Published:Updated:

அலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்!

ஜேக் மாவின் பெயர், தேசத்தின் சீர்திருத்தம் மற்றும் சந்தை திறப்புக்கு உதவிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்!
அலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்!

சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான 'அலிபாபா' குழுமத்தின் தலைவர் ஜேக் மா, ஒரு கம்யூனிஸ் கட்சி உறுப்பினர் என அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவைப் போல சீனாவிலும் பல்வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் முதன்மையான நிறுவனமாக ஜேக் மாவின் 'அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட்' நிறுவனம்  திகழ்கிறது.  இதன் தலைவரும் நிறுவனருமான ஜேக் மா, சீனாவின் மிகப் பெரும் பணக்காரராகத் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 35.8 பில்லியன் டாலர் என அண்மையில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், மிகப் பெரிய நிறுவனத்தின் உரிமையாளராகவும், மிகப் பெரிய பணக்காரராகவும் இருப்பதால்  மா, அரசியல் கட்சி எதிலும் தொடர்பில்லாதவராக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், அதைப் பொய்யாகும் வகையில், அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று சீன அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது. 

தேசத்தின் சீர்திருத்தம் மற்றும் சந்தை திறப்புக்கு உதவிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலிலேயே ஜேக் மா-வின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

அதே சமயம், மா ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்  என்பது வெளியில் தெரியும் வகையில் அவரது பெயரை அந்தப் பத்திரிகை ஏன் தற்போது வெளியிட்டது என்பதுகுறித்து தெளிவாக எதுவும் தெரியவரவில்லை என்றாலும், கட்சி வகுத்துள்ள எல்லைகளையும் தாண்டி மிக அதிக அளவில் தனியார் தொழில் நிறுவனங்களை தொழில்நுட்பத் துறையில் வளர்க்க சீனா அதிக ஆர்வம் கொண்டிருப்பதை உலகுக்குப் பறைசாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

சீனாவின் மிகப் பெரும் தொழிலதிபராகக் கருதப்படும் மா, அலிபாபா குழுமத் தலைவர் பதவியிலிருந்து 2019-ம் ஆண்டு ராஜினாமா செய்யப்போவதாக, கடந்த செப்டம்பர் மாதம்  அறிவித்திருந்தார். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பலருக்கு  ஆலோசகராகச் செயல்பட்டதோடு, அமெரிக்காவிலும் பலரிடம் மிகப் பெரிய லட்சியங்களை உருவாக்க காரணமாகத் திகழ்ந்தவர் அவர். 

அலிபாபா குழுமத்தை 390 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க நிறுவனமாக உருவாக்கியுள்ள ஜேக்,  அரசியல் கட்சியில் இடம்பெற்றிருப்பது சீனாவில் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சியில் இடம்பெற்றுள்ளது குறித்து ஜேக் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதே சமயம், தமது அரசியல் தொடர்பு, நிறுவனத்தின் செயல்பாடுகளில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமது செய்தித் தொடர்பாளர் மூலம் அவர் கூறியுள்ளார். 

" இந்த டிஜிட்டல் யுகத்தில், உலகின் எந்த ஒரு மூலையில் இருப்பவர்களும் எங்களுடன் தொழில் செய்வதை நாங்கள் எளிதாக்கி இருக்கிறோம். அதே சமயம், நாங்கள் செயல்படும் நாடுகளில் உள்ள அனைத்து சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அப்படியே பின்பற்றுகிறோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.