Published:Updated:

மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..! - ஏன் முக்கியம்..?

மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்தியா முழுவதும் வேகமாகக் கொண்டு செல்வதற்கு பிரத்யேக மைக்ரோ இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைத் தொடங்க வேண்டும்!

பிரீமியம் ஸ்டோரி
ந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்று வேளை சத்தான ஆகாரம், குடியிருக்க ஓரளவு வசதியான வீடுகூட இல்லாமல் பல கோடிப் பேரின் வாழ்க்கை, பரிதாபகரமானது.

மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..! - ஏன் முக்கியம்..?

கிராமங்களின் நிலைமை!

கிராமங்களிலுள்ள மக்கள் விவசாயம், மீன்பிடித் தொழில், கைத்தறி, குடிசைத் தொழில் சார்ந்தே வாழ்கிறார்கள். அவர்களுக்கு தினமும் வேலை கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மழை, வெள்ளம், புயல், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அவர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்களையெல்லாம் `பணக்காரர்கள்’ என்று சொல்லிவிட முடியாது. கிராமங்களைப்போலவே நகரங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள். நோய், விபத்து மற்றும் சொத்துகளில் சேதம் போன்ற அபாயங்கள் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன.

குறைவான காப்பீட்டுத் தொகை!

ஒருவேளை மனிதனின் உயிர், உடல்நலம், சொத்துகளில் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் நிதி இழப்பு உருவாகும். அந்த நிதி இழப்பை ஈடுகட்ட உதவும் ஒரே சாதனம் இன்ஷூரன்ஸ் மட்டுமே. இன்ஷூரன்ஸ் பாதுகாப்பைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் பிரீமியம் தொகையை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகையைப் பொருளாதாரரீதியாகச் சிறப்பாக இருப்பவர்கள் செலுத்திவிடுகிறார்கள். அதே நேரத்தில், வசதியானவர்கள் எல்லோரும் போதுமான தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்துபோனால், அதற்குப் பிறகும் அதே வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இன்ஷூரன்ஸின் தத்துவம். இந்தியா ஸ்பெண்ட் (India Spend) நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, நிதி இழப்பு ஏற்பட்டால் சராசரி இந்தியர் ஒருவர் தன் குடும்பத்துக்கு எவ்வளவு நிதிப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமோ அதில் 8 சதவிகிதத்துக்கு மட்டுமே காப்பீடு செய்கிறார்.

ஏழை மக்களுக்குச் சாதாரணமான இன்ஷூரன்ஸ் பாலிசிக்குரிய பிரீமியம் தொகையைச் செலுத்துவதற்கு வசதியில்லை. அதனால் அவர்கள் அத்தகைய பாலிசியை எடுக்க முன்வருவதில்லை. அவர்களின் குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகை (கவரேஜ்) மற்றும் பிரீமியம் மிகக் குறைவு. மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் இந்தியாவில் வளர்ச்சி அடைவதற்கு ஏஜென்ட்டுகள், சுய உதவிக் குழுக்கள், சமூக நல்லிணக்க தன்னார்வ நிறுவனங்களின் கடுமையான உழைப்பு மற்றும் விற்பனை உத்தி ஆகியவையே காரணம்.

மைக்ரோ இன்ஷூரன்ஸ்
மைக்ரோ இன்ஷூரன்ஸ்

பல்வேறு மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகள்

மிகக் குறைவான பிரீமியம் மற்றும் குறைவான காப்பீட்டு தொகையுடன் இறப்பு க்ளெய்ம் மட்டும் கிடைக்கும் திட்டம், மேலும் இறப்பு க்ளெய்ம் உடன் முதிர்வுத் தொகை சேர்த்துக் கிடைக்கும் திட்டங்களை லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் கொண்டு வந்திருக்கின்றன. பாலிசிதாரர் விரும்பினால் முக்கிய பாலிசியுடன் ஆக்ஸிடென்ட் பெனிஃபிட் ரைடரை சேர்த்து வாங்கலாம். காப்பீட்டுத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது, காப்பீட்டுக் காலம் ஐந்து முதல் 15 வருடம் வரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கென்று சிறப்பு மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகளைக் கொண்டு வந்திருக்கின்றன. பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் ஏற்படும் செலவு, நோய் கண்டறிய ஆகும் செலவு, மருத்துவமனையில் அனுமதிக்கும் பொருட்டு ஆகும் போக்குவரத்துச் செலவுகளுக்கு க்ளெய்ம் பெறலாம். மேலும், பாலிசிதாரரின் பயிர், வீட்டு வளர்ப்பு பிராணிகள், வீடு தீப்பற்றி எரிதல், விவசாய பம்ப் போன்ற விலைமதிப்புள்ள பொருள்கள் ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்பட்டால் க்ளெய்ம் பெறலாம். பாலிசிதாரரின் வீட்டில் திருட்டு, அவருக்கு விபத்து போன்றவற்றால் ஏற்படும் நிதி இழப்புக்கும் க்ளெய்ம் பெறலாம்.

மைக்ரோ இன்ஷூரன்ஸ்
மைக்ரோ இன்ஷூரன்ஸ்

தற்போது இருக்கும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் விற்பனை வேகம் தேவையைவிடக் குறைவாக இருப்பதாக இன்ஷூரன்ஸ் துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதைக் கருத்தில்கொண்டு ஐ.ஆர்.டி.ஏ.ஐ 10 நபர் குழு ஒன்றை அமைத்தது. பல்வேறு ஆய்வுக்குப் பிறகு, அந்தக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அதன்படி, `மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்தியா முழுவதும் வேகமாகக் கொண்டு செல்வதற்கு பிரத்யேக மைக்ரோ இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைத் தொடங்க வேண்டும்’ என்று அறிக்கை சொல்கிறது.

மற்றுமொரு வல்லுநர் குழு, `பிரீமியம் தொகையை தினமும் அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை அனுமதிக்கலாம்’ என்று சொல்கிறது. `பெண் குழந்தைகளின் திருமணம், குழந்தைகளின் உயர்கல்வி, ஓய்வுக்காலம் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக்கொண்டு மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் பரிந்துரை செய்திருக்கிறது.

இது போன்ற இன்ஷூரன்ஸ் திட்டங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கொண்டு வந்தாலும், இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மனதில் ஏற்பட வேண்டும். மாற்றத்துக்கு முதல்படி அதுதான்!

புதிய மாற்றங்கள்!

காலம் மற்றும் தேவைக்கேற்ப மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டத்தில் பல புதுமைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஓலா கேப்ஸ், போக்குவரத்துத்துறையில் கவனிக்கத்தக்க முன்னோடியான ஒரு கம்பெனி. கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களை மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறது. ஓலா நிறுவனம் தன் காரில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கூடுதல் சேவை செய்யும் பொருட்டு இன் ட்ரிப் (In Trip) மைக்ரோ இன்ஷூரன்ஸ் கொடுக்கிறது. இதன் மூலம் பயணியின் பை (Bag) தொலைந்துபோதல், ஆக்ஸிடென்ட்டல் டெத், ஆக்ஸிடென்ட்டல் மருத்துவச் செலவு, லேப்டாப் தவறவிடுதல் போன்ற அசெளகர்யங்கள், அபாயங்களுக்கு க்ளெய்ம் பெறலாம். ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு கோடி இன் ட்ரிப் மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்கிறது. இந்தியாவில் எந்த நிறுவனமும் யோசிக்காத இந்த விஷயத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து மிகப்பெரிய சாதனையை ஓலா செய்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு