நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம்... எந்த முறையில் செலுத்துவது லாபம்?

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இந்த உலகில் இல்லாதபோது குடும்ப உறுப் பினர்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பு அளிப்பது டேர்ம் இன்ஷூரன்ஸ். டேர்ம் பிளானில் சிறப்பான அம்சம், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைப்பதே. உதாரணமாக, 30 வயதுள்ள ஒருவர் ரூ.1 கோடிக்கு முழுமையாக ஆயுள் காப்பீடு கவரேஜ் அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் எனில், ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.12,000 – ரூ.15,000 பிரீமியம் செலுத்தினால் போதும். இதுவே ரூ.1 கோடிக்கு காப்பீடு மற்றும் சேமிப்பு கலந்த எண்டோவ் மென்ட் பிளான் எடுத்தால், ஓர் ஆண்டுக்கு பிரீமியம் மட்டுமே சுமார் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

டேர்ம் இன்ஷூரன்ஸ் தவிர்த்த இதர ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் ஆண்டுக் கணக்கில் பிரீமியம் கட்டவில்லை என்றாலும், அபராதம் மற்றும் பாக்கியுள்ள பிரீமியத்தைக் கட்டிவிட்டு பாலிசியைத் தொடரலாம். ஆனால், டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசியில் அப்படி செய்ய முடியாது. இந்த பாலிசிக்கான கெடு தேதிக்குள் பிரீமியம் கட்டினால் மட்டுமே பாலிசி செயல் பாட்டில் இருக்கும். பாலிசி காலாவதியாகிவிட்டால் புதிதாகத்தான் எடுக்க வேண்டி வரும். அப்போது மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டி வரும். வயது அதிகரிப்பு மற்றும் நோய் பாதிப்பு காரணமாக அதிக பிரீமியம் நிர்ணயம் செய்யப் படும். எனவே, டேர்ம் பிளானுக்கான பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்தி விடுவது அவசியம். டேர்ம் பிளானைப் பொறுத்தவரை, மூன்று முறைகளில் (Options) ஏதாவது ஒரு முறையில் பிரீமியம் செலுத்த முடியும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம்... எந்த முறையில் செலுத்துவது லாபம்?

ரெகுலர் பிரீமியம் முறை...

டேர்ம் பிளான் பிரீமி யத்தை மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை கட்டு வது வழக்கம். இதை ரெகுலர் பிரீமியம் முறை என்பார்கள். இந்த முறை பலருக்கும் வசதி யானதாக இருக்கும். காரணம், குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய தொகையைக் கட்டும் வாய்ப்பு இது.

குறித்த காலத்தில் பிரீமியத் தைச் செலுத்தாவிட்டால், டேர்ம் பாலிசி காலாவதி ஆகிவிடும். எனவே, மாதம் ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டு வதற்குப் பதில் அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது. மேலும், இந்த பிரீமியத்தை வங்கிக் கணக்கிலிருந்து தானியங்கி முறையில் கட்டுவதுபோல் ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. மேலும், பிரீமியம் எடுக்கப் படும் காலத்தில் வங்கிக் கணக்கில் போதிய பணத்தை இருப்பு வைத்திருப்பது முக்கியம்.

குறிப்பிட்ட காலத்துக்கு பிரீமியம் கட்டும் முறை...

இந்த முறையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் கட்டினால் போதும், பாலிசி அதன் முழுக் காலத்துக்கும் செயல்பாட்டில் இருக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் தன் 25-ம் வயதில் 55 வயது வரைக்கும் 30 ஆண்டுகளுக்கு பாலிசி எடுத்திருக்கும் பட்சத்தில் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் கட்டும் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த ஆப்ஷனைத் தேர்வு செய்யும்பட்சத்தில் பாலிசி காலம் 30 ஆண்டுகளுக்கும் பாலிசி செயல்பாட்டில் இருக்கும். அதிக தொகையை பிரீமியமாகக் கட்ட வாய்ப்பு வசதி இருக்கும்பட்சத்தில் இந்த ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம். மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கொரு தடவை எனக் கட்டப்படும் பிரீமியத் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டால், இப்படி 10 அல்லது 15 ஆண்டுகள் வரை கட்டப்படும் பிரீமியத் தொகையானது குறைவாகவே இருக்கும்.

ஒற்றை பிரீமியம் முறை...

ஒரே ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தினால் பாலிசி அதன் காலம் முழுக்க செயல்பாட்டில் இருக்கும் ஆப்ஷன் இது. இதுவும் ஒரு நல்ல முறைதான். இங்கேயும் பணவசதி இருக்கும்பட்சத்தில் இந்த முறையில் பிரீமியம் செலுத்துவது நல்லது. மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கொரு தடவை எனக் கட்டப்படும் பிரீமியத் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டால், இப்படி ஒரே ஒருமுறை மட்டும் கட்டப்படும் பிரீமியத் தொகையானது குறைவாகவே இருக்கும். டேர்ம் பிளானைப் பொறுத்த வரை, ஒற்றை பிரீமியம், குறிப்பிட்ட கால பிரீமியம், ஆண்டு பிரீமியம் ஆகியவற்றில் உங்களுக்கு வசதி யானதைத் தேர்வு செய்வது நல்லது.

பிரீமியம் கட்டும் வழிமுறைகள்...

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தைப் பல்வேறு முறைகளில் கட்டலாம். வங்கிச் சேமிப்பு கணக்கு மூலம் இ.சி.எஸ் முறை, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு, காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம், காப்பீட்டு நிறுவன கிளை அலுவலகம் ஆகியவற்றின் மூலம் பிரீமியம் கட்ட முடியும்.