நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கப் போகிறீர்களா? - ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் அவசியம்!

ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ்

பாஸ்போர்ட் தொலைந்துபோனால், மாணவர் புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஆகும் செலவுகளை க்ளெய்ம் செய்யலாம்!

ம் மக்களில் பலர், தங்கள் மகனோ, மகளோ வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்குத் தேவையான கல்விக் கடன் கிடைப்பதால், சில வசதியுள்ள பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளை வெளிநாடுகளிலுள்ள புகழ்பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறார்கள்.

அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கை..!

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. யுனெஸ்கோ நிறுவனத்தின் புள்ளியியல்துறை தரும் புள்ளிவிவரங்கள்படி பார்த்தால் கடந்த 2000-ம் ஆண்டில் 66,713 மாணவர்களும், 2016-ம் ஆண்டு 3,01,416 மாணவர்களும் வெளிநாடு சென்று கல்வி பயின்றனர். 2019-ம் ஆண்டு 5,50,000 இந்திய மாணவர்கள் உலகின் 86 நாடுகளுக்குச் சென்று மேற்படிப்பு படித்தனர்.

வெளிநாட்டில் மேற்படிப்பு  படிக்கப் போகிறீர்களா? - ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் அவசியம்!

எந்தெந்த நாடுகள்?

பெருவாரியான இந்திய மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளைத் தேர்வுசெய்கிறார்கள். இந்திய மாணவர்கள் கனடா சென்று பட்ட மேற்படிப்பு படித்த பிறகு அவர்களுக்கு, அங்கேயே வேலை கிடைத்தால், அங்கேயே தங்கி பணிபுரிவதற்கும் கனடா அரசு அனுமதியளிக்கிறது. அதுபோல, ஆஸ்திரேலியாவில் பட்ட மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு நிரந்தரமாகத் தங்கி அங்கு வேலை செய்யும் சூழ்நிலை செய்து தரப்படுகிறது. இங்கிலாந்தில் ஒரு வருடத்திலேயே பட்ட மேற்படிப்பு முடித்த பிறகு வேலை கிடைத்தால், அதற்கு அரசின் அனுமதி கிடைக்கிறது.

ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ்..!

வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் கல்விச் சேர்க்கைக் கட்டணம், பயணக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் போன்றவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கே பல லட்ச ரூபாய் செலவாகிவிடும் நிலையில், முக்கியமான ஒரு விஷயத்தைச் செய்ய பலரும் தவறிவிடுகிறார்கள். அது, வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் அனைவரும் எடுக்க வேண்டிய ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ்.

டிராவல் இன்ஷூரன்ஸ்
டிராவல் இன்ஷூரன்ஸ்

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வெளிநாட்டில் மேற்படிப்பு படித்துவந்தார். ஒருநாள் மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமான சாலை ஒன்றைக் கடந்து செல்லும்போது, வேகமாக வந்த கார் ஒன்று திடீரென அவர்மீது மோதியது. அந்த மாணவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்த தகவல் அவரின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிலேயே அதிநவீன மருத்துவச் சிகிச்சைக்கான செலவைச் செய்ய மாணவரின் பெற்றோரிடம் பணமில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார். அந்த மாணவர் இந்தியாவைவிட்டுக் கிளம்புவதற்கு முன்னர் ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், அவருக்கு இந்த நிலை நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

டிராவல் இன்ஷூரன்ஸ்
டிராவல் இன்ஷூரன்ஸ்

வெளிநாட்டில் கல்வி பயிலும் இந்திய மாணவர் இந்த பாலிசியை எடுத்திருந்தால், வெளிநாட்டில் படிக்கும்போது ஏற்படும் திடீர் விபத்துகள் மூலம் நிதி இழப்பு ஏற்பட்டால், அதை ஈடுகட்ட நிச்சயம் இது உதவும். இந்்தியாவிலிருந்து கிளம்பும்போது உடை மற்றும் அவசியமான பொருள்களை எடுத்துச் செல்வதுபோல, ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசியைக் கொண்டுசெல்வது அவசியம். வெளிநாட்டுக்குச் சென்ற பிறகு அங்குள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இத்தகைய பாலிசியை வாங்குவதைவிட, வெளிநாடு கிளம்புவதற்கு முன்னர் இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து பாலிசி எடுத்தால் பிரீமியம் தொகை குறைவு.

எந்த மாதிரிச் சிக்கல்களுக்கு கவரேஜ் கிடைக்கும்..?

  • வெளிநாட்டில் நோய் ஏற்பட்டு மருத்துவ ஆலோசனைக்கு ஆகும் செலவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவரேஜ் உண்டு.

டிராவல் இன்ஷூரன்ஸ்
டிராவல் இன்ஷூரன்ஸ்
  • இன்ஷூர் செய்யப்பட்ட மாணவரின் படிப்பு தவிர்க்க முடியாத மருத்துவ காரணத்தால் நிரந்தரமாகத் தடைப்பட்டால், அந்த மாணவர் ஏற்கெனவே செலுத்தியிருக்கும் கல்விக் கட்டணத்துக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் (க்ளெய்ம்) கிடைக்கும்.

  • மாணவரின் தாய் / தந்தை பாலிசி காலத்துக்குள் இறந்துபோனால், அந்த மாணவர் அவர் படிக்கும் கல்லூரிக்கு மீதம் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனம் தரும் க்ளெய்ம் மூலம் எளிதாகக் கல்லூரிக்குச் செலுத்திவிடலாம். இதனால் மாணவரின் படிப்பு பாதிக்கப்படாது.

  • தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் குற்றத்தை மாணவர் புரிந்தால், அவரை அங்குள்ள காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அவரை வெளியே எடுக்கும் பொருட்டு ஆகும் ஜாமீன் தொகைக்கும் க்ளெய்ம் உண்டு.

  • மாணவர் எடுத்துச் செல்லும் டிராவல் பேக் தொலைந்தாலோ, தாமதமாகக் கிடைத்தாலோ க்ளெய்ம் கோரலாம்.

  • பாஸ்போர்ட் தொலைந்துபோனால், மாணவர் புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஆகும் செலவுகளை க்ளெய்ம் செய்யலாம்.

  • மாணவரின் உடல்நலம் மோசமாகி மருத்துவமனையில் ஏழு நாள்களுக்குமேல் அனுமதிக்கப்படுகிறாரெனில், மாணவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தியாவிலிருந்து மாணவர் இருக்கும் நாட்டுக்குச் சென்று அவரை உடனிருந்து கவனிக்க ஆகும் பயணச் செலவுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் உண்டு. துரதிர்ஷ்டவசமாக மாணவர் இறந்துபோனால், அவரின் உடலை இந்தியாவுக்கு எடுத்துவர ஏற்படும் செலவுகளை க்ளெய்ம் செய்யலாம்.

தற்போதைய சூழ்நிலையில்...

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவைப்போலவே வெளிநாடுகளிலும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறுவதில் சிக்கல் இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறியவுடன் வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது கல்லூரிப் படிப்பை படித்துக்கொண்டிருப்பவர்களும் இந்த பாலிசியை வாங்கலாம். மாணவர்கள் இந்த பாலிசியை வாங்க முற்படும்போது அந்த நேரத்தில் பாலிசியின் நிபந்தனைகள் கவரேஜ் மற்றும் விலக்குகள் தங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா கவனத்தில்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்காக எவ்வளவோ செலவு செய்தாலும், ஸ்டூடன்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குச் செலுத்தும் பிரீமியம் தொகையைச் செலவாகக் கருதாமல், நிதிப்பாதுகாப்பு கொடுக்கும் கருவியாக நினைத்துச் செயல்பட வேண்டும்!