
இந்திய அரசின் எல்.ஐ.சி நிறுவனமும் காப்பீடு தொகையை இன்னும் உயர்த்தவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எல்.ஐ.சியும் காப்பீடு தொகையை உயர்த்தக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது ஆயுள் காப்பீடுகளின் (term insurance) ப்ரீமியம் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இப்போது கொரோனா காரணமாகக் காப்பீடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல், ஜூலை மாதங்களுக்கு இடையேதான் ப்ரீமியம் தொகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே உலகளாவிய மறுகாப்பீட்டாளர்களின் விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டதே. இதோடு உலகம் முழுவதும் மரணத்துக்கான இழப்பீடு கோரிக்கைகள் அதிகரித்துள்ளதால், ப்ரீமியம் தொகையும் அதிகரித்துள்ளது எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்சியலின் வருடாந்தர ப்ரீமியம் தொகையானது 37 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ₹14,697 ஆக இருந்த ப்ரீமியம் தொகை ஜூலையில் ₹ 20,208 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் டாடா ஏ.ஐ.ஏ லைஃப் ப்ரீமியம் தொகையும் 32 சதவிகித உயர்வைச் சந்தித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் ₹ 10,030 ஆக இருந்தது. மே மாதத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் ₹ 13,206 ஆக இது உயர்ந்துள்ளது.
பஜாஜ் அலையன்ஸ் லைஃபின் வருடாந்தர ப்ரீமியமும் 36 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் ₹8,927 ஆக இருந்த ப்ரீமியம் தொகை, தற்போது ₹ 12,133 ஆக உயர்ந்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு ப்ரீமியமும் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் பிஎன்பி, கனரா, ஹெச்எஸ்பிசி, ஓபிசி லைஃப் மற்றும் மாக்ஸ் லைஃப் ஆகியவை இன்னமும் தங்களது ப்ரீமியத்தில் அதிகளவில் மாற்றம் கொண்டுவரவில்லை. இந்த ப்ரீமியம் தொகை மாற்றமெல்லாம் புதிதாகக் காப்பீடு எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்னரே காப்பீடு எடுத்தவர்களுக்கு இதனால் ப்ரீமியம் தொகையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்திய அரசின் எல்ஐசி நிறுவனமும் காப்பீடு தொகையை இன்னும் உயர்த்தவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எல்ஐசியும் காப்பீடு தொகையை உயர்த்தக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் ராஜ் குமார் கூறுகையில், "எல்ஐசியின் ப்ரீமியம் தொகையும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இப்போது வரை எங்களுடைய காப்பீட்டாளரின் விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் வணிகத்தின் நிலையைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் இது மாறலாம்" என்றார்.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பட்டய நிதி திட்ட ஆலோசகரான சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம்.
இவர் கூறுகையில், "தற்போது கொரோனாவால் ப்ரீமிய தொகைகள் உயர்த்தப்படவில்லை. காப்பீடுகளைப் பொறுத்தவரை அதிக தொகையிலான காப்பீடுகளைக் காப்பீடு நிறுவனங்கள் மறுகாப்பீட்டாளர்களுடன் (Reinsurance) பகிர்ந்து கொள்வர். இவ்வாறு ஆபத்தை அவர்களுக்குள் பிரித்துக் கொள்வர். இப்போது நிறைய மரண இழப்பீடு கோரிக்கை வருவதால் ப்ரீமியத்தை அவர்கள் உயர்த்திவிட்டார்கள். இதனால்தான் உலகம் முழுவதும் ஆயுள் காப்பீடுகளின் ப்ரீமயமும் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இது சற்றே உயர்த்தப்படலாம்.
இந்தியாவில் பொதுவாக 40 முதல் 50 சதவிகிதம் வரை 60 வயதுக்கு மேல் உள்ளோர் இறந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஆயுள் காப்பீடுகளை எடுத்திருக்க மாட்டார்கள். ஒருவேளை காப்பீடு எடுத்திருந்தாலும் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மட்டுமே எடுத்திருப்பார்கள். இதனால் ப்ரீமயம் தொகை உயர்த்தப்படாது. இவ்வாறு ப்ரீமியம் எடுப்பவர்களுக்கும் ப்ரீமியம் தொகை உயர்த்தப்பட்டால் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்காது. அதிகமான தொகைக்கு ப்ரீமியம் எடுப்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவுதான். உலகம் முழுவதும் பல நாடுகளில் இறப்புகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து காணப்படுகிறது. இதனால்தான் மறுகாப்பீட்டாளர்கள் தொகையை உயர்த்தி உள்ளார்கள். இவ்வாறு பிற காப்பீடுகளுக்குமான ப்ரீமியம் தொகை உயர்த்தப்படாது. இதனால் காப்பீடு எடுப்பவர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை" என்றார்.