Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

என் மகனுக்கு இப்போது 16 வயது. அவனுடைய பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்க நினைக்கிறேன். அவன் பெயரில் செக் புக் இல்லை. இதற்கு என்ன செய்யலாம்?

வி.எல்.சுரேஷ், மேற்கு தாம்பரம்

வி.சங்கர், நிதி ஆலோசகர்

“மைனர் வயதுடைய மகன் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி கணக்கினைத் தொடங்க செக் புக் இருக்க வேண்டிய அவசியமில்லை. மகனுடைய எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு நீங்களே உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்தலாம்.”

வி.சங்கர், தி.ரா.அருள்ராஜன்
வி.சங்கர், தி.ரா.அருள்ராஜன்

நான் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது புரோக்கிங் நிறுவனம், கடந்த சில மாதங்களாக எனது பரிவர்த்தனை குறித்து எந்த விவரமும் தரவில்லை. அதுகுறித்துக் கேட்டாலும் உரிய பதில் கிடைக்க வில்லை. அந்த நிறுவனத்தின்மீது எங்கே புகார் கொடுப்பது?

ரங்கராஜன், கோயம்புத்தூர்

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை & கமாடிட்டி நிபுணர்

“கமாடிட்டி வர்த்தகத்தில் உங்களின் தினசரி பரிவர்த்தனைக்கான சான்றாக, `கான்ட்ராக்ட் நோட்’ எனப்படும் நிரூபணச் சீட்டு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் வர்த்தகம் செய்த 24 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். மேலும், உங்கள் வர்த்தக விவரம், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான கணக்குவழக்குகளை நீங்களே பார்க்க உங்களுக்கு வழிசெய்து தந்திருப்பார்கள். இந்தத் தகவல்களைப் பார்க்க யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்திருப்பார்கள். அதன்மூலமும் முழு விவரங்களைப் பார்க்கலாம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு?

நீங்கள் சப் புரோக்கர்மூலம் வியாபாரம் செய்திருந்தால், அவர்களைத் தாண்டி, யார் மெயின் புரோக்கரோ அவர்களைத் தொடர்பு கொண்டாலும் நீங்கள் வர்த்தகம் செய்தது குறித்த முழு விவரத்தையும் கொடுப்பார்கள்.

கடைசியாக நீங்கள், கமாடிட்டி வியாபாரம் எந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் செய்தீர்களோ, அந்த எக்ஸ்சேஞ்சின் வெப்சைட்டிலேயே உங்கள் புகாரைக் கொடுக்கும் வசதியுள்ளது. அதைத் தாண்டி செபி அமைப்பில் புகார் கொடுக்க http://www.scores.gov.in என்ற வெப்சைட்டை உபயோகிக்கலாம்.”

எனது 20 வருட மணிபேக் பாலிசியில் முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் பிரீமியம் கட்டியுள்ளேன். அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக எதுவும் கட்டவில்லை. பாலிசியை சரண்டர் செய்தால் பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்குமா?

வேல்முருகன், திண்டுக்கல்

எஸ்.ஸ்ரீதரன், வெல்த் லேடர்

“தாங்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிரீமியம் செலுத்தியுள்ளதால் இந்த பாலிசி செயல்பாட்டில் இல்லாத ஒரு லாப்ஸ்டு பாலிசியாகியிருக்கும். இந்த பாலிசியை நீங்கள் தற்போது சரண்டர் செய்யும்பட்சத்தில், கட்டிய பிரீமியத்தில் 40 - 50 சதவிகித தொகையே திரும்பக் கிடைக்கும்.

ஆனால், இந்த பாலிசியை ஒரு பெய்டுஅப் பாலிசியாக மாற்றும் பட்சத்தில், பாலிசி முதிர்வடையும் போது, பாலிசியில் கட்டிய தொகைக்கான விகிதத்துக்குத் தகுந்தாற்போல் முதிர்வுத்தொகை கிடைக்கும்.”

எஸ்.ஸ்ரீதரன், வி.எஸ்.சரண்சுந்தர்
எஸ்.ஸ்ரீதரன், வி.எஸ்.சரண்சுந்தர்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்தில் எவ்வளவு தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்?

ஆனந்தன், சென்னை

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“60 வயதுக்குக் கீழே இருப்பவர் களுக்கு அவர்களது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு ரூ.25,000 வரை வரிச் சலுகை தரப்படும். 60 வயதைத் தாண்டியவர்களாக இருந்தால், பிரீமியத்துக்கான வரிச் சலுகை ரூ.50,000 வரை க்ளெய்ம் செய்யலாம்.

நீங்கள் உங்களின் பெற்றோருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால், அவர்களின் வயது 60 வயதுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூ.25,000 வரை வருமான வரிச் சலுகையும், பெற்றோர் 60 வயது கடந்தவர்களாக இருந்தால் ரூ.50,000 வரை வருமான வரிச் சலுகையும் உண்டு.

பெற்றோருக்கும் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, தனது பாலிசி மற்றும் பெற்றோருக்கான பாலிசி என இரண்டு பாலிசிகளையும் வருமான வரிச் சலுகைக்குக் காட்டலாம். இதன்படி, பாலிசிதாரரும் அவரின் பெற்றோரும் சீனியர் சிட்டிசன்களாக இருக்கும்பட்சத்தில், அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வரிச் சலுகை பெற வாய்ப்புள்ளது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்து வயதாகும் மகளுக்கு 24 வயதில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். திருமணச் செலவாக ரூ.50 லட்சம் வருமானம் ஈட்டுவதற்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஆலோசனை கூறவும்.

கிருஷ்ணராஜ், கும்பகோணம்

கனகா ஆசை, நிதி ஆலோசகர்

“உங்கள் மகளின் திருமணச் செலவுக்காக 14 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் வருமானம் கிடைக்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள். அதற்கு மொத்தம் 12,000 ரூபாயைத் தலா ரூ.4,000 என்ற விகிதத்தில் மூன்று ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம். அந்த முதலீடு 12% கூட்டு வட்டி விகிதத்தில் வளர்ச்சியடைந்தால், தோராயமாக ரூ.52,32,000 கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் மற்றும் எல்&டி மிட்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.’’

கனகா ஆசை, வி.எஸ்.சுரேஷ்
கனகா ஆசை, வி.எஸ்.சுரேஷ்

விபத்தை ஏற்படுத்தும் வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் இல்லாதபட்சத்தில், விபத்தினால் பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது வாகனத்துக்கோ இழப்பீடு எப்படிக் கிடைக்கும்?

மகேஷ்குமார், ராஜபாளையம்

வி.எஸ். சுரேஷ், வழக்கறிஞர்

“தமிழ்நாடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்ற விதிகள் 1989 அரசாணையின்படி, விபத்தை ஏற்படுத்தியவர்தான் அதற்கான தொகையைச் செலுத்தவேண்டும் என்றிருந்தது. தற்போது அதில் சில திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்துக்கான இன்ஷூரன்ஸ் சான்றை, விபத்து நடந்த மூன்று மாத காலத்துக்குள் இழப்பீடு அளிக்காத பட்சத்தில், அந்த வாகனத்தை 15 நாள்களுக்குள் ஏலத்தில் விட்டு கிடைக்கும் தொகையிலிருந்து நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.”

நிதி ஆலோசகரின் ஆலோசனைப்படி நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். நிதி ஆலோசகரின் உதவியில்லாமலேயே அவசரத் தேவைக்காக ஒரு ஃபண்டின் கணக்கை முடித்து பணம் எடுக்க முடியுமா?

வினோத்குமார், சென்னை

எஸ்.ராஜசேகரன், நிதி ஆலோகர்

“நிதி ஆலோசகர் என்பவர் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சிறப்பாகச் செய்வதற்கும், அதைத் தொடர்வதற்குமான ஆலோசகர்.

தவிர்க்க முடியாத காரணத்துக்காக கணக்கை முடித்துக்கொள்வதற்கும் அவரால் உதவ முடியும். அவர் உதவியில்லாமலும் நேரடியாக அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தையே அணுகி விண்ணப்பித்து, கணக்கை முடித்து பணத்தைப் பெறலாம். அல்லது உங்களுடைய செல்பேசி எண் அவர்களிடம் பதிவு செய்யப் பட்டிருந்தால் உங்கள் செல்பேசி யிலிருந்தே அவர்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு ஒரு ஓ.டி.பி எண் வரும். அதைக் குறிப்பிட்டுச் சொன்னால் உங்களுடைய கணக்கை முடித்து தொகையைப் பெறலாம். ஆன்லைனிலும் பெறும் வசதியுள்ளது.”

எஸ்.ராஜசேகரன், பி.மனோகரன்
எஸ்.ராஜசேகரன், பி.மனோகரன்

ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸில் எனது பெற்றோர், மாமனார், மாமியார் உள்பட பத்து பேருக்கு ஒரே பாலிசியாக எடுக்க முடியுமா?

கார்வேந்தன், மதுரை

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘உங்களுக்கும், உங்களின் மனைவி, உங்கள் பெற்றோர் மற்றும் உங்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி கவராகும். மாமனார், மாமியாரைச் சேர்க்க முடியாது. உங்கள் மனைவி ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கும்பட்சத்தில், அவரின் பெற்றோரை அதில் சேர்க்க முடியும்.’’

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு