Published:Updated:

எல்.ஐ.சி பங்கு விற்பனை... பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா?

‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்
பிரீமியம் ஸ்டோரி
‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்

சிறப்புப் பேட்டி

எல்.ஐ.சி பங்கு விற்பனை... பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா?

சிறப்புப் பேட்டி

Published:Updated:
‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்
பிரீமியம் ஸ்டோரி
‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்

எல்.ஐ.சி தென்மண்டல மேலாளர் க.கதிரேசன், ஆயுள் காப்பீட்டுத்துறையில் 33 ஆண்டுக்கால அனுபவமுள்ளவர். கடந்த 2012-ம் ஆண்டு சிங்கப்பூரில் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்து, அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர். நாணயம் விகடன் இதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி இங்கே...

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

ஒருவர் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘வீட்டு வேலை செய்வதற்காக என் வீட்டுக்கு ஓர் இளம் பெண் வந்திருந்தார். அவர் பாத்திரம் கழுவுவதைப் பார்த்ததும், அதற்கு முன் வீட்டு வேலை செய்து அவருக்குப் பழக்கமில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்தப் பெண்ணிடம் விசாரித்ததும், அவர் அழுதுவிட்டார். அவருடையது கணவன், மனைவி, ஒரு குழந்தை என அழகான சிறிய குடும்பம். கணவர் வேன் உரிமையாளர். நல்ல சம்பாத்தியம். விபத்து ஒன்றில் அவருடைய கணவருக்குப் படுகாயம் ஏற்பட, ஆறுமாத சிகிச்சையில் சேமிப்பெல்லாம் கரைந்து போனது. ஆனாலும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. வருமானம் ஈட்டிவந்த குடும்பத் தலைவர் மறைந்ததால், அந்தக் குடும்பமே கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்
‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்

கேபிள் டி.வி-க்கு மாதம் 500 ரூபாய், சினிமாவுக்கு மாதம் 1,000 ரூபாய் எனச் செலவிடும் நம்மால் ஆயுள் காப்பீடு பாலிசிக்கு சில ஆயிரம் ரூபாயை பிரீமியமாகக் கட்டுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்தக் குடும்பத் தலைவர் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்தால், அவரை நம்பியிருந்த குடும்பத்துக்கு இந்த பாதிப்பு வந்திருக்காது.

நம் நாட்டில் இன்னும் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்காமல்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இப்போது லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, ‘எல்லாவற்றுக்கும் முதலில் - ஆயுள் காப்பீடு’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுவருகிறது.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை எடுப்பவர்களின் எதிர்பார்ப்பு என்ன?

‘‘ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் மூலம் பெரும்பாலும் மக்கள் எதிர்பார்ப்பது சேமிப்பாகத்தான் இருக்கிறது. 15 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு தாங்கள் செலுத்தும் பிரீமியத்துக்குப் பயனாக முதிர்வுத் தொகையை எதிர்பார்க்கிறார்கள். சிலர் ஆயுள் காப்பீட்டுடன், இடையில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தொகையைத் தரும் `மணிபேக்’ திட்டத்தை விரும்புகிறார்கள்.

‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்
‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்

`ஒருவரின் வாழ்நாள் முழுக்கப் பயன்தரக்கூடிய வகையில் ஏதாவது ஒரு பாலிசி எல்.ஐ.சி-யில் இருக்கிறதா...’ என்று கேட்டால், நிச்சயம் உண்டு. அது, எல்.ஐ.சி-யின் `ஜீவன் உமங் பாலிசி.’ இதில் பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்த பிறகு காப்புத் தொகையில் ஆண்டுக்கு 8% வாழ்நாள் முழுவதும் வாழ்வுகாலப் பயனாகக் கிடைக்கும். இதில் கட்டும் பிரீமியம் மற்றும் வாழ்நாள் பலனுக்கு வருமான வரி கிடையாது. இந்த பாலிசி அண்மையில் மறு அறிமுகம் செய்யப் பட்டது. அப்போது பாலிசிதாரர்களின் நலன் கருதி பிரீமியம் அதிகரிக்கப் படவில்லை. புதியச் சலுகையாக பிரீமியம் தள்ளுபடி செய்யும் வசதியை (Premium Waiver Benefit - PWB) சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் நலனுக்கு இது இன்றியமையாதது.’’

பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்காலச் செலவுகளுக்குக் கைகொடுப்பது மாதிரியான பாலிசி ஏதாவது எல்.ஐ.சி-யில் இருக்கிறதா?

‘‘எல்.ஐ.சி-யின் `ஜீவன் தருண்’ மற்றும் `சில்ட்ரன் மணிபேக் பாலிசி’ ஆகியவை பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற உதவும் பிரத்யேக பாலிசிகள். இந்த பாலிசிகளில் பெற்றோருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க பாலிசிகளில் `பிரீமியம் தள்ளுபடி பலன்’ என்ற துணை பாலிசி (Rider) இருக்கிறது. இந்தத் துணை பாலிசியுடன் பாலிசி எடுத்திருந்தால், பெற்றோர் இறப்புக்குப் பிறகு பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். பிள்ளைகள் பெயரில் எடுக்கப்படும் `ஜீவன் தருண்’, `ஜீவன் உமங்’, `ஜீவன் லாப்’, `சில்ட்ரன் மணி பேக்’, `பீமா ஸ்ரீ’ ஆகிய திட்டங்களில் இந்தக் கூடுதல் ரைடர் வசதி இருக்கிறது.’’

ஒருவர் எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும்?

‘‘எல்.ஐ.சி-யைப் பொறுத்த வரை 35 வயது வரையுள்ள ஒருவர் அவருடைய ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை இருக்குமெனில், அதிகபட்சமாக அவருடைய ஆண்டு வருமானத்தில் 25 மடங்கு வரை ஆயுள் காப்பீடு எடுப்பது நல்லது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேலுள்ள நபர்கள் ஆண்டு வருமானத்தில் 30 மடங்கு வரை ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.’’

தொலைபேசி எண், வீட்டு முகவரி மாற்றங்களை உடனுக்குடன் காப்பீட்டு நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்!

ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன?

‘‘தவணைத் தேதி தவறாமல் பிரீமியம் செலுத்த வேண்டும். நாமினி நியமிப்பது மிக அவசியம். திருமணமானவுடன் நாமினியை மாற்றுவது நல்லது. பாலிசி காலத்தில் நாமினி இறக்க நேரிட்டால், மாற்று நாமினியை உடனே நியமிக்க வேண்டும். தொலைபேசி எண், வீட்டு முகவரி மாற்றங்களை உடனுக்குடன் காப்பீட்டு நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்கள் மாறும் நிலையில் அவற்றையும் தெரியப்படுத்த வேண்டும். பாலிசியில் கடன் எடுத்திருந்தால், அதற்கான வட்டியை உரிய நேரத்தில் செலுத்துவது நல்லது.’’

குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எல்.ஐ.சி மிகவும் கருணையுடன் நடப்பதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

‘‘எல்.ஐ.சி-யில் நாங்கள் முதிர்வு மற்றும் இறப்பு உரிமங்களை உடனுக்குடன் வழங்க விரும்புகிறோம். அதற்கு எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். ஆண்டுதோறும் சராசரியாக 98% இறப்பு உரிமங்களை வழங்கிவருகிறோம். சரியாக பிரீமியம் செலுத்தாத நிலையில் பாலிசிதாரர் இறக்க நேரிடும்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைத் தொகையை அந்தக் குடும்பத்துக்கு வழங்குகிறோம். அதேபோல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் பெருமளவு உயிர்ச்சேதம் நடைபெறும் சூழ்நிலையில், இறப்பு உரிமங்களை உடனடியாக வழங்க எல்.ஐ.சி பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அந்தச் சூழ்நிலையில் இறப்பு உரிமங்களை வழங்க சில ஆவண நிபந்தனைகளைத் தளர்த்துகிறோம். இறப்பு உரிமம் வழங்குவதில் பயனாளிகளுக்கு அதிருப்தி இருக்குமெனில், அதை மறுபரிசீலனை செய்ய இழப்பீடு மறு ஆய்வு கமிட்டி (Claims Review Committee) இருக்கிறது.

எல்.ஐ.சி பங்கு விற்பனை... பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா?

அண்மையில் அவினாசியில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களில் ஒன்பது பாலிசிதாரர்களின் இழப்பீட்டுத் தொகையான ரூ.68 லட்சத்தை பயனாளிகளுக்கு இரண்டு நாள்களுக்குள் வழங்கியிருக்கிறது எல்.ஐ.சி. அந்த விபத்துக்குப் பிறகு எல்.ஐ.சி-யின் திருப்பூர் கிளை அதிகாரிகள் காவல்துறையிடமிருந்து முதல் தகவல் அறிக்கையைப் பெற்றுத் தந்தனர். கேரள மாநிலத்தில் 21/2/2020 அன்று விடுமுறை தினமாக இருந்தாலும் ஆறு எல்.ஐ.சி கிளைகள் திறக்கப்பட்டு, முகவர்கள் உதவியுடன் இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்பட்டன.’’

எல்.ஐ.சி-யில் தற்போது நடைமுறையிலிருக்கும் பாலிசிகள் எண்ணிக்கை எவ்வளவு... எந்த வயது மற்றும் வருமானப் பிரிவினர் எல்.ஐ.சி பாலிசிகளை அதிகம் எடுத்திருக்கிறார்கள்?

‘‘எல்.ஐ.சி-யில் இப்போது மொத்தம் 24 தனிநபர் பாலிசிகள் உள்ளன. அவற்றில் இரண்டு மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டங்கள், இரண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள், இரண்டு பென்ஷன் திட்டங்கள் மற்றும் இரண்டு ஹெல்த் பாலிசிகள் உள்ளன. இவை தவிர 16 இதர பாலிசிகள் உள்ளன. பிறந்த குழந்தையிலிருந்து அனைவருக்கும் பாலிசிகள் எல்.ஐ.சி-யில் உள்ளன.

`எண்டோவ்மென்ட்’, `ஜீவன் ஆனந்த்’, `ஜீவன் உமங்’ போன்றவற்றை 55 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். `ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ மற்றும் `டேர்ம் இன்ஷூரன்ஸ்’ ஆகியவற்றை 65 வயது வரை எடுத்துக்கொள்ளலாம். வங்கிகளின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் சரிந்துவரும் சூழ்நிலையில் எல்.ஐ.சி பாலிசிகளின் போனஸ் தொகை நிலையாக இருப்பதை கடந்த சில ஆண்டுகளாக நாம் காண்கிறோம். எல்.ஐ.சி-யின் மிக பிரசித்தி பெற்ற பென்ஷன் திட்டமான ‘ஜீவன் சாந்தி’ மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சாமானிய மக்களுக்கு மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. செல்வந்தர்களுக்கென பிரத்யேகமான `ஜீவன் சிரோமணி’ போன்றவை முக்கியமானவை. தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் கிட்டத்தட்ட 2.93 கோடி பாலிசிகள் உள்ளன. இது எல்.ஐ.சி-யின் மொத்த பாலிசிகளில் சுமார் 10%.’’

எல்.ஐ.சி நிறுவனப் பங்கு விற்பனையால் பாலிசிதாரர் களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா?

‘‘மத்திய பட்ஜெட் 2020-21-ல், `மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்கு மூலதனத்தில் சிறிய பகுதியை விலக்கிக்கொள்ளும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 29 கோடி பாலிசிதாரர்களுக்கு பாதிப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர், `பிரிவு 37 அளிக்கும் மத்திய அரசின் ‘Sovereign Guarantee’ என்ற உத்தரவாதம் எல்.ஐ.சி பாலிசிகளுக்கு தொடரும்’ என்று அறிவித்திருக்கிறார். மேலும், எல்.ஐ.சி-க்கு கடன் எதுவும் இல்லை என்பது மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சம்.

எல்.ஐ.சி-யின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கிறது. மேலும், எல்.ஐ.சி-க்கு மிகப்பெரிய பிராண்ட் மதிப்பு இருக்கிறது. இதற்குச் சொந்தமான கட்டடங்கள், இதர சொத்துகள் ஏராளம். அந்த வகையில் எல்.ஐ.சி-யின் மதிப்பு குறைந்தது ரூ.55 லட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசு எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம் சுமார் ரூ.90,000 கோடி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இது இந்தியாவின் மாபெரும் புதிய பங்கு வெளியீடாக இருக்கும்.

இப்படிப் பங்கு வெளியீட்டில் இறங்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும், பிரிவு 24-ன் கீழ் எல்.ஐ.சி-யின் வரவு செலவு தனியாகக் கணக்கிடப்பட வேண்டும். பங்கு விற்பனை மூலம் இன்னொரு சாதக அம்சமும் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி-யை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கண்காணிக்கிறது. பங்கு வெளியீட்டுக்குப் பிறகு செபியும் எல்.ஐ.சியைக் கண்காணிக்கும். இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படவில்லை. மத்திய அரசு அதன் பங்கில் சிறிய அளவை விலக்கிக்கொள்கிறது, அவ்வளவுதான்.”

பாலிசிதாரர் + முகவர் இரு கண்கள்!

‘‘எல்.ஐ.சி-க்கு இரண்டு கண்களென்றால், அவற்றில் ஒன்று, முகவர்கள். மற்றொன்று, பாலிசிதாரர்கள். எல்.ஐ.சி-க்கு நாடு முழுக்க 12 லட்சம் முகவர்களுக்கு மேல் இருக்கிறார்கள். தென் மண்டலத்தில் மட்டும் 1.26 லட்சம் முகவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பால் 63 ஆண்டுகள் முடிந்து, 64-ம் ஆண்டில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது எல்.ஐ.சி. ஒருவருடைய இறப்பிற்குப் பிறகு எல்லோரும் கேட்கும் கேள்வி `இன்ஷூரன்ஸ் தொகை எவ்வளவு?’ என்பதுதான். ஆனால், இந்தக் கேள்வியை ஒருவர் உயிருடன் இருக்கும்போது கேட்பவர்தான் இன்ஷூரன்ஸ் முகவர். அதனால் இன்ஷூரன்ஸ் முகவர்கள் உங்களை அணுகும்போது இந்த உண்மையை சற்றே யோசித்துப் பாருங்கள். `நாளை’ என்ற கேள்விக்கு `இன்றே காப்பீடு எடுத்தல்’ என்பதை வலியுறுத்துபவர் உங்கள் இன்ஷூரன்ஸ் முகவர்தான்.’’