பிரீமியம் ஸ்டோரி

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் ஆயுள் காப்பீடு (Life Insuracne) பாலிசி எடுக்க வேண்டும்; ஆண்டு வருமானம் / சம்பளத்தைப் போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். இந்த பாலிசி களுடன் சற்றுக் கூடுதலாக பிரீமியம் கட்டி, சில துணை பாலிசிகளை (Riders) எடுப்பதன் மூலம் அதிக பலன்களைப் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, துணை பாலிசிகளை எடுப்பது மிகவும் அதிகரித்துள்ளது. இந்தத் துணை பாலிசிகளை ஏன் எடுக்க வேண்டும்?

சிவகாசி மணிகண்டன், 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன்,  நிதி ஆலோசகர், Aismoney.com

ஆயுள் காப்பீட்டு பாலிசியை மட்டும் எடுத்துள்ள ஒருவர் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதுவே, அவர் இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து நல்லபடியாக வீட்டுக்குத் திரும்பினார் எனில், மகிழ்ச்சிதான். ஆனால், மருத்துவமனை செலவுகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தராது. அவர் ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், மருத்துவச் செலவுக்கான தொகை கிடைக்கும். இப்படி தனித்தனியாக லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அதிக பிரீமியம் கட்ட வேண்டும். இதைத் தவிர்க்க உருவாக்கப்பட்டிருப்பதுதான் ‘ரைடர்’ பாலிசிகள்.

இந்த ரைடரை டேர்ம் பிளான், எண்டோவ் மென்ட் பிளான், யூலிப் பாலிசி ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். இந்த ரைடர்களை பாலிசி தொடங்கும்போது எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் துணை பாலிசிகளை விருப்பப்பட்டால், தேவை இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம், கட்டாயமில்லை.

மேலும், இந்த ரைடர்களுக்கான பிரீமியம், அடிப்படை பாலிசியின் பிரீமியத்தில் 30 சதவிகிதத்துக்குமேல் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், ரைடர் பாலிசியின் மூலம் கிடைக்கும் பணப்பலன், அடிப்படை பாலிசியைவிட குறைவாகவே இருக்கும். அதே சமயம், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடரில் மட்டும் 100 சதவிகிதத்துக்கு மேல் அனுமதிக் கப்படுகிறது.

இந்த ரைடர் பாலிசிக்கு கட்டும் பிரீமியம் மற்றும் இழப்பீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த ரைடர் மூலம் ஒரு முறை இழப்பீடு கிடைத்துவிட்டால், அது செயல் இழந்துவிடும். அதே சமயம், அடிப்படை பாலிசி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இனி முக்கியமான சில ரைடர் பாலிசிகளைப் பற்றி பார்ப்போம்.

1. டேர்ம் ரைடர்

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் போதுமான தாக இல்லையெனில், சற்று கூடுதல் பிரீமியத்துடன் டேர்ம் ரைடர் (Term Rider) எடுப்பது நல்லது. எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்துள்ள ஒருவர் இறந்தால், இரு மடங்காக அதிக தொகை குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டும் எனில், இந்த ரைடர் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். கூடுதல் கவரேஜ்க்குப் புதிதாக பாலிசி எடுப்பதற்குப் பதில், ரைடர் மூலம் கவரேஜைக் குறைந்த பிரீமியத்தில் அதிகரித்துக் கொள்ளலாம்.

2. விபத்து இறப்பு துணை பாலிசி

விபத்து மூலம் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், கூடுதல் இழப்பீடு கிடைக்க வழிசெய்து தரும் துணை பாலிசிதான், ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர் (Accidental Death Benefit Rider). இந்த ரைடரை எடுத்திருந்து, விபத்தில் மரணம் அடைந்தால், பாலிசித் தொகையைப்போல் இரு மடங்கு தொகை குடும்பத்தினருக்கு இழப்பீடாகக் கிடைக்கும்.

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி இல்லாதவர்கள் விபத்து இறப்பு ரைடர் பாலிசியை எடுக்கலாம். பாலிசி தாரருக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால், அந்த இக்கட் டான சூழலிலிருந்து வெளியே வர இந்தத் துணைப் பாலிசி பெரும் உதவியாக இருக்கும்.

ஆயுள் காப்பீடு... குறைந்த பிரீமியத்தில் அதிக பயன் தரும் துணை பாலிசிகள்..!

3. டிஸ்எபிலிட்டி கவரேஜ் ரைடர்

ஒருவருக்கு விபத்தினாலோ, நோயாலோ அவரது உடலின் சில உறுப்புகள் அல்லது மொத்தமுமே செயல்படாமல் போகலாம். அதேபோல தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஊனம் ஏற்படலாம். டிஸ்எபிலிட்டி கவரேஜ் ரைடர் (Disability Coverage Rider) பாலிசியை எடுத்திருந்தால், இந்தப் பாதிப்பிலிருந்து வெளியே வர பெரும் உதவிகரமாக இருக்கும். இதில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு காப்பீடு நிறுவனம் வழங்கும். மேலும், இந்த பாலிசியில் எதிர்காலத்தில் கட்ட வேண்டிய அனைத்து பிரீமியமும் தள்ளுபடி செய்யப்படும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், வெளியில் அலையும் பணியில் இருப்பவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டிய ரைடர் பாலிசி இது. நிரந்தர பாதிப்புக்கு உள்ளான பாலிசிதாரர், பாலிசிக் காலத்தில் இறந்துவிட்டால், மீதியுள்ள காப்பீட்டுத் தொகை நாமினிக்கு வழங்கப்படும். வெறும் விபத்து பாதுகாப்பு ரைடர் எனில், பிரீமியம் குறைவாக இருக்கும். விபத்துப் பாதுகாப்பு மற்றும் நிரந்த ஊனம் பாதுகாப்பு ரைடர் எனில், பிரீமியம் அதைவிட சுமார் இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

4. பிரீமியம் தள்ளுபடி ரைடர்

பாலிசி எடுத்து ஒருவேளை பிரீமியம் கட்ட முடியாத சூழல் வந்தால், அதற்கு உதவ உருவாக்கப்பட்ட ரைடர் இது. பெரும்பாலும், இந்த ரைடர் பாலிசி குழந்தைகளுக்கான பாலிசியில் எடுக்க முடியும். அதாவது, பிரீமியத்தைக் கட்டி வரும் பெற்றோருக்கு விபத்து ஏற்பட்டு முழுமையாகச் செயல்பட முடியாத நிலை அல்லது வேலைக்குச் செல்ல முடியாத நிலை அல்லது உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டால் பிரீமியம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும்போது இந்த பாலிசி உதவும்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் திடீர் ஊனத்தால் நிதிச் சிக்கலை குடும்பத்தினர் எதிர்கொள்வார்கள். இந்த நிலையில், தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தைக் கட்டுவது என்பது இயலாததாக இருக்கும். இப்படி பிரீமியம் கட்ட முடியாத நிலையில் இன்ஷூரன்ஸ் பாலிசி காலாவதியாகும் நிலை வரலாம். விபத்து / உடல்நலப் பிரச்னையால் நிரந்த ஊனம் உருவானால், இந்த பிரீமியம் தள்ளுபடி ரைடர், ஆபத்பாந்தவனாக காக்கும். இந்த ரைடர் எடுத்திருக்கும் நிலையில், அடுத்து கட்ட வேண்டிய அனைத்து பிரீமியங்களும் தள்ளுபடி ஆகும். அதே சமயம், அந்த பாலிசியின் கவரேஜ் தொகை முழுமையாக பாலிசி தாரருக்குக் கிடைக்கும். மனைவி, பிள்ளைகள், பெற்றோர் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது இந்த ரைடரையும் எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

5. தீவிர நோய் பாதிப்பு துணை பாலிசி

இருதய பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் செயலிழப்பு, புற்று நோய் போன்ற தீவிர நோய் பாதிப்புக்கான சிகிச்சை செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது. கவனிக்காமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது போன்ற பெரிய நோய் களுக்கு சிகிச்சை செலவுக்கு உதவுவதே கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் (Critical Illness Rider) பாலிசி. இந்தத் துணை பாலிசியைப் பொறுத்தவரை, தீவிர நோய் இருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்தாலே கவரேஜ் தொகை கிடைக்கும். சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்க வேண்டும். ரூ.1 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் எடுத்தால் பிரீமியம் ரூ.150 தான். அதற்குப் பதிலாக, ஒரு லட்சத்துக்கு தனியாக ஹெல்த் பாலிசி எடுத்தால் அதற்கான ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.1,500 - ரூ.1,800 ஆக இருக்கும். இந்த பாலிசியில் ஏற்கெனவே காப்பீட்டு நிறுவனம் கொடுத் திருக்கும் தீவிர நோய்களுக்கான பட்டியலில் இருக்கும் நோயால் பாதிக்கப்பட்டால் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும்.

உடலில் பல பாகங்களின் செயல்பாட்டை கோவிட் வைரஸ் பாதிப்பதால், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிரிட்டில் இல்னஸ் ரைடர் பாலிசியின் தொகை மொத்தமாக அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வழங்கப்படும். இந்தத் தொகையை மருத்துவச் செலவு, குடும்பச் செலவு, கடன் தவணையைக் கட்ட என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பாலிசிதாரர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருந்தால், இந்தத் தொகை குடும்பச் செலவுகளை ஈடுகட்ட உதவும்.

6. ஹாஸ்பிட்டல் கேர் ரைடர்

விபத்து / நோய் பாதிப்பால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், பாலிசிதாரரின் தினசரி செலவுக்காகக் குறிப்பிட்ட தொகையை வழங்குவதுதான் இந்த ரைடர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாள்களில் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தொகை தினமும் கிடைக்கும். அதிக செலவில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான செலவை, ‘மேஜர் சர்ஜிக்கல் அசிஸ்டென்ஸ் ரைடர்’ (Major Surgical Assistance Rider) பாலிசி எடுப்பதன் மூலம் ஈடுகட்ட முடியும்.

இனி ஆயுள் காப்பீடு எடுக்கும்போது துணை பாலிசிகளையும் மறக்காமல் எடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு