிசியில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாக, அந்த நிறுவனம்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காப்பீடு
காப்பீடு ( vikatan )

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஜீவன் சரல் பாலிசியில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நிதிக் கல்வியை ஊக்குவிக்கும் மணி லைஃப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு, இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. இந்த அமைப்பு, எல்.ஐ.சி நிறுவனத்தின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
vikatan

இந்தப் பாலிசியை எடுத்துள்ள சுமார் 5 கோடி பாலிசிதாரர்கள், தங்களது முதன்மை மூலதனத்தில் பெரும்பகுதியை இழந்துள்ளதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வயதான வாடிக்கையாளர்களே இந்த பாலிசியால் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்த பாலிசிமூலம் 1 லட்சம் கோடிக்குமேல் மோசடி நடந்துள்ளதாகவும் தங்களுக்கு அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாதிப்பு மிகப்பெரியதாக இருந்ததால், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கும் சூழல் எங்களுக்கு ஏற்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளது. பாலிசிதாரர்கள் இதுவரை கட்டியுள்ள தொகையை 8 சதவிகித வட்டியுடன் திரும்பத் தர உத்தரவிடும்படி வழக்கில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பென்ச், விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஜீவன் சரல் பாலிசி

ஜீவன் சரல் பாலிசியின் பிரீமியத்தை வழக்கம்போல் மாதாந்தர, காலாண்டு, ஆண்டுக்கணக்கில் செலுத்த முடியும். பாலிசி கால வரையறைக்குள் காப்பீட்டாளர் இறக்க நேரிட்டால், அவரது மாதாந்தர பிரீமியம் தொகையைப்போல் 250 மடங்கு தொகை இழப்பீடாக வழங்கப்படும். பாலிசியின் கால வரையறை முடியும் வரை காப்பீட்டாளர் வாழ்ந்துகொண்டிருந்தால், பாலிசியின் முதிர்வுத்தொகையோடு கூடுதலாக விசுவாசத்தொகையும் அளிக்கப்படும். பிரீமியத்தொகை எவ்வளவு என்பதை பாலிசிதாரரே முடிவுசெய்யலாம்.

நிபந்தனைகளுக்கு உள்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை முழுவதுமாகவோ பகுதியாகவோ சரண்டர் செய்து கொள்ள முடியும். செலுத்தும் பிரீமியத்துக்கும் முதிர்வுத்தொகைக்கும் வருமான வரிச்சட்டம் செக்ஷ்ன் 80 சி மற்றும் செக்ஷ்ன் 10 (10 D)-ன்படி முழு வருமான வரி விலக்கு உண்டு. 2013-ம் ஆண்டு இறுதியில் பழைய பாலிசிகள் அனைத்தையும் எல்.ஐ.சி திரும்பப் ,பெறும்போது இந்த ஜீவன் சரல் பாலிசியும் திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.

பாலிசி
பாலிசி
vikatan

ஜீவன் சரல் பாலிசியின் முதிர்வுத்தொகை, பிரீமியம் செலுத்தும் முறை குறித்தெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக்கூறாமல் பாலிசி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மூன்றாண்டுகளுக்குப் பின் பாலிசியின் ஒரு பகுதியை சரண்டர் செய்வதுகுறித்து விவரித்த முகவர்கள், அதனால் முதிர்வுத்தொகையில் ஏற்படும் இழப்பு குறித்தெல்லாம் விவரிக்காமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக பாலிசிகளை விற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், வட இந்தியாவில் பல பகுதிகளில் இந்த பாலிசி விற்பனையின்போது, வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்ட முன்மொழிவுப் படிவத்தில் தவறான தகவல்களை அளித்து, அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இத்தனை புகார்கள் எழுந்த பின்னும் இன்ஷூரன்ஸ் கண்காணிப்பு அமைப்பான ஐஆர்டிஏஐ, மோசடிப் புகார் குறித்து விசாரணை நடத்த முழு அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காப்பதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த கோடிக்கணக்கான மக்களின் சேமிப்புகளை இந்தப் பாலிசி விழுங்கிவிட்டதாகவும், குறிப்பாக முதியவர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு தொடுத்த அமைப்பு கூறுகிறது. இந்த பாலிசிக்காக வாடிக்கையாளர்களைச் சேர்த்த முகவர்கள், தற்போது அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் கோபத்தில் இருப்பதாகவும், வாடிக்கையாளர்களும் தாங்கள் கட்டிய பணத்தைத் திரும்பப்பெற எங்கெங்கோ அலைந்தும் எல்.ஐ.சி தரப்பிலிருந்து உரிய நிவாரணம் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
vikatan

இதுகுறித்து சில முகவர்களிடம் விசாரித்தபோது, இந்தப் பாலிசி முழுக்கமுழுக்க பாலிசிதாரரின் திடீர் மரணத்தின்போது அவரது குடும்பத்தினருக்கு உதவும்விதமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். எதிர்பாராத மரணம் நேர்ந்தால், மாதாந்தரப் பிரீமியத்தைவிட 250 மடங்கு தொகை கிடைக்கும்போது, அந்தக் குடும்பத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், முதிர்வுத்தொகை பாலிசியில் கூறப்பட்டுள்ளபடி எதிர்பார்க்கலாம். இந்தப் பாலிசியை பத்தாண்டுகளுக்கு மேல் நீண்டகால நோக்கில் எடுத்திருந்தால்தான் முதிர்வுத்தொகை அதிகமாகக் கிடைக்கும். பத்தாண்டுகளுக்கும் குறைவான கால அளவுக்கு எடுத்தால் அதற்கேற்ப முதிர்வுத்தொகையும் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. இதுகுறித்து தெளிவான புரிதலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தத் தவறுவதால், இந்த புகார்கள் எழலாமே தவிர, பாலிசியில் எவ்விதத் தவறும் இல்லை. இந்தப் பாலிசியின் பலன்குறித்து மிகைப்படுத்திக்கூறி, சில முகவர்கள் விற்பனை செய்ததும்கூட இந்தக் குழப்பத்திற்குக் காரணமாகும் என்றார்கள்.

நீங்களும் இதுபோல் பாலிசி எடுத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஏதாவது புகார்கள் இருந்தால் கமென்ட்டில் தெரிவிக்கவும்.